Published:Updated:

`ரூ.25 லட்சத்துக்கு காப்பீடு; தாமதமானால் இழப்பீடு!’ - இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ரயில்

இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் வேகமானதாகக் கருதப்படும் ஸ்வார்ன் சதாப்தி ரயிலைவிட இதன் பயண நேரம் குறைவு என்கிறது இந்திய ரயில்வே.

Tejas Train
Tejas Train ( Twitter )

இந்தியாவின் முதல் தனியாரால் இயக்கப்பட உள்ள லக்னோ - டெல்லி இடையிலான தேஜாஸ் விரைவு ரயிலை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

தேஜாஸ் ரயில் சேவை
தேஜாஸ் ரயில் சேவை

நாட்டின் பல்வேறு ரயில்களை இயக்கும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ரயில்களை இயக்கும் பொறுப்பு டெண்டர் விடப்பட்டு, அதன்மூலம் முடிவு செய்யப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தின் முன்னோட்டமாகத் தனியாரால் இயக்கப்படும் நாட்டின் முதல் ரயில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தலைநகர் டெல்லி இடையே இயக்கப்படும் தேஜாஸ் விரைவு ரயிலாகும். இந்த தேஜாஸ் விரைவு ரயிலை இயக்கும் பொறுப்பு விரைவில் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது அந்த ரயில், இந்திய ரயில்வேயின்கீழ் செயல்படும் தனிப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சேவையை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத்,``இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ரயில் இது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு வாழ்த்துகள். இதேபோல், நாட்டின் மற்ற நகரங்களை இணைக்கும் முயற்சியும் விரைவில் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்'' என்றார்.

வர்த்தகரீதியிலான பயணத்தை இந்த ரயில், நாளை தொடங்கவிருக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின்படி வாரநாள்களில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து 6 நாள்கள் இந்த ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. காலை 6.10 மணிக்கு லக்னோவில் கிளம்பும் இந்த ரயில், மதியம் 12.25 புதுடெல்லி ரயில்நிலையத்தை வந்தடையும். லக்னோ - டெல்லி இடையிலான தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கிறது. இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் வேகமானதாகக் கருதப்படும் ஸ்வார்ன் சதாப்தி ரயிலைவிட இதன் பயண நேரம் குறைவு என்கிறது இந்திய ரயில்வே.

Tejas Train
Tejas Train

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், `ரயில் தாமதமாக வந்தால் ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்கும். அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரூ.100 வழங்கப்படும். அதேசமயம், குறிப்பிட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக ரயில் வந்தால் பயணிகளுக்கு ரூ.250 வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

`பிசினஸ்லைன்’ நாளிதழுக்கு பேட்டியளித்த ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாக இயக்குநர் எம்.பி மால், ``இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கவுள்ளோம். பயணிகளுக்கு ரூ. 25 லட்சத்துக்கான காப்பீட்டை இலவசமாக வழங்கவுள்ளோம். அதேபோன்று ரயிலில் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் திருடு போனாலும் ரூபாய் ஒரு லட்சம் வரை இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.

Tejas Train
Tejas Train

பயணிகளுக்கான சீட்டை நாங்கள் வழங்குவோம். வருமானத்தையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றால் நாங்கள் இழப்பைச் சந்திக்க நேரிடும். அதேநேரத்தில் பயணக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான சேவைகளையும் நாங்கள் முடிவு செய்யலாம். வரும் காலங்களில் பல புதிய சேவைகளை வழங்கும் திட்டம் உள்ளது. குறிப்பாக, பயணிகளின் லக்கேஜ்களை வீட்டுக்கே சென்று பெறும் திட்டம் முதலியவை பரிசீலனையில் இருக்கின்றது” என்றார்.

மெட்ரோ ரயில் நிலையங்கள்...
தனியார்மயமும் அதன் தாக்கங்களும்!

எப்போது வேண்டுமென்றாலும் பயண கட்டணத்தை மாற்றும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. வழங்கும் சலுகைகளை பொறுத்து கட்டணத்தில் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இந்த இரு ரயில் சேவைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. இதிலிருந்து ரயில்வேக்கு செலுத்த வேண்டிய கட்டணம் போக ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ஆண்டுக்கு 4 முதல் 5 கோடி ருபாய் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.