ஆயிரம் விளக்கு தொகுதி: மகனா, மருமகனா.. யார் சிபாரிசை ஏற்பது? - குழப்பத்தில் ஸ்டாலின்!

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க-விலிருந்து இரண்டு பேர் முயன்றுவருவதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன.
சென்னையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்று ஆயிரம் விளக்கு. அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கும் தேனாம்பேட்டை பகுதி இந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் கீழ்தான் வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க-விலிருந்து இரண்டு பேர் முயன்றுவருவதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் தனி மருத்துவர் எழிலனும், இளைஞரணியில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஹசன் முகமது ஜின்னாவும்தான் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு முட்டி மோதுவதாகச் சொல்லப்படுகிறது.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர் நாகநாதன். இவரின் மகன்தான் மருத்துவர் எழிலன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்திருக்கிறார் எழிலன். இப்போது ஸ்டாலினுக்கும் இவர்தான் தனி மருத்துவர். சமூகநீதி, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது என இயங்கிவந்த எழிலன், மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடந்த தி.மு.க மாநில மாநாட்டில் மருத்துவம் சார்ந்து உரையாற்றினார்.

ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமாக இருந்தவர் ஹசன் முகம்மது ஜின்னா. 2011 சட்டமன்றத் தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பிறகு ஸ்டாலின் அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஜின்னா கழற்றிவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆன பிறகு, உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக ஜின்னா மாறிவிட்டார். தற்போது இளைஞரணியின் துணைச் செயலாளராக இருந்துவருகிறார் ஜின்னா. தி.மு.க ஐடி விங் வளர்ச்சியில் ஜின்னாவின் பங்கு முக்கியமானது என தி.மு.க-வினர் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு இருவரும் முட்டி மோதுவதாகச் சொல்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள் சிலர், ``ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலம் ஆயிரம் விளக்கு தொகுதிக்குக் காய்நகர்த்தியிருக்கிறார் மருத்துவர் எழிலன். ஆனால், உதயநிதி தரப்போ ஆயிரம் விளக்கு தொகுதியை ஜின்னாவுக்கு ஒதுக்க வேண்டுமெனக் கொடிபிடித்து நிற்கிறது. கடந்த பல வருடங்களாக தி.மு.க நடத்திய போராட்டங்களில் முன்னின்று செயலாற்றியவர் ஜின்னா. இதன் அடிப்படையில் ஜின்னாவுக்கு சீட் ஒதுக்க வேண்டுமென உதயநிதி தீவிரமாக முட்டி மோதுகிறார். ஒரே தொகுதிக்கு ஒரு பக்கம் மகனும், மறுபக்கம் மருமகனும் சிபாரிசு கேட்டு நிற்பதால் ஸ்டாலின் குழம்பிப்போயிருக்கிறார்'' என்றனர்.

ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியை மகன் சிபாரிசு செய்த ஜின்னாவுக்கு ஒதுக்குவாரா அல்லது மருமகன் சிபாரிசு செய்த எழிலனுக்கு ஒதுக்குவாரா என்ற கேள்வியோடு மத்திய சென்னை தி.மு.க நிர்வாகிகளும் குழப்பத்திலிருக்கின்றனர்.