Published:Updated:

``’அமைச்சராக்கும் எண்ணமிருந்தால் அறநிலையத்துறை கொடுங்கள்’ என்றேன்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்

``’அமைச்சராக்கும் எண்ணமிருந்தால் அறநிலையத்துறை கொடுங்கள்’ என்றேன்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்

Published:Updated:
பழனிவேல் தியாகராஜன்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் செய்யும் போராட்டம், நிதி நிலைமையைச் சீர்செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, கட்டண உயர்வு, தனியார்மயமாக்கல், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

``ஐநூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஒரு கடை நடத்துகிறோம் என்றால் அதில் லாப, நஷ்டங்கள் உடனடியாகத் தெரிந்துவிடும். ஏனெனில் அதுவொரு சிறு அமைப்பு. ஆனால், அமைப்பு பெரிதாகப் பெரிதாக இந்த லாப, நஷ்ட கணக்கு தெரிவதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். அதுதான் யதார்த்தம். விளைவுக்கும் அதன் ரிசல்ட் தெரிவதற்கும் காலம் எடுக்கும். நிறைய இடத்தில் அடிப்படைப் பிரச்னை என்னவென்றால் அப்போதைக்கு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதுதான் நடக்கிறது. ஆனால், யாருக்கும் ஓர் அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பது புரிவதில்லை. மிகப்பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் இந்த அளவு சரிவு ஏற்பட வேண்டுமென்றால் எந்த அளவுக்கு நிதி மேலாண்மையில் மோசமாக இருந்திருப்பார்கள்... இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளின் பலன் தெரியவரும். இவ்வளவு பெரிய அமைப்பை உடனடியாக மாற்றிவிட முடியாது. இதைச் சரிசெய்வதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். அதன் விளைவு விரைவில் தெரியும்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவற்றைச் சரிசெய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறீர்கள்?”

``அரசாங்கம் நம் கையில் வந்தவுடன் 100 நல்ல அதிகாரிகள் கிடைப்பார்கள். உடனே எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால், அது தவறு எனப் புரிந்துவிட்டது. பத்து ஆண்டுகள் ஒரே கட்சி ஆட்சியிலிருந்ததில் பல்வேறு தவறுகள் நடந்திருக்கின்றன. ஊழல் புரையோடிப்போய்விட்டது. ஆலோசனைக்காக துறைரீதியிலான வல்லுநர்களை நியமிக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதுவும் நடக்கவில்லை. எதிர்பார்க்கும் அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இங்கே இல்லை. நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அரசாங்கப் பணத்தை அடக்கத்தோடு செலவு செய்யவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். ஏற்கெனவே, ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரக்குழுவில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு பைசாகூட இதுவரை ஊதியமாகக் கொடுக்கவில்லை. விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றைச் சரிசெய்து திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.”

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

“இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?”

“அமைப்பைத் திருத்தவில்லையென்றால் பலன்கள் எப்படிக் கிடைக்கும்... அப்படியே திருத்தினாலும் அதற்கான பலன்கள் கிடைக்கக் குறிப்பிட்ட காலம் எடுக்கும். நிச்சயம் அடுத்தடுத்த ஆண்டுகளில் இதற்கான தீர்வுகள் கிடைக்கும்.”

``உங்களின் கருத்துகளை முதல்வரிடம் எடுத்துச்சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா?”

“என்னைப் பொறுத்தவரை முதல்வர் எனக்குக் கிடைத்த பெரிய வரம். `அமைச்சராக்கும் எண்ணமிருந்தால் அறநிலையத்துறை கொடுங்கள்’ என்றுதான் நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்து, எப்போது நான் கருத்து சொன்னாலும் அதை முழுமையாகக் கேட்டு, எனக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை கொடுத்திருக்கிறார். என் வாழ்நாளில் முதல்வருக்கு மேலான எந்த ஒரு நல்ல தலைவருக்குக் கீழே நான் பணியாற்றியதில்லை. இதுவரை 4,500 முதல் 5,000 வரை நான் ஃபைல்களைக் கையாண்டிருக்கிறேன். அவற்றில் நான்கு அல்லது ஐந்து கோப்புகளில்தான் திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. வேறுபாடு வந்தபோதும் என்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் எனச் சொன்னதில்லை. இந்த அளவு வாய்ப்பு கொடுத்தவரிடம் நான் வேறு என்ன கேட்க முடியும்... கேட்கவும் மாட்டேன்.”

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.

``தமிழ்நாட்டின் நிதிநிலை எப்போது மாறும்?”

``முன்பு மாநில உற்பத்தியில் 10 முதல் 10.5 சதவிகிதம் வருவாயாக இருந்தது. அதோடு ஒன்றிய அரசு கொடுத்ததையும் சேர்த்து கடனே இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்துவந்தோம். இப்போது கொரோனா காலத்தில் 5 சதவிகிதம் வரை வருவாய் குறைந்து, இன்றைக்கு வெறும் 10 சதவிகித நிதியை வைத்துத்தான் பட்ஜெட் போடுகிறோம். ஆனால், இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் வருமானம் 1.5 மடங்கு அதிகரித்திருக்கிறது. மேலும், ஒன்றிய அரசு ஏழை, எளிய மக்களிடமிருந்து அதிக வரியும், பணக்காரர்களிடமிருந்து குறைந்த வரியும் வாங்குகிறது. யாரிடமிருந்து எவ்வளவு வாங்கியிருக்கிறோம் என்பது மாறியிருக்கிறது. ஏழை, எளிய மக்களிடமிருந்து வரியைக் குறைவாகவும், பணக்காரர்களிடம் வாங்கும் வரி அதிகமாகவும் இருந்தது. ஆனால், இப்போது அந்த நடைமுறை மிகப்பெரிய அளவில் மாறியிருக்கிறது. இவையெல்லாம் விரைவில் சீர்செய்யப்படும் என்கிறார்கள். முன்பிருந்ததைவிடக் கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டின் நிதிநிலை நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறது. 2024-25-ம் ஆண்டுக்குள் இது சீரான நிலைமைக்கு வரும்.”

``மின் கட்டண உயர்வு, அதில் தனியார்மயம் குறித்து உங்கள் கருத்து என்ன?”

``முதல் 100 யூனிட் இலவசம் என்கிறார்கள். என்னைப் போன்றவர்களுக்கு எதற்கு அந்த மானியம்... ஏன் இன்னும் அந்த 100 யூனிட் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்... இவை எல்லாவற்றையும் திருத்த வேண்டும். கிரீன் எனர்ஜி என்ற இலக்கை 2070-க்குள் அடைய வேண்டும் எனப் பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார். அப்படியானால் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் இந்த இலக்கை அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தை நாம் அடைந்தால்தான் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அடைய முடியும். இதைச் செயல்படுத்த 1.5 லட்சம் கோடி வேண்டும். கடன் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு மின்துறை மிகவும் மோசமான இடத்தில் இருக்கிறது. ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் இருக்கிறது. இப்படியான துறையில் மேலும் 1.5 லட்சம் கோடி கடன் வாங்கி முதலீடு செய்வது இயலாதது. எனவே, அதைச் சீர்செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இதனால்தான் கட்டண உயர்வு கட்டாயமாகிறது.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

``அப்படியானால் தனியார்மயமாக்கல்?”

``எப்போதெல்லாம் ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு அரசாங்கத்தின் உத்தரவாதம் இல்லாமல் கடன் எடுக்க முடியாதோ... எப்போதெல்லாம் அரசாங்கத்தின் மானியம் இல்லாமல் அந்தக் கடனைத் திருப்பித் தர முடியாதோ அதையெல்லாம் அரசாங்கத்தின் கடன் எல்லைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இப்போது இருக்கும் நிதிநிலையில் தனியாரை அனுமதிப்பது தவிர்க்க முடியாதது. பல்வேறு நாடுகளில் பல லட்சம் கோடியை வைத்துக்கொண்டு குறைந்த வரிக்கு நிதி கொடுக்க பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அனுமதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. பல திட்டங்களை பப்ளிக் பிரைவேட் பங்களிப்போடுதான் செய்யமுடியும்.”

``தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்கிறது என நினைக்கிறீர்களா?”

பாஜக மாநாடு
பாஜக மாநாடு

``இல்லை. பா.ஜ.க-வுக்குக் கூடும் கூட்டம் பணத்துக்காகக் கூடும் கூட்டம். பணத்தைவைத்து யார் வேண்டுமானாலும், எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கூட்டலாம். ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், அதை வைத்து பா.ஜ.க வளர்வதாக ஒரு பிம்பத்தை இங்கே உருவாக்குகிறார்கள். கன்னா பின்னாவென உளறுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வரும் விளைவு. தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கன்னா பின்னாவென உளறுபவர்களை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள்.”