Published:Updated:

கருணாநிதி இல்லாத சட்டமன்றத் தேர்தல்: தி.மு.க-வுக்குக் காத்திருக்கும் சவால்கள்?#TNElection2021

கருணாநிதி
கருணாநிதி

234 தொகுதிகளுக்கும் நடைபெறும் பொதுத் தேர்தல் என்பது மாறுபட்ட ஒன்று. வரும் 2021, கருணாநிதி இல்லாத சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.முக-வின் முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன?

தி.மு.க-வின் நிறுவனர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக அந்த இயக்கத்தை கட்டிக் காத்தவர் கருணாநிதி. 1971-ல் மாபெரும் வெற்றி, இடையில் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபிறகு 12 ஆண்டுகால வனவாசம், பிறகு ஆட்சியைக் கைப்பற்றி குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கலைப்பு, பிறகு படுதோல்வி, மாபெரும் வெற்றி, தோல்வி என ஏற்ற இறக்கங்களையும், பல சவால்களையும் கடந்து கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்தவர் கருணாநிதி.

அவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் மகன் மு.க.ஸ்டாலின் தலைமைப் பொறுப்பேற்று, ஒரு நாடாளுமன்றத் தேர்தலையும், ஓர் உள்ளாட்சித் தேர்தலையும் சந்தித்து இரண்டிலுமே மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டார். சட்டமன்றத்துக்கான தேர்தலைப் பொறுத்தவரை, இடைத் தேர்தல்களைச் சந்தித்திருந்தாலும் 234 தொகுதிகளுக்கும் நடைபெறும் பொதுத் தேர்தல் என்பது மாறுபட்ட ஒன்று.

இந்தநிலையில், வரும் 2021, கருணாநிதி இல்லாத சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க-வின் முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன? மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்
ASHWIN_KUMAR

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

``தி.மு.கவின் மீது பா.ஜ.க முன்வைக்கும் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரசாரம் தி.மு.க-வுக்கு மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. எங்கே இந்து வாக்குகள் பறிபோய்விடுமோ என்கிற பயம் தி.மு.க-வுக்கு இருக்கிறது. அதனால்தான் பயந்து பயந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கூடவே, மத்தியில் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், துணிச்சலாக பதிலடி கொடுப்பதில் தி.மு.க-வுக்கு சிக்கல் இருக்கிறது.

அதேபோல, பா.ஜ.க., அ.தி.மு.க., ரஜினியின் கட்சி ஆகியவை தனியாக நின்றால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மூன்று கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்தால் அது தி.மு.க-வுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். அதேபோல, அழகிரி பா.ஜ.க-வில் சேர்ந்தாலோ, தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கினாலோ அவர்கள் தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் வாங்கினால்கூட அது தி.மு.க-வுக்குப் பின்னடைவாகவே இருக்கும். அவரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்போகிறார்களா அல்லது வேறு எப்படி சமாதானம் செய்யப்போகிறார்கள் என்பதும் ஸ்டாலின் முன்னால் இருக்கும் முக்கியமான சவால்.

அந்த 6 சுங்கச்சாவடிகள்... தி.மு.க ஆர்ப்பாட்டம்! - #Dont_Want_Tollgate ட்விட்டரில் டிரெண்டானது ஏன்?!

அதேபோல, வேட்பாளர் தேர்விலும் ஸ்டாலினுக்குச் சில நெருக்கடிகள் இருக்கும். மாவட்டச் செயலாளர் தனக்கு வேண்டப்பட்டவர்கள் அடங்கிய பட்டியலைக் கொடுப்பார். ஆனால், மாவட்டத்தில் நிர்வாகிகளின் விருப்பம் வேறாக இருக்கும். ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்களின் பேச்சைக் கேட்டு தேர்வு செய்தால், அதிருப்தி வேட்பாளர்கள் உருவாவார்கள். அதையும் ஸ்டாலின் எப்படிச் சமாளிக்கப்போகிறார் எனத் தெரியவில்லை.

அடுத்ததாக மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கிற கட்சிகள், கூட்டணியில் இருக்கும்போது அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அப்படி, தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதிலும் ஸ்டாலினுக்கு நிச்சயமாகச் சவால்கள் இருக்கும்.’’

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)
கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

பிரியன் (மூத்த பத்திரிகையாளர்)

``முதன்மையான சவாலாக நான் பார்ப்பது, `இந்துக்களுக்கு எதிரான கட்சி’ என்கிற பா.ஜ.க சுமத்தும் குற்றச்சாட்டுக்கு தி.மு.க சரியான எதிர்வினை ஆற்றாமல் இருப்பதைத்தான். பா.ஜ.க மட்டுமல்ல, சமீபகாலமாக ராஜேந்திர பாலாஜியும்கூட அது போன்ற குற்றச்சாட்டை முன்வைக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதை எப்படிக் கையாள்வது என்பதில் தி.மு.க-வினர் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும் என ஒதுங்கிக்கொள்கிறார்கள். கருணாநிதி அது போன்ற விமர்சனங்களை லாவகமாகக் கையாண்டார். ஆனால், அவரின் இடத்தை தி.மு.க-வில் யாராலும் நிரப்ப முடியாமல் இருக்கிறது.

`கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவைபோல இருக்கிறது!’ - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

அடுத்ததாக, தற்போது கருணாநிதி இல்லை என்பதே எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான, தி.மு.க-வுக்கு பின்னடைவான ஒரு விஷயம்தான். காரணம், கருணாநிதியின் பிரசார வீச்சு மக்கள் மனங்களைத் தொடும் அவரின் பேச்சு, தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பலம். இப்போது அது மிஸ் ஆகிறது. அதேபோல, தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விமர்சனங்களுக்கு, கவுன்ட்டர் கொடுப்பதில் கருணாநிதி வல்லவர். ஆதாரத்தோடு பழைய விஷயங்களை அடுக்குவார். தற்போது, தி.மு.க-வில் அந்த அளவுக்கு யாரும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. கருணாநிதி இருந்திருந்தால் ரஜினிகாந்தைத் திறமையாகச் சமாளித்திருப்பார். ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் எனத் தெரியவில்லை'' என்கிறார் அவர்.

மேலே, தி.மு.க-வின் முன்னிருக்கும் சவால்களை அடுக்கிய இருவருமே, நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பெற்ற மாபெரும் வெற்றியைக் கவனிக்கத் தவறக் கூடாது என்கிற கருத்தையும் முன்வைக்கின்றனர்.’’

பிரியன்
பிரியன்

ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)

``கருணாநிதி ஈர்ப்பு சக்தியுள்ள தலைவர். பேச்சாற்றல், எழுத்தாற்றல், அரசியல் சாதுர்யங்கள் மிக்கவர். அவருக்குக் கூட்டம் சேர்க்கக்கூடிய ஆற்றல் உண்டு. ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல. ஆனால், கருணாநிதியைவிட மனவுறுதி மிக்கவர் ஸ்டாலின். கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க-வுக்காக விடுதலைச் சிறுத்தைகளைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றி, பா.ம.க-வுக்கு ஆறு இடங்கள் கொடுத்ததால் தி.மு.க 15 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால், ஸ்டாலின், ராமதாஸ் எதிர்ப்பு வாக்குகளைச் சாதகமாக்கிக்கொள்ளலாம் என நினைத்து சிறுத்தைகளைக் கூட்டணியில்வைத்து அதிக இடங்களில் தி.மு.க-வை போட்டியிடவைத்து வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.''

அடுத்த கட்டுரைக்கு