Published:Updated:

`4 லட்சம் இலங்கைத் தமிழர்கள்; 2,838 பாகிஸ்தானியர்கள்!' - சி.ஏ.ஏ குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

``அகதிகள் முகாம்களுக்கு நீங்கள் சென்று பார்வையிட்டால், உங்கள் இதயம் கண்ணீர் சிந்தும். இலங்கை அகதிகளுக்கும் இதே நிலைதான்" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையில், சென்னை சிட்டிசன் மற்றும் நியூ இந்தியா ஆகிய குழுக்கள் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசியுள்ளார்.

அகதிகள்
அகதிகள்

நிகழ்ச்சியில் நிர்மலா சீதாரமன் பேசுகையில், ``குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமையை வழங்கும் சட்டம். குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் அல்ல. 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆஃப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 வங்காளதேசத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில், இஸ்லாமியர்களும் அடங்குவர். 1964 முதல் 2008 வரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

``நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியவில்லை!’’ - சுப்பிரமணியன் சுவாமி

2014 வரை பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 566-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மோடி அரசு ஆட்சி செய்த 2016 மற்றும் 2018 ஆண்டுகளுக்குள் சுமார் 1,595 பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் 391 ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

அகதிகள்
அகதிகள்

தொடர்ந்து பேசிய அவர், ``குடியுரிமை வழங்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக பிரபல இசையமைப்பாளரான அட்னன் சமி மற்றும் பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ஆகியோரைக் கூறலாம். கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கி வருகின்றனர். 50 முதல் 60 வருடங்களாக அவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். அகதிகள் முகாம்களுக்கு நீங்கள் சென்று பார்வையிட்டால், உங்கள் இதயம் கண்ணீர் சிந்தும். இலங்கை அகதிகளுக்கும் இதே நிலைதான்" என்று கூறியுள்ளார்.

`பொதுத்துறை வங்கிகளின் நிலை மோசமாக இருந்தது!' - மன்மோகன், ரகுராம் ராஜனைச் சாடிய நிர்மலா சீதாராமன்

மேலும், ``ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது அவர்களுடைய அரசியல் சார்ந்த கருத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்வது சட்டத்துக்கு எதிரானது. அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும் கூறியுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின்
தஸ்லிமா நஸ்ரின்

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் எடுத்துக்காட்டாக கூறிய தஸ்லிமா நஸ்ரின் அதிகாரபூர்வமாக ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்றவர் என்றும் 2004 முதல் டெல்லியில் குடியிருப்பதற்கான அனுமதி மட்டுமே வாங்கி வசித்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தஸ்லிமா நஸ்ரினுக்கு இன்னும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாகக் கடந்த ஆண்டு ஜூலையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்த தஸ்லிமா நஸ்ரின், ``ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பதற்கான அனுமதி நீட்டிக்கப்பட வேண்டுமென ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கிறேன். ஆனால், ஒரு வருடம்தான் நீட்டிக்கப்படுகிறது. இந்த முறையும் ஐந்து வருடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், இந்தமுறை மூன்று மாதங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனது குடியிருப்புக்கான அனுமதியை ஒரு வருடம் நீட்டிக்க உள்துறை அமைச்சர் மறுபரிசீலனை செய்வார் என நம்புகிறேன்" என்று பதிவு செய்திருந்தார்.

 `5 டிரில்லியன் பொருளாதார இலக்கு!’- நிர்மலா சீதாராமன் உறுதி
அடுத்த கட்டுரைக்கு