Published:Updated:

`எங்களுக்கு சீட் இல்லையென்றால் அவ்வளவுதான்!' - அ.தி.மு.க தலைமையை மிரட்டும் சீனியர்கள்

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி.க்கு போட்டியிடுபவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.வில் யார், யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற ஆலோசனை நடந்துவருகிறது. சீட் கேட்டு தலைமைக்கு சீனியர்கள் கடும் நெருக்கடி கொடுத்துவருகின்றனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. சார்பில் தொமுச சண்முகமும், வழக்கறிஞர் வில்சனும் போட்டியிடுவார்கள் என்று அண்ணா அறிவாலயம் அறிவித்துள்ளது. தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் மூன்று ராஜ்ய சபா சீட்களில் போட்டியிடுவது யார் என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணி ஒப்பந்தத்தின்படி பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள இரண்டு சீட்களை யாருக்குக் கொடுக்கலாம் என்ற ஆலோசனை கட்சித் தலைமையில் நீண்ட காலமாக நடந்துவருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு ஒரு சீட்டும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு ஒரு சீட்டும் என முடிவு எடுக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ராஜ்ய சபா எம்.பி சீட்களைப் பெற காயை நகர்த்திவருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான சேலம் அஸ்தப்பட்டி பகுதிச் செயலாளர் சரவணன், கடந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அவருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

அடுத்து கட்சியின் சீனியர்களான தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா. கே.பி.முனுசாமி ஆகியோரும் ராஜ்ய சபா எம்.பி.சீட் வேண்டும் எனக் கட்சி தலைமையிடம் வலியுறுத்திவருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான மைத்ரேயனும் மனோஜ்பாண்டியனும் ராஜ்ய சபா எம்.பி சீட்டுக்காக காயை நகர்த்திவருகின்றனர். இதற்கிடையில் சிறுபான்மையினருக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன், ஜெ.எம்.பஷீர் ஆகியோர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி தங்களுக்கு சீட் கேட்டுவருகின்றனர். இதனால் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்று கட்சித் தலைமை ஆலோசித்துவருகிறது. இந்தநிலையில், கட்சியின் சீனியரான ஒருவருக்கும் புதுமுக நபர் ஒருவருக்கும் சீட் கொடுக்க கட்சித் தலைமை முடிவு எடுத்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``அ.தி.மு.க. சார்பில் மூன்று பேர் ராஜ்ய சபா எம்.பி பதவிகளில் போட்டியிட உள்ளனர். அதில் ஒரு சீட் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படவுள்ளது. மீதமுள்ள இரண்டு சீட்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு பங்கிட முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டு தரப்பிலும் ஆதரவாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்துவருகின்றனர். பா.ஜ.க. மூலமாகவும் சிலர் பிரஷர் கொடுத்துவருகின்றனர். இதனால்தான் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவருகிறது.

கட்சியின் சீனியரான தம்பிதுரை, தனக்கு ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனால் அவருக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து கட்சித் தலைமை ஆலோசித்துவருகிறது. சிறுபான்மையினர் கோட்டாவில் அன்வர்ராஜாவும் தமிழ்மகன்உசேனும் ராஜ்ய சபா சீட் கேட்டுவருகின்றனர். இவர்களைவிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் எனக் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால், கண்டிப்பாக தன்னுடைய ஆதரவாளர் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இருப்பதோ இரண்டு சீட்கள், ஆனால் 10க்கும் மேற்பட்டவர்கள் ரேஸில் உள்ளனர். இதனால் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தசமயத்தில் அவர் அறிவிக்கும் பட்டியலை கட்சியினர் அப்படியே ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. இரட்டைத் தலைமையில் கட்சி செயல்படுவதால் முடிவு எடுப்பதில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியதுள்ளது. எப்படியும் இன்று அல்லது நாளைக்குள் அ.தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியல் வெளியிடப்படும்" என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், ``கட்சி இரண்டாகப் பிளவு ஏற்பட்ட சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி வந்தவர்களின் இன்றைய நிலைமை பரிதாபமாக உள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டை சிலர் எடுத்துவருகின்றனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து வருபவர்கள் ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற நேரிடையாகவே துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துவிட்டனர்.

மனு வாங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
மனு வாங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், கண்டிப்பாக அவரின் ஆதரவாளர் ஒருவருக்கு ராஜ்ய சபா சீட்டை பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். ஆனால் நடுநிலைமையோடு இருப்பவர்களுக்கு சீட் கொடுக்க முதல்வர் தரப்பு முடிவு செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லையெனில் மீண்டும் கட்சியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், ``கட்சியையும் ஆட்சியையும் தொடர முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்துச் சென்றுவருகிறார். இரட்டை தலைமைக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பிய சமயத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சமயோஜிதமாகச் செயல்பட்டனர். அதுபோலத்தான் ராஜ்ய சபா எம்.பி சீட்களை யாருக்குக் கொடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெரியகுளத்தைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதற்கு சம்மதித்தால் சேலத்தைச் சேர்ந்த சரவணனுக்கு கொடுக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசப்பட்டுள்ளது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இதனால் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ராஜ்ய சபா எம்.பி. சீட்களை சிறுபான்மையினருக்கும் புதியவர் ஒருவருக்கும் கொடுக்க காயை நகர்த்திவருகிறார். அதன் மூலம் கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கும்" என்றனர்.

எந்தத் தேர்தல் என்றாலும் வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவிப்பார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் புலம்புகின்றனர்.