Published:Updated:

ஊசலாடும் பாஜக... பலம் தேடும் காங்கிரஸ்... கவனம்பெறும் ஆம் ஆத்மி! - கோவா தேர்தல் கள நிலவரம் என்ன?

கோவா தேர்தல் களம்

பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பிரதானமாக மோதிக்கொள்ளும் கோவா தேர்தல் களத்தில், மம்தாவும் மாநிலக் கட்சிகளும் மல்லுக்கட்டுகின்றன! - கோவா தேர்தல் களம் எப்படியிருக்கிறது?!

ஊசலாடும் பாஜக... பலம் தேடும் காங்கிரஸ்... கவனம்பெறும் ஆம் ஆத்மி! - கோவா தேர்தல் கள நிலவரம் என்ன?

பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பிரதானமாக மோதிக்கொள்ளும் கோவா தேர்தல் களத்தில், மம்தாவும் மாநிலக் கட்சிகளும் மல்லுக்கட்டுகின்றன! - கோவா தேர்தல் களம் எப்படியிருக்கிறது?!

Published:Updated:
கோவா தேர்தல் களம்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களில் குறைந்த அளவிலான தொகுதிகளைக் கொண்டது கோவாதான். தொகுதிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேர்தல் பரபரப்பில் எந்தக் குறையுமில்லை. பா.ஜ.க, காங்கிரஸைத் தாண்டி, இந்தியாவின் முக்கியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோவாவில் களமிறங்கியிருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. கோவாவிலுள்ள 40 தொகுதிகளுக்கும், பிப்ரவரி 14-ம் தேதி அன்று வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. கோவா தேர்தல் கள நிலவரம் எப்படியிருக்கிறது?

ஊழல் குற்றச்சாட்டுகளால் தவிக்கும் பா.ஜ.க அரசு!

கடந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சுயேச்சைகள், மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது பா.ஜ.க. கோவா பா.ஜ.க-வின் முகமான மனோகர் பாரிக்கர் முதல்வரானார். 2019-ம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின்னர், பிரமோத் சாவந்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகுதான் கோவா பா.ஜ.க-வுக்கு ஏழரையே ஆரம்பித்தது. தற்போதைய மேகாலயா ஆளுநரும், முன்னாள் கோவா ஆளுநருமான சத்ய பால் மாலிக், கோவா பா.ஜ.க அரசுமீது வெளிப்படையாக ஊழல் குற்றம்சுமத்தினார். பா.ஜ.க எம்.எல்.ஏ அட்டனாஸியோ (Atanasio), பொதுப் பணித்துறை அமைச்சர் தீபக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதோடு, அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளும் ஊழல் குற்றம்சுமத்த, ஆட்டம் கண்டது பிரமோத் சாவந்த் அரசு.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Twitter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கோவாவில், பா.ஜ.க அரசின் கத்தோலிக்க முகமாக இருந்த அமைச்சர் மைக்கேல் லோபோ, பா.ஜ.க-விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். கூடவே, பல முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸுக்குத் தாவியதும் பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் பா.ஜ.க-வை வளர்த்தெடுத்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு, இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மறுத்தது பா.ஜ.க. இதனால், கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய உத்பல், சுயேச்சையாக பனாஜி தொகுதியில் போட்டியிடுகிறார். தலைநகர் பனாஜியைச் சுற்றியுள்ள சில தொகுதிகளில், பா.ஜ.க-வின் வாக்குகளை உத்பல் சிதறடிப்பார் எனக் கூறப்படுகிறது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து மாநிலக் கட்சிகளும் விலகியதால், தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது அக்கட்சி.

ஊழல் குற்றச்சாட்டுகள், கட்சித்தாவல்கள் ஒருபுறம் இருக்க, மாநிலத்தின் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது வேலைவாய்ப்பின்மை. மங்கனீசு, இரும்பு சுரங்கங்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் கோவா பா.ஜ.க அரசுக் குத்தகைக்கு ஒதுக்கியிருப்பதாகச் சொல்லி, அங்கிருக்கும் 88 சுரங்கங்களுக்கும் 2018-ம் ஆண்டு தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மாநிலத்தின் ஜிடிபி-யில் 30 சதவிகிதம் பங்கு வகித்த சுரங்கத் தொழில் மூடப்பட்டதால், பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்ததது கோவா. மாநிலத்தின் மற்றொரு பிரதான தொழிலான சுற்றுலாத் தொழிலும், கொரோனா தொற்றால் பாதித்தது. இந்த இரண்டு தொழில்களும் முடங்கியதால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, கோவா மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது. பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான மனோபாவம் மக்களுக்கு ஏற்பட இவையே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டணியில் பலம் தேடும் காங்கிரஸ்!

2017 தேர்தலில், 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், முக்கிய எம்.எல்.ஏ-க்கள் என டஜன் கணக்கில் தலைவர்களைப் பறிகொடுத்ததால், தவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். கோவாவில் அரங்கேறிய சமீபத்திய கட்சித் தாவல்களில், சில முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்திருப்பது, அந்தக் கட்சிக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதோடு, இந்த முறை போட்டியிடும் வேட்பாளர்களிடம், `வெற்றிபெற்றால் கட்சி தாவமாட்டோம்' எனக் கோயிலிலும், தேவாலயத்திலும் வைத்து சத்தியம் பெற்றிருக்கிறது காங்கிரஸ்.

கடந்த முறை பா.ஜ.க ஆட்சியமைக்க முக்கியக் காரணமாக இருந்த மாநிலக் கட்சியான கோவா முன்னணி, இந்த முறை காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருக்கிறது. கோவாவின் தெற்கு பகுதியில் பலமாக இருக்கும் இந்தக் கட்சிக்கு, சுமார் நான்கு சதவிகித வாக்குவங்கி இருக்கிறது. கடந்த முறை 3 தொகுதிகளில் வென்ற இக்கட்சிக்கு, இந்த முறை மூன்று தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது காங்கிரஸ். ஆளும் அரசு மீதிருக்கும் அதிருப்தி, கூட்டணி பலம் ஆகியவற்றை நம்பி கோதாவில் குதித்திருக்கிறது காங்கிரஸ்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி - காங்கிரஸ்

கவனம் பெறும் ஆம் ஆத்மி!

கடந்த தேர்தலில் தனது கணக்கைத் தொடங்காத ஆம் ஆத்மி, இந்த முறை நிச்சயம் சிலபல இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பைப் போலவே இங்கும் `டெல்லி மாடல்' என்பதை முன்வைத்து பிரசாரம் செய்துவருகிறது ஆம் ஆத்மி. ``அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவிகித இடம் உள்ளூர் மக்களுக்கே ஒதுக்கப்படும்; வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்; சுரங்கம், சுற்றுலா தொழிலில் வேலையிழந்தவர்களுக்கு மாதம் ரூ. 5,000 வழங்கப்படும்'' எனக் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறது ஆம் ஆத்மி. ஆளும் அரசு மீதிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கையிலெடுத்து, `கோவாவை, ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்; வேலைவாய்ப்புகளை அதிகரிப்போம்' என அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மல்லுக்கட்டும் மற்ற கட்சிகள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், தன்னை தேசிய அளவிலான தலைவராக முன்னிறுத்திக் கொள்ள, கோவா தேர்தல் களத்தில் குதித்திருக்கும் மம்தா, அங்கு பணத்தை வாரி இறைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோவாவின் முக்கிய இடங்களில் மம்தாவின் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கோவா நாளிதழ்களிலும், திரிணாமுல் காங்கிரஸின் விளம்பரங்கள் தவறாமல் இடம்பெறுகின்றன. சுமார் 11 சதவிகித வாக்குவங்கி கொண்ட மாநிலக் கட்சியான மாகாராஷ்டிரவாடி கோமன்தாக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் மம்தா. 2017-ல், மூன்று தொகுதிகளைக் கைப்பற்றிய இந்தக் கட்சி, பா.ஜ.க ஆட்சியமைக்க உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ காங்கிரஸிலிருந்து விலகி, மம்தாவுடன் இணைந்திருக்கிறார். கோவாவின் முக்கியப் பிரபலங்களையும் கட்சியில் இணைத்திருக்கிறார் மம்தா. இதனால், இந்த கூட்டணி ஒரு சில இடங்களில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

Mamata Banerjee
Mamata Banerjee
AP Photo/Bikas Das

அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில், கூட்டணி ஆட்சியிலிருக்கும் சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் இணைந்து கோவா தேர்தலைச் சந்திக்கின்றன. மகாராஷ்டிரா எல்லையோரத்தில் இருக்கும் கோவா தொகுதிகளில், தேசியவாத காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்கை நம்பி இந்தக் கூட்டணி களமிறங்கியிருக்கிறது.

மாநிலக் கட்சியான கோவா சுராஜ் கட்சி, புதிதாக உதயமான ரெவல்யூஷ்னரி கோயன்ஸ் கட்சியோடு கைகோர்த்திருக்கிறது. ``பிறமாநிலத்தவர்களுக்குக் கோவா மக்கள் அடிமையாக இருக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவருவோம்'' என்ற முழக்கத்தோடு களமிறங்கியிருக்கிறது இந்தக் கூட்டணி. கோவா மக்களின் வேலைவாய்ப்புகளை மற்ற மாநிலத்தவர்கள் பறித்துக்கொள்வதாக, கோவா மக்களிடையே ஒரு எண்ணம் இருக்கிறது. அதனால், இந்தக் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் ஓரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

கள நிலவரம் என்ன?

சிறிய மாநிலமான கோவாவில், அரசியல் கட்சிகளைத் தாண்டி தனி மனிதர்களுக்கான செல்வாக்குதான் அதிகம். அந்த வகையில், தேர்தலையொட்டி நடந்த கட்சி மாறும் படலங்களால் காங்கிரஸ் கட்சி ஓரளவு பலம்பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் அதிருப்தி அலையைச் சமாளிக்க முடியாத பா.ஜ.க, நலத் திட்டங்கள், புதிய வாக்குறுதிகள் மூலம் தப்பிக்க முயன்று கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதையே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி, ``பா.ஜ.க-வை வீழ்த்த, காங்கிரஸை ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றிருக்கிறது. கோவா மாநிலத் தேர்தல் பொறுப்பாளரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும், ``காங்கிரஸை ஆதரிக்கும் எந்தக் கட்சியையும் வரவேற்கிறோம்'' என்றிருக்கிறார். எனவே காங்கிரஸ், அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றும் பட்சத்தில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியால் கோவாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், காங்கிரஸின் வாக்குகளைச் சிதறடிக்கும் சக்தியாக ஆம் ஆத்மி களத்திலிருப்பதால், காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism