Published:Updated:

`நீண்ட உரைக்கு மன்னிக்கவும்; ஆனால்..." - பட்ஜெட் உரைக்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

``இந்தப் பெண் ஏன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருக்கிறாள் என நினைத்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால், குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயங்கள் என்னிடம் இருந்தன" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாடாளுமன்றத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் ஏற்கெனவே தொடங்கிய நிலையில், வருகிற பிப்வரி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது கட்டம், மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீண்ட உரையை நிகழ்த்தினார். இதற்காக, தற்போது மன்னிப்பும் கோரியுள்ளார்.

பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். சுமார் 2 மணி நேரத்தைக் கடந்து நிகழ்த்தப்பட்ட இந்த உரையின்போது, கடைசி இரண்டு பக்கங்கள் மீதமிருந்த நிலையில், உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் நிறுத்தினார். இந்த உரைக்கு, பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்ஜெட் குறித்தும் நீண்ட உரை தொடர்பாகவும் பொருளாதார நிபுணர்கள் உட்பட பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது சரியா?- நிபுணர்கள் பார்வையில் பட்ஜெட் 2020

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசுகையில், ``எனது நீண்ட உரையால் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். `இந்தப் பெண் ஏன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருக்கிறாள்' என நினைத்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால், குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயங்கள் என்னிடம் இருந்தன. இதை செயல்படுத்துவது எங்களுடைய கடமை. நாங்கள் அதைத்தான் செய்தோம். நிச்சயமாக, அவ்வளவு நேரம் தேவைப்பட்டது. தண்ணீர் குடித்தபிறகு மீதி உரையையும் படித்து முடித்திருப்பேன்" என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும், ``எந்தவொரு சாதனையையும் செய்ய நான் அவ்வளவு நேரம் பேசவில்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் கவனமாகக் குறிப்பிட வேண்டும். அதனாலேயே, உரை நீளமானது" என்று குறிப்பிட்டார்.

அவரின் நீண்ட உரை தொடர்பாகப் பேசிய ராகுல் காந்தி, ``நம்முடைய இளைஞர்களுக்கு வேலை வேண்டும். இதற்குப் பதிலாக, `நாடாளுமன்ற வரலாற்றில் நீண்ட உரையை வழங்கியிருக்கிறேன்' என்று கூறுவது எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து எந்தவிதமான எண்ணமும் இல்லை" என்று விமர்சித் துள்ளார்.

`பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை.. எங்கு முதலீடு செய்யப்படும்?!'- நிர்மலா சீதாராமன் விளக்கம்
அடுத்த கட்டுரைக்கு