Published:Updated:

கடல் மீன்வள சட்ட மசோதா:`மீனவர் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்க்க வேண்டும்!’-பாரம்பர்ய மீனவர்கள் கோரிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் ( உ.பாண்டி )

`மீனவர் பாதுகாப்பு சட்டத்தை' நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து `இந்திய மீன்பிடி மசோதா 2021', சட்டத் திருத்தத்தில் மீனவர் பாதுகாப்பு சட்டத்தை சேர்க்க முதலைமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் 'கடல் மீன்வள சட்ட மசோதா-2021' -வால் தங்கள் பாரம்பர்ய மீன்பிடி உரிமையும், வாழ்வாதாரமும் பாதிக்கும் என்று தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்திவருவது கடலோரப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது. தங்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கைவைத்தும் வருகிறார்கள்.

பாம்பன் கடல்
பாம்பன் கடல்

அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றிவிட வாய்ப்பிருக்கும் நிலையில் மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென்று மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி,``மத்திய அரசு கடலையும் கடற்கரையையும் மீனவர்களிடமிருந்து பிரித்து பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் கடந்த ஆண்டுகளில் நான்கு சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டுவந்திருக்கிறது.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

கடற்கரை மேலாண்மை சட்டம் 2019, கடல் மீன்வளர்ப்பு சட்டம் 2019, கடல்வழிப் பாதை சட்டம் 2021, கடல் மீன்வள மசோதா 2021 ஆகிய நான்கு சட்டங்களால் மீனவர்களின் வாழ்வுரிமையும், வாழ்விடங்களும், வாழ்வாதாரங்களும் பறிக்கப்படுகின்றன.

கடற்கரை மேலாண்மை சட்டத் திருத்தம் 2019-ன் மூலம் கடலிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பெரு முதலாளிகள் தங்கள் நிறுவனங்களை வைத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் மூலம் கடற்கரைப் பகுதி, சட்டரீதியாக கார்ப்பரேட் கைகளுக்கு செல்கிறது. கடற்கரையை ஒட்டி வாழும் மீனவர்களின் வாழ்விடப் பகுதியும், பயன்பாட்டுப் பகுதியும் பறிக்கப்படுகின்றன. பாதிப்பு உண்டாக்கும் ஆலைகள் கடற்கரையில் அமைய சட்டப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது.

அதேபோல் 'கடல் மீன்வளர்ப்பு சட்டம் -2019'-ன் மூலம் 12 நாட்டிகல் மைல் தூரமுள்ள கடல் பகுதியை நீண்டகால குத்தகைக்கு கார்ப்பரேட்டுக்குக் கொடுப்பதன் மூலம் மாநில அரசின் ஆளுமைக்குட்பட்ட கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசின் உரிமையும் பறிக்கப்படுகிறது.

 மீனவர்கள்
மீனவர்கள்
உ.பாண்டி

பெரும்பாலான பாரம்பர்ய மீனவர்கள் 12 நாட்டிக்கல் தூரமுள்ள கடலில்தான் மீன்பிடிக்கிறார்கள். எனவே, பாரம்பர்ய மீனவர்களின் மீன்பிடி கடல்பகுதியைத் தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு கொடுக்க வழிவகை செய்யும் 'கடல் மீன்வளர்ப்பு சட்டம்' மூலம் பாரம்பர்ய மீனவர்களின் பயன்பாட்டுக் கடலில் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

'கடல் கப்பல் வழிப் பாதை சட்டம் 2020'-ன்படி 12 நாட்டிக்கல் மைல் கடலுக்கு அப்பால், கப்பல்வழிப் பாதை என்று அறிவித்து, சட்டப்படி மீனவர்கள் கப்பல் வழித்தடத்தில் மீன்பிடிக்க கூடாது என தடுக்கப்படுகிறார்கள்.

மேலும், மீன்பிடிப் படகில் நேவிகேஷன் படித்தவர்கள் மட்டுமே மீன்பிடிப் படகை இயக்க வேண்டும், இல்லையென்றால் மீனவர்களுக்கு அபாராதம் மற்றும் சிறைத் தண்டனையும் கிடைக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

அதையும் தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் 'மீன்பிடி சட்டம் 2021'-ன்படி, 200 நாட்டிக்கல் மைல் தூரம் வரை சிறப்பு மீன்பிடி பொருளாதார மண்டலம் என்பதால், மீனவர்கள் கட்டணம் செலுத்தித்தான் கடலில் மீன்பிடிக்க வேண்டும் எனக் கூறித் தடுக்கிறார்கள்.

'1958 - கப்பல் மீன்பிடிச் சட்டத்தை' திருத்தி தற்போது பாரம்பர்ய மீனவர்கள் மீது திணிக்கிறார்கள். அதேசமயம் சட்டப்படி கார்ப்பரேட்டுகள் கடலில் கால்பதிக்க வழிவகை செய்கிறார்கள்.

மேலும், பாரம்பர்ய மீனவர்கள் இந்த மீன்களைத்தான் பிடிக்க வேண்டும், இந்த அளவில்தான் பிடிக்க வேண்டும் எனவும், மீறினால் அபாராதம், சிறைத் தண்டனை என அறிவித்து மீனவர்களைக் குற்றச்செயல் செய்பவர்களாக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் மீனவர்கள்
மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் மீனவர்கள்

நம் நாட்டு கடல்புறங்களில் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மட்டுமே அதிகம் புழக்கத்திலுள்ள நிலையில், மீன்பிடி சட்டத்தில் இயந்திரம் பொருத்தப்படாத படகுகளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து, சலுகை என்ற பெயரில் பாரம்பர்ய மீனவர்களை ஏமாற்றுகிறார்கள்.

கடலை சிறப்பு மீன்பிடி பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு சட்டரீதியாக தாரைவார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

வரும் காலங்களில் அந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை, கடலில் நிலைகொண்டுள்ள பெருமுதலாளிகளிடம்தான் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாது.

`இந்தியக் கடல் இனி மீனவனுக்குச் சொந்தமில்லையா?' -புதிய கடல் சட்ட திட்டங்கள் சொல்வதென்ன? ஓர் அலசல்

இந்தநிலையில் அரசியல் சாசனம் கொடுத்த உரிமையின் அடிப்படையில் மீனவர்கள் எங்குதான் வாழ்வது, எங்குதான் மீன்பிடிப்பது என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது.

உலகம் தோன்றியது முதல் காற்றோடும் கடலோடும் போரிட்டு மீன் வேட்டையாடும் கடல் பழங்குடிகளான மீனவ சமூகத்தை சட்டங்கள் போட்டு தடுக்க நினைப்பது நியாயம் அல்ல. மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டங்கள் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வனப்பாதுகாப்பு சட்டத்தில் காடுகளில் வாழும் பழங்குடி மக்களை பாதுகாக்கச் சட்டம் போட்டிருப்பபோல் கடல் பழங்குடி மீனவர்களையும் பாதுகாக்கச் சட்டம் இயற்றி மீனவர்களின் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரப் பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

மீனவர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டால், பாரம்பர்ய மீன்பிடித்தொழில் செய்யும் பகுதிகளில் பெருமுதலாளிகள் நுழைவது சட்டப்படி தடுக்கப்படும். மீனவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

கடந்த 4-ம் தேதி டெல்லியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம ரூபாலாவை பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் சந்தித்து மீன்பிடி மசோதாவில் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு அம்சம் இல்லாதது குறித்துப் பேசினோம். இந்திய வனச்சட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம் இருப்பதுபோல், மீன்பிடிச் சட்டத்தில் மீனவர்களின் வாழ்வுரிமையைக் காக்க சட்டம் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டினோம். சட்டம் இயற்ற கோரிக்கை விடுத்தோம்.

மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் மீனவர்கள்
மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் மீனவர்கள்

அதை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், இதற்கான முயற்சியை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், மாநில அரசு மூலம் இதைச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார். இதனால், இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மீன்வள மசோதா- 2021 தாக்கல் செய்யப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்தான் இன்று இந்தியாவை வழிநடத்திவருகிறது. மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் 'மீன்வள மசோதா- 2021'-க்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், ஒன்றிய அரசு கடந்த ஜூலை 23-ல் மீன்வள மசோதாவில் திருத்தம் செய்துள்ளது. இது தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி.

அதேபோல் பாரம்பர்ய மீனவர்களைப் பழங்குடி மக்களாக அறிவிப்போம் என கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த திமுக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது மீனவர்கள் மத்தியில் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள்
மீனவர்கள்
உ.பாண்டி

மீனவர்களைப் பழங்குடிகளாக அறிவிக்கும் முன்னோட்டமாக 'மீனவர் பாதுகாப்பு சட்டத்தை' நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து 'இந்திய மீன்பிடி மசோதா 2021', சட்ட திருத்தத்தில் மீனவர் பாதுகாப்பு சட்டத்தை சேர்க்க முதலைமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம்: `உலக வரலாற்றிலேயே மோசமானது’ - கொந்தளிக்கும் மீனவர்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு