Published:Updated:

`PM Cares குறித்த பதிவு.. சோனியா மீது வழக்குப்பதிவு’ -எடியூரப்பாவுக்குக் கோரிக்கை வைக்கும் காங்கிரஸ்

சோனியா காந்தி
சோனியா காந்தி

மே மாதம் 13 -ம் தேதி, பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமர் நிவாரண நிதியிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 3,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் லாக் டெளன் 4.0 -யில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. லாக் டெளனால் துன்பப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே பெரும் போராட்டமே நடக்கிறது. ஒருபுறம் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியதுடன், ரயில் கட்டணத்தைக் கட்ட முடியாத தொழிலாளர்களுக்குக் காங்கிரஸ் கட்சியே கட்டும் என அறிவிக்கப்பட்டது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்திலும் தொழிலாளர்களை மீட்பதில் காங்கிரஸ் பா.ஜ.க இடையே பெரும் அரசியலே நடக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்பாகப் போடப்பட்ட பதிவுக்காக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

பிரியங்காவுக்கு எதிராகக் காங்கிரஸிலேயே கலகக் குரல்! - விஸ்வரூபமெடுக்கும் உ.பி `பேருந்து அரசியல்’

கர்நாடகா மாநிலம் ஷிமோகா காவல்நிலையத்தில் ஐ.பி.சி 153 மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் சோனியா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. புகார் அளித்த வழக்கறிஞர் பிரவீன் குமார், ``அவர்கள் பிரதமரின் நிவாரண நிதியை மோசடி என்கிறார்கள். அவர்களின் ட்விட்டர் பக்கத்தில், `அரசு இதனை மக்களுக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத்தான் அந்த நிதி செலவளிக்கப்படும் என்கிறார்கள். கொரோனாவுக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது இது போன்ற வதந்திகள் தேவையற்றவை. அதனால்தான் அவர்களுக்கு எதிராக புகார் அளித்தேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த 11 -ம் தேதி காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கத்தில், `புலம்பெயர் தொழிலாளர்களை மீட்பதற்கும், வெளிநாட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பிரதமரின் நிவாரண நிதி (PM Cares) பயன்படுத்தப்படவில்லை என்றால் வேறு எதற்காகப் பயன்படுத்தப் போகிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதியில் கிடைக்கும் பணத்தில் பிரதமரின் ஆடைக்கும், வெளிநாட்டுப் பயணங்களுக்கும்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பதியப்பட்டிருந்தது. இந்தப் பதிவால்தான் தற்போது சோனியா காந்திக்கு எதிராக வழக்கு பதியப்படும் நிலைக்குச் சென்றிருக்கிறது.

இதனிடையே தங்கள் கட்சி தலைவர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். போலி தகவல்களுடன் அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கு இது என அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

PM Modi
PM Modi

கடந்த மார்ச் மாதம் 24 -ம் தேதி லாக் டெளன் அறிவிக்கப்பட்டது. பின்னர் இரண்டு நாள்கள் கழித்து பிரதமர் நிவாரண நிதி எனப் புதிய கணக்கு தொடங்கப்பட்டு, மக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடை பெறப்பட்டது. பின்னர் மே மாதம் 13 -ம் தேதி, பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமர் நிவாரண நிதியிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 3,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் 2,000 கோடி ரூபாய் புதிதாக வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கும், சுமார் 1,000 கோடி ரூபாய். புலம் பெயர் தொழிலளர்கள் நலனுக்கும், 100 கோடி ரூபாய் நிதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

`PM CARES' நிதி: குவியும் கோடிகளும்... சுற்றும் சர்ச்சைகளும்..!
அடுத்த கட்டுரைக்கு