Published:Updated:

`நீங்கள் தமிழரா, இந்தியரா...' - இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பதில் என்ன?

சிவன்
சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டி பற்றி இந்தியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில், நிலவுக்கு சந்திரயான்-2 ஏவப்பட்டது. நிலவை எட்டிப்பிடிக்க 2.1 கிலோ மீட்டர் தொலைவு இருந்தபோது... விக்ரம் லேண்டர், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. கடைசிகட்ட தவறுகளால் விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தது. கடுமையாக உழைத்தும், இலக்கை எட்ட முடியாத சோகத்தில் இஸ்ரோ தலைவர் சிவன், கண்ணீர்விட்டு அழுததும், பிரதமர் மோடி அவரைத் தேற்றியதும் நாட்டு மக்களை நெகிழவைத்தது. இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார்.

மோடி, சிவன்
மோடி, சிவன்

அப்போது, "ஒரு தமிழனாக நாட்டின் உயர்ந்த பதவி ஒன்றில் அமர்ந்துள்ளீர்கள்... தமிழ்நாடு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்" என்கிற கேள்வி முன்வைக்கப்பட்து. இத்தகைய இக்கட்டான கேள்விக்குப் பதிலளித்த சிவன், "முதலில் நான் இந்தியன். ஓர் இந்தியனாகவே இஸ்ரோவில் பணியில் அமர்ந்தேன். இஸ்ரோவில், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் பணி செய்கிறார்கள். பல மொழி பேசும் மக்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கிறார்கள்'' என்றார் கூலாக.

சிவன் அளித்த பதில், ட்விட்டர்வாசிகளை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. டெல்லியிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, சிவன் அளித்த பேட்டி பற்றிப் பெருமையுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த ஆகாஷ் ஸ்ரீவஸ்தவா தன் ட்வீட்டில், '' சிவன் குறித்து மற்ற இந்தியர்கள் போலவே நானும் பெருமைப்படுகிறேன். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது பிரச்னையல்ல. சிவன் நேர்மையானவர், கடுமையான உழைப்பாளி. உலகின் மிகச்சிறந்த விண்வெளி ஆய்வகத்தின் தலைவர். நம் நாட்டின் ஹீரோ'' என்று பதிவிட்டுள்ளார்.

விக்ரம் லேண்டர்
விக்ரம் லேண்டர்

வானி சவுகான் என்பவர், ''முதலில் நான் ஓர் இந்தியன். இதுபோன்றே அனைத்து இந்தியர்களும் கருதுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். மொழி, இனத்தை வைத்து நெஞ்சை நிமிர்த்துவதில் எந்தப் பெருமையும் இல்லை. இந்தியா என்ற நாடு இல்லையெனில், யாருக்கும் யாதொரும் அடையாளமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர், ''சிந்து உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, அவர் சார்ந்த மாநில மக்கள் சிந்துவைத் தூக்கிப் பிடிக்கின்றனர். இதுபோன்ற மனநிலை மாற வேண்டும். தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியிலே, சிவன் இப்படிக் கூறியது அனைத்து மக்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. சிவன் இந்தியாவின் பெருமை'' என்று நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்.

இந்திய மக்களால் விரும்பப்படும் மனிதராக மாறியிருக்கிறார் சிவன். இவரது பெயரில் ஏராளமானோர் ட்விட்டரில் போலிக் கணக்கைத் தொடங்கி பதிவுகள் வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இஸ்ரோ தலைவருக்கு என்று தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

credit: Hindustan times

அடுத்த கட்டுரைக்கு