Published:Updated:

ஆ.ராசா பற்றவைத்த நெருப்பு - தமிழ்நாட்டில் பிரிவினை தொடர்பான கருத்துகளும் பின்னணியும்

ஆ.ராசா

``இந்தியாவுக்குச் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும், அரசியல் அமைப்பு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் சார்பில் கேட்கப்பட்ட மூவருமே இஸ்லாமியர்கள்” - ஆ.ராசா

ஆ.ராசா பற்றவைத்த நெருப்பு - தமிழ்நாட்டில் பிரிவினை தொடர்பான கருத்துகளும் பின்னணியும்

``இந்தியாவுக்குச் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும், அரசியல் அமைப்பு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் சார்பில் கேட்கப்பட்ட மூவருமே இஸ்லாமியர்கள்” - ஆ.ராசா

Published:Updated:
ஆ.ராசா

கடந்த ஜூலை 3-ஆம் தேதி நாமக்கல்லில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, “நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று பேசியது இப்போது தமிழ்நாடு அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி, ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றினர். இது குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “தனிநாடு வேண்டும் என்று ஆ.ராசா கேட்கிறார். நான் கேட்கிறேன் தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என ஏன் இரண்டாகப் பிரிக்கக் கூடாது” என்றவர்,

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

“தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் கருத்து. என்னைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஆந்திராவில் தெலங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது. எனவே தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரித்தால் அதிக திட்டங்களைப் பெற முடியும்” என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக-வின் நாராயணன் திருப்பதி, “அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களைப் பெரியார் வழிக்குத் தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று முதலமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஈ. வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்று தெளிவாகக் கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, திக பிளவு பட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுக-வுக்கான மிரட்டல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படி என்ன தான் பேசினார் ஆ.ராசா?

``மாநில சுயாட்சிக்கு ஓர் உருவத்தைக் கொடுத்தவர் அண்ணா. இந்தியா ஒரு நாடா? அரசியல் அமைப்பு சட்டம் வந்ததிலிருந்து இந்தியா ஒரு நாடு. இந்தியா உண்மையில் ஒரு துணைக் கண்டம். பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரங்கள் கொண்ட பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியமாக இந்தியா இருக்கிறது. இதை முதன் முதலாக இந்த உலகத்துக்குச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா கொடுத்த கருவை எடுத்துக் கொண்டுதான் கலைஞர் 1974 இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு வராமல் மாநிலங்களுக்குச் சுயாட்சி கொடுக்கிற தீர்மானத்தை எழுதினார். அதைச் சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார்.

இந்திரா காந்தி இதை பெற்றுக் கொண்டு இதுபற்றி முழுமையாக ஆராய்வோம் என்று கடிதம் எழுதினார். ஆக மாநில சுயாட்சிக்குக் கரு, பேரறிஞர் அண்ணா. அந்த கருவை உருவமாக மாற்றியவர் கலைஞர். 1974 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த உருவத்துக்கு இன்றுவரை உயிரில்லை” என்றவர், ``அண்ணா ஆக்கிய கருவுக்கு, கலைஞர் கொடுத்த உருவுக்கு இந்தியாவில் உயிர் கொடுக்கும் ஒரே தலைவனாக முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினை விட்டால் வேறு நாதியில்லை” என்றார்.

 உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்
உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்

மேலும், “இங்கே மாநில சுயாட்சியைப் பற்றிய முக்கியமான ஒரு வரலாற்றைச் சொல்லுகிறேன். 1946 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசு சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விவாதிப்பதற்காக ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. அந்த குழுவுக்கு க்ரிப்ஸ் குழு என்று பெயர். அந்த குழுவினர் இந்தியத் தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக், இந்தியாவில் இருக்கும் பல்வேறு சமஸ்தானங்கள் ஆகியோர் சார்பில் மூவரை அழைத்து அவரவர் கருத்துகளைக் கேட்டார்கள். காங்கிரஸ் சார்பில் அபுல் கலாம் ஆசாத், முஸ்லிம் லீக் சார்பில் ஜின்னா, சமஸ்தானங்களின் சார்பில் ஆற்காடு நவாப் ஆகியோர் அந்த குழுவிடம் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும், அரசியல் அமைப்பு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் சார்பில் கேட்கப்பட்ட மூவருமே இஸ்லாமியர்கள். அவர்களில் ஒரு இந்து கூட இல்லை. அதல்ல இப்போது பிரச்னை. அந்த குழுவின் முன் 1946 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் கருத்து சொன்ன அபுல் கலாம் ஆசாத், ‘சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் கூட்டாட்சி அடிப்படையில்தான் இருக்கும். மாநிலங்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும்’ என்று வலியுறுத்தினார். அந்த பதிவு இன்னும் இருக்கிறது. அதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

ஆனால் அதன்பின் என்ன நடந்தது? இந்த அறிக்கையை அரசியல் நிர்ணய சபையில் வைக்க வேண்டும். அப்படி வைக்கிறபோது காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேருவின் அனுமதியோடு ஒரே ஒரு செய்திக் குறிப்பு வந்தது. அதாவது கிரிப்ஸ் குழு அறிக்கையை ஏற்றுக் கொள்வதும், மாற்றியமைப்பதும் காங்கிரஸ் கட்சியின் உரிமை. ஏனெனில் எங்களுக்குத்தான் பெரும்பான்மை உள்ளது என்று காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கைதான் ஜின்னாவை கோபப்படுத்தியது. அப்போது ஜின்னா ஜூலியட் சீசர் நாடகத்தின் ஒரு வரியை மேற்கோள் காட்டினார். ‘நான் சீசரை குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் இந்த தேசத்தை அதிகமாக நேசித்ததால் அவரை கொன்றேன்’ என்ற வரியைக் குறிப்பிட்டார். மேலும் ஜின்னா, ‘நான் நேருவை நம்புகிறேன், காங்கிரசை கூட நம்புகிறேன். ஆனால் காங்கிரஸுக்குள் இருக்கும் இந்துத்துவ வாதிகளை நான் நம்பவில்லை. இனிமேல் எங்களுக்கு ஃபெடரல் ஆட்சி வேண்டாம். பாகிஸ்தான் தனி நாடுதான் வேண்டும்’ என்று முஸ்லிம் லீக்கை கூட்டி 1947 இல் தீர்மானம் போட்டார் ஜின்னா. எல்லாம் மூன்று மாதத்துக்குள் முடிந்துவிட்டது. நான் இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்... மாநில சுயாட்சியை ஒப்புக் கொண்ட ஜின்னாவை மாநில சுயாட்சியை வேண்டாம் என்று காங்கிரஸ் சொன்ன நேரத்தில் நாடு பிரிந்தது.

மேடையில் ஆ.ராசா
மேடையில் ஆ.ராசா

நான் இன்றைக்கும் சொல்கிறேன்,1974 இல் மாநில சுயாட்சி தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றிவிட்டு, ராஜபாளையத்துக்கு திமுக மாவட்ட மாநாட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் கலைஞருடைய படம். முஜிபுர் ரகுமான் படம் இரண்டையும் வைத்து போஸ்டர் அடித்தார்கள். அப்போது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் சொன்னார்கள், ‘கலைஞர் பிரிவினையாளராக மாறிவிட்டார். ஏன் அங்கே அண்ணா படம் இல்லை, பெரியார் படம் இல்லை. கிழக்கு பாகிஸ்தானை பிரித்த முஜிபுர் ரகுமான் படம் ஏன் இருக்கிறது?’ என்றெல்லாம் கேட்டனர். இன்றைக்கு அமித் ஷா சொல்லுகிறார். ‘இந்திதான் நாட்டை இணைக்கக் கூடிய மொழி. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் இந்திதான் தேவை’ என்கிறார். நான் அவருக்குக் கவனப்படுத்துகிறேன். ஒரு மொழி நாட்டை இணைக்குமா? பாகிஸ்தான் உருவான பிறகு கிழக்கு பாகிஸ்தானில் டாக்காவுக்கு சென்று ஜின்னா உருது மொழியில் பேசினார். அப்போது லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் எழுந்து, ‘அதிபரே... எங்கள் மொழி வங்க மொழி, எங்கள் தாய்மொழி, அந்த மொழியில் பேசுங்கள்’ என்று சொன்னான். மறுத்தார் ஜின்னா. பாகிஸ்தான் பிரிந்தது. இந்த அடிப்படையில்தான் அன்று முஜிபுர் ரகுமான் படத்தைக் கலைஞர் படத்தோடு வைத்தனர். அதைப் பலர் விமர்சித்தார்கள்” என்றவர் தொடர்ந்து பேசும் போது,

 உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்
உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்

“தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கைவிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனான தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகத் தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம், சொல்லிக் கொண்டிருக்கிறோம். நான் பிரதமருக்கு அமித் ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... எங்கள் முதல்வரை வைத்துக் கொண்டு பேசுகிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று இறுதியில் பேசிய பேச்சு தான் இப்போது விவாத பொருளாக மாறி நிற்கிறது.

``தனி தமிழ்நாடு வேண்டும் என பேசிய ஆ.ராசா மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆ.ராசாவின் பேச்சு, தமிழக அரசின் நிலைப்பாடாகக் கருதப்படும்” என தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஆ.ராசா பேசிய வீடியோவை, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “இவர்மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி தேசபக்தர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆ.ராசா பேசியது, தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் விவாதமாகி, சில இடங்களில் அவருக்கு எதிராகக் கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி,  “மாநில சுயாட்சி கோரிக்கை திடீர் கோரிக்கை அல்ல. ராஜமன்னார் குழு அரசியல் சட்டப்படி ஆய்வு செய்து, அதை ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு சர்க்காரியா குழு அமைக்கிறது. இதன் அடிப்படையில் நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு மத்திய, மாநில உறவுகள் குறித்து அரசியல் சட்ட ரீதியாக உத்தரவாதத்தை வென்ற இயக்கம் திமுக” என்கிறவர் மேலும் தொடர்ந்தார்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

``ராஜமன்னார் குழு அறிக்கைக்குப் பிறகு தான் ஒவ்வொரு மாநிலத்திற்கான வரி பிரித்து கொடுக்கும் முறையில் மாற்றம் வந்தது. இன்னும் சொல்லப் போனால் சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்த இயக்கம் திமுக. அது ராஜமன்னார் குழு ஆய்வறிக்கைக்குப் பிறகு தான். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற முரசொலி மாறன் அறிக்கை அடிப்படை வைத்து,  இந்திய அரசியல் சட்டம் என்பது மாநில உரிமைகளை பேணி காக்கிற, ஒன்றியத்தில் அதிகாரம் குவிக்கப்படாமல் மாநில உரிமைக்கும் அதிக அதிகாரம் கொடுக்கப் பட வேண்டும் என்பது தான் திமுக-வின் கோரிக்கை. அது நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கிறது. திமுக-வின் ஐம்பெரும் முழக்கத்தில் ஒன்று ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி.’ இதைத் தான் கோரி பெறுகிறோம்.

நாமக்கல்லில் நடந்த மாநாட்டில் எங்கள் வரலாறு சொல்கிறோம். தந்தை பெரியார் சுதந்திரத்திற்கு முன் தனி நாடு கேட்டார். சுதந்திரத்திற்கு முன் சட்டப்படியும், தார்மீகப்படியும் தனி நாடு கேட்கும் உரிமை இருந்தது. ஏன், 1963 வரை இந்தியாவில் இருக்கக் கூடிய எல்லா கட்சிகளும், அமைப்புகளும் தனி நாடு கேட்க உரிமை இருந்தது. அப்படி இருந்ததால் தான் பாகிஸ்தான், வங்கதேசம் பிரிந்தது. தனி நாடு கேட்கக் கூடாது என்கிற சட்டம் 1963-ல் தான் வருகிறது. அப்படிக் கேட்டால் தேர்தலில் போட்டி இட முடியாது என்று சொன்ன போது தான் ‘வீடு இருந்தால் தான் கூரை மேய முடியும்’ என்பதால் பேரறிஞர் அண்ணா தனி நாடு கோரிக்கையை கைவிட்டுட்டு மாநில சுயாட்சி கேட்கிறார். அதனைத் தொடர்ந்து மாநில உரிமை கேட்கும் போது பயங்கரவாதிகள், தேசவிரோதிகள் என்று பேசினால் அது என்ன வாதமாக ஏற்றுக் கொள்ளப்படும். அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பு, ஒரு மாநிலம் இறையாண்மை கொண்டு இயங்கலாம் என்று உரிமை கொடுத்திருக்கிறது. அதை பா.ஜ.க மாநில உரிமை, ஒன்றியம் என்று பேசுவதைப் பயங்கரவாதம் என்று சித்தரித்தால் எங்கள் கட்சி வரலாறு அப்படி இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார், சிறந்த நாடாளுமன்ற வாதி, சட்ட அறிவு பெற்ற ஆ.ராசா.

ஆ.ராசா
ஆ.ராசா

அவர் சொன்ன கருத்துக்குப் பின் உடனே தமிழ்நாட்டை மூன்றாக பிரிப்போம் என்கிறார்கள் பாஜக-வினர். அவர்களுக்கு இந்திய வரலாறு முழுமையா தெரியாது. அரசியல் அமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் பாஜக, சுதந்திர விடுதலைக்கும், அரசியல் சட்ட குழுவிலும் ஒரு போதும் இருந்ததில்லை. ஏனென்றால் அரசியல் சட்டத்தில் இருக்கக் கூடிய சமத்துவம், சமூகநீதி, சமய சார்பின்மை-யில் உடன்பாடில்லை. இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் தெலங்கானாவை ஒப்பிடுகிறார். அவருக்குத் தெரியாமல் இருக்காது. இல்லை என்றாலும் சொல்ல விரும்புகிறோம். தெலங்கானா என்பது ஒரு போதும் சென்னை மாகாணத்தில் இல்லை. ஆந்திர பிரிவினையின் போதும் கூட ஹைதராபாத் நிஜாம் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஒரே மொழி பேசுகிறார்கள் என்பதற்காகத் தனித்த நிர்வாகத்திலிருந்த சென்னை மாகாணத்திலிருந்த ஆந்திராவையும், ஹைதராபாத் நிஜாமிடம் இருந்த தெலங்கானாவையும் துப்பாக்கி முனையில் ஒன்று சேர்த்தார்கள். அது கூடாது என்று அன்று திமுக, பொதுவுடைமை இயக்கம் தெளிவாகச் சொன்னது. 50 ஆண்டுக் காலம் சரியான பிரதிநிதித்துவம் இல்லாததினால் நீண்ட நெடிய போராட்டத்தில் பிரிந்தது தெலங்கானா. அதை தமிழ்நாட்டோடு ஒப்பிடுவது தவறானது. தமிழ்நாட்டு மக்கள் இனத்தால், மொழியால் , இலக்கிய வளங்களில் திருவேங்கடம் முதல் குமரி வரை ஆண்ட மண். அதனால் நயினார் நாகேந்திரன் கருத்து விளம்பரத்திற்கு வேண்டுமானால் உதவுமே ஒழிய ஒரு போதும் தமிழ் நாட்டு மக்களுக்கு உதவாது” என்றார்.