தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் 1958-ம் ஆண்டில் வைகை அணை கட்டப்பட்டது முதல் நீர்பிடிப்புப் பகுதியில் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது. வைகை அணையைச் சுற்றியிருக்கும் எட்டு கிராமங்களைச் சேர்ந்த 250 மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மீன் வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு, பங்கு அடிப்படையில், பாதி மீனவர்களுக்கும், மற்றொரு பாதி அரசுக்கும் பிரிக்கப்பட்டு... பொதுமக்களுக்கு சமீபகாலமாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அணைப் பயன்பாட்டுக்கு வந்த கடந்த 65 ஆண்டுகளில் மீன்பிடியை அரசே நடத்திவந்தது. இந்த நிலையில், வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமை ஒப்பந்தம் விடப்பட்டு, தனியாருக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏலம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. இதில் கோவையைச் சேர்ந்தவர் 82 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்ட மீன்பிடி, கடந்த வாரம் தனியார் மூலம் தொடங்கியது. ஏற்கெனவே நடைமுறையிலிருந்த பங்கு மீன்கள் நிறுத்தப்பட்டு, மீனவர்களுக்குப் பிடிக்கப்படும் மீன்களுக்குக் கூலி வழங்கப்பட்டது. அதன்படி கட்லா, ரோகு, மிருகால் வகை மீன்களுக்கு கிலோவுக்கு 35 ரூபாய், ஜிலேபி ரக மீன்களுக்கு 45 ரூபாய் வழங்கப்பட்டது. முதலில் இந்தக் கூலியை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், தொழிலில் இறங்கியவுடன் கூலி கட்டுப்படியாகாது என்பதை உணர்ந்தனர்.
இதனால் வைகை அணை மீன்பிடி உரிமையில், மீண்டும் பழைய முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மீன்பிடிக்கச் செல்ல மறுத்துவிட்டனர். மேலும், வைகை அணை மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் நீர்த்தேக்கத்தில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கினர். மீனவர்கள் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இறங்கி வைகை அணை மீன்பிடியை அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

போலீஸாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனக் கூறி போராட்டத்தைத் தொடர்கின்றனர். குறிப்பாக, பெரியகுளம் ஆர்.டி.ஓ சிந்து, ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால், மீன் வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா ஆகியோர் தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையே தாசில்தார் திருமுருகன் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கூலி உயர்வு அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத மீனவர்கள், பழைய முறைப்படி அரசு மீன்பிடி தொழிலை ஏற்று நடத்த வேண்டும். பங்கு அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்த நிலையில், இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறது.