Published:Updated:

எல்லை பிரச்னை:`கொல்லப்பட்ட அஸ்ஸாம் காவலர்கள்; கைதட்டிக் கொண்டாடும் மிசோரம்?!'-என்ன நடக்கிறது அங்கே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை
அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்னை

அஸ்ஸாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல வருடகாலமாக நீடித்துவரும் எல்லைப் பிரச்னையை மையமாகவைத்து நேற்று இரு மாநில காவலர்களுக்கிடையே வெடித்த வன்முறையில் 5 அஸ்ஸாம் காவலர்கள் கொல்லப்பட்டிருப்பது எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச்செய்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே சுமார் 155 கிலோமீட்டர் தூரம் அளவிலான எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொள்வதில் 1955-ம் ஆண்டு முதல் பிரச்னை நீடித்துவருகிறது. எல்லைப் பிரச்னையின் காரணமாக, பங்காளி மாநிலங்களான அஸ்ஸாமும் மிசோரமும் பகையாளிகளாக மாறி மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகின்றன. எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படாமல் இருந்துவந்தபோதிலும், கடந்த சில வருடங்களாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வன்முறைகள் ஏதும் வெடிக்காமல் இரு தரப்பும் அமைதி காத்துவந்தன.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக மிசோரமுக்கு உட்பட்ட பகுதியில் அஸ்ஸாம் போலீஸார் முகாமிட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சில காலம் தணிந்து காணப்பட்ட இரு மாநில மோதல் மீண்டும் மெல்லத் தீவிரமடையத் தொடங்கியது. மிசோரமுக்கு சொந்தமான பகுதிகளை அஸ்ஸாம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோல், பதிலுக்கு அஸ்ஸாமும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மிசோரம் சட்டவிரோதமாக நுழைந்து ஆக்கிரமிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டியது. அது முதல் இரு தரப்பும் மீண்டும் தங்களுக்குள் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கின. அதன் காரணமாக, சில மாதங்களாகவே இரு மாநில எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவந்தது.

அஸ்ஸாம் - மிசோரம்
அஸ்ஸாம் - மிசோரம்

ஞாயிற்றுக்கிழமை இரவு இரு மாநில எல்லைப்பகுதியில் வசித்துவரும் எட்டு விவசாயிகளின் குடிசைகளை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இரு மாநில அதிகாரிகளும் போலீஸாரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவந்தனர். அதையடுத்து, நேற்று காலை மிசோரம் மாநில நிர்வாகம் 6.5 கிலோமீட்டர் பகுதி இடத்தை ஆக்கிரமித்ததாகக் கூறிக்கொண்டு அந்தப் பகுதியை மீட்க, அஸ்ஸாமின் காவலர்கள் சச்சார் மாவட்ட எல்லைக்கு வந்திருக்கின்றனர். அப்போது மிசோரம் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால், இரு மாநில காவலர்களுக்கும் இடையே எல்லைப் பகுதியில் பயங்கர மோதல் வெடித்தது.

தொடர்ந்து, இரு தரப்பினரும் எல்லைப் பகுதிகளிலிருந்து வரும் எதிர்த் தரப்பு அரசு வாகனங்களைத் தாக்கிவந்தனர். அப்போது, வைரெங்டேயில் எல்லைப் பகுதியில் இரு மாநில காவலர்களுக்கு இடையே வெடித்த வன்முறையில் அஸ்ஸாம் காவலர்கள் ஐந்து பேர் மிசோரம் காவலர்களால் கொல்லப்பட்டனர். அதேபோல், 50-க்கும் மேற்பட்ட அஸ்ஸாம் காவலர்கள் இந்த மோதலில் படுகாயமடைந்தனர். முன்னதாக இரண்டு நாள்களுக்கு முன்பு, இரு மாநில எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஷில்லாங்கில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், தற்போது வெடித்துள்ள மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மிசோரம் காவலர்களின் தாக்குதலில் உயிரிழந்த ஐந்து காவலர்களில் அஸ்ஸாமின் கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிம்பல்கர் வைபவ் சந்திரகாந்த்தும் ஒருவர். அஸ்ஸாம் காவலர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டரில், ``அஸ்ஸாம்-மிசோரம் எல்லையில் நமது மாநிலத்தின் அரசியலமைப்பு எல்லையைப் பாதுகாக்கும் முயற்சியில், ஆறு துணிச்சலான ஜவான்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருப்பதைத் தெரிவிப்பதில் நான் மிகுந்த வேதனையடைகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஆனால், மிசோரம் அமைச்சர் லால்சாம்லியானா சம்பவம் குறித்துக் கூறுகையில், ``திங்கள் அன்று 11:30 மணியளவில் 200 அஸ்ஸாம் காவலர்கள் வைரெங்டே பகுதிக்கு வந்து, அங்கு பணியிலிருந்த மத்திய ரிசர்வ் படையினரை அங்கிருந்து விரட்டிவிட்டு, சி.ஆர்.பி.எ.ஃப் சோதனைச்சாவடியை வலுக்கட்டாயமாக மூடியதால்தான் மோதல் ஏற்பட்டது. அஸ்ஸாம் காவலர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மிசோரம் செல்லும் வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும், பிரச்னையைத் தீர்க்க முயன்ற எங்கள் அதிகாரிகளின் கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை. எங்கள் காவலர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளையும் கையெறி குண்டுகளையும் வீசி, சுமார் 4:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதனால்தான் பதிலுக்குத் தாக்கினோம்" என்று விளக்கமளித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், எல்லை மோதலில் அஸ்ஸாம் காவலர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதையடுத்து, மிசோரம் காவலர்கள் கைதட்டி மகிழ்ந்து களித்து மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி பிரச்னையின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா தனது ட்விட்டரில், ``அஸ்ஸாம் காவலர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், மிசோரம் காவலர்கள் இதைக் கொண்டாடிக்கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், இவ்வளவு பெரிய வன்முறைச் சம்பவம் அரங்கேறியிருப்பதால், மத்திய அரசு உடனடியாக இரு மாநில எல்லைப் பிரச்னையைக் கட்சி சார்பின்றி, நடுநிலையாகச் செயல்பட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் தலைவர்கள் பலரும் முன்வைத்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு