Published:Updated:

ஐந்து மாநிலத் தேர்தல்:EXIT POLL முடிவுகள் இருக்கட்டும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கள நிலவரம் என்ன?

ஐந்து மாநிலத் தேர்தல்

ஐந்து மாநிலத் தேர்தல்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கள நிலவரம் என்ன என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை!

ஐந்து மாநிலத் தேர்தல்:EXIT POLL முடிவுகள் இருக்கட்டும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கள நிலவரம் என்ன?

ஐந்து மாநிலத் தேர்தல்: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கள நிலவரம் என்ன என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை!

Published:Updated:
ஐந்து மாநிலத் தேர்தல்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் மார்ச் 7-ம் தேதியோடு முடிந்துவிட்டன. தேசிய ஊடகங்கள் பலவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. கருத்துக்கணிப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு எண்களைச் சொல்கின்றன. இந்த நிலையில், ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக முக்கியக் கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன... கள நிலவரம் என்னவாக இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

உத்தரப்பிரதேசம் - வலுப்பெற்ற சமாஜ்வாடி... விழித்துக்கொண்ட பா.ஜ.க!

உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரசாரங்களில் ஆரம்பம் முதலே, `300 இடங்களுக்கும் மேல் கைப்பற்றுவோம்' என பா.ஜ.க தலைவர்கள் முழங்கிவந்தாலும், கட்சிக்குள்ளாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக வரவில்லையாம். நான்கு கட்ட தேர்தலுக்குப் பின்னர், பா.ஜ.க தொகுதிவாரியாக மேற்கொண்ட ஆய்வுகளில், ``இஸ்லாமியர்கள், ஓபிசி பிரிவினர், தலித்துகளின் வாக்குகள் சமாஜ்வாடி கூட்டணிக்கே சென்றிருக்கின்றன. ராஷ்டிரிய லோக் தளம் கட்சியோடு, சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது விவசாயிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது'' என்பது தெரியவந்ததாகச் சொல்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள்.

உ.பி தேர்தல்
உ.பி தேர்தல்

இதையடுத்து கடைசி மூன்று கட்ட வாக்குப்பதிவுகளில் சில முக்கியத் திட்டங்களை வகுத்திருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையிலான திட்டங்களை வகுத்துச் செயல்பட்டிருக்கிறது. கடைசி மூன்று கட்ட வாக்குப்பதிவின் மூலமே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கான செல்வாக்கை பா.ஜ.க மீட்டெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மாயாவதியைச் சேர்த்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தையும் பா.ஜ.க வைத்திருப்பதாகத் தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``உ.பி-யில் மாயாவதியின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது'' என்று பேசியது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான அடித்தளம்தான் என்கிறார்கள். அமித் ஷாவின் கருத்துகளுக்கு மாயாவதியும் நன்றி கூறியிருக்கிறார்.

உ.பி தேர்தல் களத்தை உற்றுநோக்கும் சிலர், ``ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெரிதாகப் பிரிக்கவில்லை. சமாஜ்வாடி கூட்டணிக்கே இஸ்லாமியர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் தலித் மக்களின் வாக்குகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி என இரு தரப்பினருக்கும் பிரிந்து சென்றிருப்பதாகத் தெரிகிறது. இந்த முறை பா.ஜ.க வெற்றிபெற்றாலும், கடந்த முறை போல 300 இடங்களெல்லாம் கிடைக்காது. சமாஜ்வாடி வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும். காங்கிரஸைப் பொறுத்தவரை ஒற்றை இலக்கத்தைத் தாண்டுவதே கடினம்தான்'' என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பஞ்சாப் - சரிந்த வாக்குப்பதிவு... கவலையில் கட்சிகள்!

பஞ்சாப்பில், பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக 117 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2002 தேர்தலுக்கு (65.14%) பின்னர் இந்தத் தேர்தலில்தான் மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. கடந்த 2017 தேர்தலில் 77.4 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு, இந்த முறை 71.9 சதவிகிதமாகக் குறைந்திருப்பது அரசியல் கட்சிகளைக் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. குறிப்பாக `ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 40 சீட்கள் வரை மட்டுமே கிடைக்கும்' எனத் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் சொல்கின்றன.

`பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?' என்ற திட்டமிடுதலில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் தலையிடாமல் பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமைதியாக ஒதுங்கி நிற்பது பல யூகங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும், ``உட்கட்சிப்பூசல் காரணமாகத்தான் கட்சி சரிவைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க-விலிருந்து நமது கட்சிக்குத் தாவிய சித்து, அமரீந்தர் சிங்கை கட்சியைவிட்டு அனுப்பினார். தற்போது நம்மை ஆட்சியைவிட்டே அனுப்பிவிடுவார்போல. அவர் நம் கட்சிக்குள் இருந்துகொண்டே எதிர்க்கட்சிகளுக்கு வேலை செய்கிறார்'' என்று புலம்பிவருகிறார்களாம்.

ஆனால் மூத்த நிர்வாகிகள் சிலர், ``வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பது, எங்கள் ஆட்சிமீது மக்கள் அதிருப்தியில் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஆட்சி மாற்றம் வேண்டுமென்றால், மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்திருப்பார்கள்'' என்று சமாளித்துவருகிறார்கள்.
பஞ்சாப் தேர்தல் களம்
பஞ்சாப் தேர்தல் களம்

28 தொகுதிகளைக்கொண்ட மால்வா பகுதியில்தான் பலமாக இருந்தது ஆம் ஆத்மி. ஆனால், அந்தப் பகுதியில் கடந்த தேர்தலைவிட வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்திருப்பது, அந்தக் கட்சியினரை வருத்தமடையச் செய்திருக்கிறது. மேலும், ``ஆம் ஆத்மி வெற்றிபெற்றுவிடும் என்றெல்லாம் கருத்துக்கணிப்புகள் சொல்லப்படுகின்றன. அதெல்லாம் மிகைப்படுத்துதலாகவே தெரிகிறது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே தோன்றுகிறது. பா.ஜ.க கூட்டணி பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சிரோமணி அகாலி தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி கணிசமான வாக்குகளைப் பிரித்திருக்கின்றன. ஆகையால் தொங்கு சட்டசபை ஏற்படும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன'' என்கிறார்கள் பஞ்சாப் அரசியல் நோக்கர்கள். இருந்தும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் ஆம் ஆத்மிக்குச் சாதகமாக வந்திருப்பதால், உற்சாகத்தில் இருக்கிறார்கள் அந்தக் கட்சியின் தொண்டர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவா - தொங்கு சட்டமன்றம் நிச்சயம்!

கோவாவில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்று ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில், 78.94 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கின்றனர். கோவா மக்களின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்த மனோகர் பரிக்கார் இல்லாமல் பா.ஜ.க சந்திக்கும் முதல் தேர்தல் இது. மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு சீட் வழங்காததால் கட்சியைவிட்டு விலகினார். இதனால், தலைநகர் பனாஜி உள்ளிட்ட சில தொகுதிகளில் சறுக்கலைச் சந்திக்கும் பா.ஜ.க என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கோவா தேர்தல் களம்
கோவா தேர்தல் களம்

ஆட்சிக்கு எதிரான மனநிலையும், கோவா முன்னணியுடன் அமைத்த கூட்டணியும் காங்கிரஸுக்கு அதிக இடங்களைப் பெற்றுத்தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக பிரசாரங்களில் கலக்கிய திரிணாமுல் காங்கிரஸ், தற்போது பெரிய தாக்கம் ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது. கோவா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்களுக்குத் தேர்தலில் உதவிய பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீமை வெளிப்படையாகவே விமர்சித்துவருவதும் குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸோடு கூட்டணியிலிருக்கும் மகாராஷ்டிரவாடி கோமந்தா கட்சி சில இடங்களைக் கைப்பற்றும். ஆம் ஆத்மி, குறைந்தது இரண்டு இடங்களிலாவது வெற்றிபெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. `வாக்குப்பதிவுக்கு முன்பாகச் சொன்னதுபோலவே கோவாவில் தொங்கு சட்டமன்றம்தான் நிலவும்' என இப்போதும் அடித்துச் சொல்கிறார்கள் கோவா அரசியல் பார்வையாளர்கள்.

உத்தரகாண்ட் - குழிபறிக்கும் சொந்தக் கட்சியினர்?

பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்த உத்தரகாண்ட்டில், 65.4 சதவிகித மக்கள் வாக்களித்திருந்தனர். தேர்தலுக்கு முன்பாகவே ஆளும் பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல்கள் இருந்துவந்தன. தேர்தலுக்குப் பின்பாக அது அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட மூன்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும், புதிதாக நிறுத்தப்பட்ட ஒரு பா.ஜ.க வேட்பாளரும் சொந்தக் கட்சியினர்மீது குற்றம்சாட்டியிருக்கின்றனர். தங்களைத் தோற்கடிப்பதற்காக, எதிர்க்கட்சியினருக்கு வேலை செய்து பா.ஜ.க-வினரே குழிபறித்துவிட்டதாகக் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக, லக்சர் தொகுதி எம்.எல்.ஏ பிரதீப் குப்தா, ``மாநில பா.ஜ.க தலைவர் மதன் கௌசிக் தனக்கு எதிராக நின்ற பகுஜன் சமாஜ் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வேலைகளைச் செய்தார்'' என்று குற்றம்சாட்டிப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

உத்தரகாண்ட் தேர்தல் களம்
உத்தரகாண்ட் தேர்தல் களம்
Twitter

இதனால், தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க-வினர் பலரும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியதுபோல, தேர்தலுக்குப் பின்னும் தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், அது காங்கிரஸுக்கு வலுசேர்க்கும். அதேநேரத்தில், பா.ஜ.க-வும் கடும் போட்டி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மணிப்பூர் - ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பு?

மணிப்பூரில் பிப்ரவரி 28-ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில், 88.63 சதவிகித மக்கள் வாக்களித்தனர். மார்ச் 5-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 76 சதவிகிதம் பேர் வாக்கு செலுத்தியிருந்தனர். வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களிலும், ஆளும் பா.ஜ.க-வினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டிவருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். மணிப்பூரிலும் தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதால், மாநிலக் கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.

கடந்த முறை பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு மாநிலக் கட்சிகளான நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் கைகொடுத்தன. ஆனால் இந்த முறை, இந்த இரண்டு கட்சிகளுமே பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது. வாக்குப்பதிவில் அதிக அளவிலான மக்கள் ஆர்வமுடன் வாக்கு செலுத்தியதால், மணிப்பூரில் ஆட்சி மாற்றம் நிகழக்கூட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

மணிப்பூர் தேர்தல் களம்
மணிப்பூர் தேர்தல் களம்
ஐந்து மாநிலங்களின் தற்போதைய கள நிலவரம் இதுவாகத்தான் இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த அளவுக்குத் தேர்தல் முடிவுகளோடு ஒத்துப்போகும் என்பது தெரியவில்லை. எந்த மாநிலத்தில், எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்பதையும் இப்போதே உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் மார்ச் 10-ம் தேதி விடை கிடைத்துவிடும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism