Published:Updated:

`முதலில் தீர்மானம்... அடுத்து சுற்றுப்பயணம், மாநாடு!' - பழனிசாமிக்கு எதிராக சசிகலாவின் திட்டம் என்ன?

சசிகலா - எடப்பாடி பழனிசாமி
சசிகலா - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. தவிர, சசிகலாவுக்கு ஆதரவாக அடுத்தடுத்த தீர்மானங்கள் இனி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வரும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டுவருகிறார். ஆரம்பத்தில் பகுதி அளவிலான நிர்வாகிகளிடம் பேசிவந்த சசிகலா, தொடர்ந்து முன்னாள் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்களோடு உரையாற்றும் ஆடியோக்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தவிர, அதிமுக-வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், முதல் எம்.பி-யான மாயத்தேவரின் குடும்பத்தினருடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீபத்தில் வெளியாகின. இதுவரை வெளியான ஆடியோக்களில் பெரும்பாலும், ``நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்'' போன்ற கருத்துகளே பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றன.

விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்
விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக, முதலில் அ.தி.மு.க தலைமைக் கழகக் கூட்டத்திலும், பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவிர, சசிகலாவுடன் தொடர்பிலிருந்த 20 பேர் அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ``சசிகலா, அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டும். அவர் தலைமையிலான அ.தி.மு.க-வை ஏற்க வேண்டும், அ.தி.மு.க தொண்டர்களை சசிகலா சந்திப்பது வரவேற்கக்கூடியது. சசிகலாவுடன் போனில் பேசியவர்களைக் கட்சியிருந்தது நீக்குவது கண்டிக்கத்தக்கது’’ என 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவுக்கு எதிராகப் பேசிவரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது குறித்த தீர்மானமும் அதில் அடக்கம்.

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. தவிர, ``சசிகலாவுக்கு ஆதரவாக அடுத்தடுத்த தீர்மானங்கள் இனி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வரும்'' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர்,

``சிறையிலிருந்து வெளிவந்த நாள்முதலாகவே அதிமுக-வில் பலர் சசிகலா அம்மையாருடன் தொலைபேசியில் பேசிவருகிறார்கள். அவர்களில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் மட்டும் இல்லை. கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலரும்கூட அடக்கம். தொடர்ந்து கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிவருவதை சசிகலா அம்மையார் விரும்பவில்லை. அதைத்தான் ஒரு ஆடியோவில்கூட, 'கொங்கு மண்டல மக்கள் எல்லாருமே தலைவர் மேலும், அம்மா மேலும் ரொம்ப பாசமா இருப்பாங்க... அந்த மக்கள் அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டு பழக்கப்பட்டவங்க... அந்த மக்கள் நம்ம மேலவெச்ச பிரியம் எனக்குப் பெரிசா பட்டுச்சு... அதனால்தான் கொங்குமண்டல மக்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தைத் தரலாம்னு நினைச்சுதான் அந்த வாய்ப்பை கொடுத்துட்டுப் போனேன். ஆனா, இப்போ இவங்க பண்றதைப் பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு... என்ன ஆனாலும் சரி, இந்தக் கட்சியை இனிமேலும் விட்டுவிட மாட்டேன். தலைவர், அம்மா காலத்து அ.தி.மு.க-வை மீண்டும் கொண்டுவருவேன்’னு பேசியிருக்காங்க.

விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்
விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

அவங்ககிட்ட தொடர்புகொண்டு பேசுறவங்ககிட்ட , உங்க பகுதிகள்ல நமக்கு ஆதரவா இருக்குற நிர்வாகிகளைவெச்சு கூட்டம் போடுங்க. அதுல நீங்க விரும்புற மாதிரி, நான் பொதுச்செயலாளரா வரணும்னு தீர்மானம் போடுங்க. தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு தீர்மானங்கள் வருது, எவ்வளவு பேர் நமக்கு ஆதரவா வர்றாங்கன்னு பார்ப்போம். அதற்குப் பிறகு நான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் வர்றேன்னு நம்பிக்கை கொடுத்திருக்காங்க. அது முடிஞ்வுடனே, தஞ்சாவூர் இல்ல திருச்சியில மாநில அளவுல மிகப்பெரிய மாநாடு ஒண்ணு நடத்தவும் திட்டமிட்டிருக்காங்க. அதுனாலதான் கொரோனா காலம் முடியட்டும்னு ஒவ்வொருத்தங்ககிட்டயும் சொல்லிட்டு இருக்காங்க. அந்த மாநாட்டுக்குத் தொடக்கமாகத்தான் விளாத்திகுளத்துல போடப்பட்ட தீர்மானம். இனி திருப்பூர், மதுரை, சேலம், திண்டுக்கல் என தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துலயும் அவங்களுக்கு ஆதரவா தீர்மானங்கள் வரும்'' என்றவர், தினகரனின் சைலன்ட் மோடுக்குப் பின்னாலுள்ள காரணத்தையும் விளக்கினார்,

சசிகலா விவகாரம்: ஓ.பி.எஸ் அணுகும் விதமும், எடப்பாடியின் திட்டமும்!

``அ.ம.மு.கவிலிருந்து பலர் மீண்டும் அதிமுக-வில் இணைந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்து தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு சசிகலா அம்மையாரின் மீதிருக்கும் அபிப்ராயம் தினகரன் மீது கிடையாது. தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக வர விரும்பும் சிலரும்கூட, தினகரனும் பின்னணியில் இருப்பதுபோலத் தெரிந்தால், வர மாட்டார்கள். அதனால்தான், தினகரன் தற்போது அமைதியாக இருக்கிறார்'' என்றார்.

தினகரன் - சசிகலா
தினகரன் - சசிகலா

இந்தநிலையில், விளாத்திகுளத்தில் நடந்த கூட்டம் குறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ,

``சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் செய்திகள் வந்தன. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கிடையாது. அ.தி.மு.க-வின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலாவை அதிமுக-வில் சேர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும். அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார். ஆனால், ``சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளத்தில் நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரூபம், சில மாதங்களுக்கு முன்பாக அமமுக-விலிருந்து அதிமுக-வில் இணைந்தவர்'' என்கிறார்கள் அந்தப் பகுதி அதிமுக நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு