ரவிச்சந்திரன் என்பவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இதற்கிடையில், ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக் கோரி நளினியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 7 பேரின் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஜாமீன் பெற்றுள்ள பேரறிவாளன் தொடர்பான கோப்புகள் மட்டும் அனுப்பப்பட்டதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன" என உயர் நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கிறார்.
