Published:Updated:

பாஜக Vs காங்கிரஸ்: `கட்சித்தாவல்; மத அரசியல்' - பரபரக்கும் உத்தரகாண்ட் தேர்தல் கள நிலவரம் என்ன?!

உத்தரகாண்ட் தேர்தல் களம் ( Twitter )

பா.ஜ.க., காங்கிரஸ் நேரடியாக மோதிக்கொள்ளும் உத்தரகாண்ட் தேர்தல் களம் எப்படியிருக்கிறது... இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மியின் வளர்ச்சி எப்படியிருக்கும்?! - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

பாஜக Vs காங்கிரஸ்: `கட்சித்தாவல்; மத அரசியல்' - பரபரக்கும் உத்தரகாண்ட் தேர்தல் கள நிலவரம் என்ன?!

பா.ஜ.க., காங்கிரஸ் நேரடியாக மோதிக்கொள்ளும் உத்தரகாண்ட் தேர்தல் களம் எப்படியிருக்கிறது... இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மியின் வளர்ச்சி எப்படியிருக்கும்?! - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

Published:Updated:
உத்தரகாண்ட் தேர்தல் களம் ( Twitter )

ஐந்து மாநிலத் தேர்தல்களில், தேசியக் கட்சிகளான பா.ஜ.க-வும், காங்கிரஸும் நேரடியாக மோதிக்கொள்ளும் தேர்தல் களமாக இருக்கிறது உத்தரகாண்ட். இந்த இரண்டு கட்சிகளுமே கோஷ்டிப்பூசல், கட்சித்தாவல்களால் தவித்துக்கொண்டிருப்பதால், உத்தரகாண்டிலும் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. மொத்தம் 70 தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்டில், பிப்ரவரி 14-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. உத்தரகாண்ட் தேர்தல் களத்தில் முந்தி நிற்பது எந்தக் கட்சி?

உத்தரகாண்ட் முதல்வர் - புஷ்கர் தாமி
உத்தரகாண்ட் முதல்வர் - புஷ்கர் தாமி
Twitter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிருப்தியால் அல்லல்படும் பா.ஜ.க!

2017 சட்டமன்றத் தேர்தலில் 57 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. `வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட மாநிலத்தின் பிரதான பிரச்னைகளை பா.ஜ.க அரசு சரிசெய்யவில்லை' என்ற அதிருப்தி உத்தரகாண்ட் மக்களிடையே இருந்துவருகிறது. மேலும், கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெற்றிருந்த சமயத்தில், ஹரித்வாரில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில், சுமார் 70 லட்சம் பேர் கலந்துகொள்ள அனுமதித்தது பா.ஜ.க அரசு. அதோடு, அங்கு வந்தவர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனைகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின. எனவே, கொரோனாவை சரியாகக் கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் ஆளும் பா.ஜ.க அரசுமீது இருந்துவருகிறது. இதற்கிடையில், மாநில பா.ஜ.க தலைவர்களிடையே நடந்துவந்த பனிப்போரால், கட்சி இரண்டாகச் செயல்பட்டுவந்தது.

இந்த அதிருப்திகளைச் சமாளிக்க, கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டு முதல்வர்களைப் புதிதாக நியமித்துவிட்டது பா.ஜ.க மேலிடம். அதிருப்தியின் காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் ஆட்சிசெய்த திரிவேந்திர சிங் ராவத்தை மாற்றிவிட்டு, தீரத் சிங் ராவத்தை முதல்வராக்கியது பா.ஜ.க தலைமை. உட்கட்சிப்பூசல் காரணமாக, 116 நாள்களில் அவரும் மாற்றப்பட்டு, புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக்கப்பட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையில் கடந்த அக்டோபரில், பா.ஜ.க-விலிருந்து விலகிய உத்தரகாண்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் யஷ்பால் ஆர்யா, தனது மகனும் எம்.எல்.ஏ-வுமான சஞ்சீவ் ஆர்யாவுடன் காங்கிரஸில் இணைந்தார். தொடர்ந்து ஜனவரியில், மாநில அமைச்சரும் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான ஹரக் சிங் ராவத், பா.ஜ.க-விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துவிட்டார். இதேபோல பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகளும் காங்கிரஸில் இணைந்துவருவது, அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹரீஷ் ராவத்
ஹரீஷ் ராவத்
Twitter

உட்கட்சிப்பூசலால் தவிக்கும் காங்கிரஸ்!

கடந்த முறை கைவிட்ட ஆட்சி அதிகாரத்தை இந்த முறை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் வேலைகளில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். ஆனால், கட்சிக்குள் தொடர்ந்து ஏற்பட்டுவரும் கோஷ்டி மோதல்களால் தவித்துக்கொண்டிருக்கிறது உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சி. முன்னாள் உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துடன், மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால் ஆகியோர் மோதலில் ஈடுபட்டுவந்தனர். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, கட்சித் தலைமை எடுத்த முயற்சிகள் ஓரளவுக்குப் பலனளித்திருக்கிறது. இருந்தும், அடுத்தடுத்து உட்கட்சிப்பூசல்கள் ஏற்பட்டுவருவது காங்கிரஸுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது.

மாநில காங்கிரஸின் மகளிரணித் தலைவர் சரிதா ஆர்யா உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்திருப்பது காங்கிரஸுக்குப் பின்னடைவை உண்டாக்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கள நிலவரம் என்ன?

பா.ஜ.க அரசு மீதிருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, மக்களிடம் வாக்குகளைச் சேகரித்துவருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான ஹரீஷ் ராவத் மீது உத்தரகாண்ட் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் அந்தக் கட்சிக்குச் சாதகமாக இருக்கிறது.

இருந்தும், உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலமான உத்தரகாண்டிலும், மத அரசியல் மூலம் வாக்குகள் சேகரிக்க முயன்றுவருகிறது பா.ஜ.க. உத்தரகாண்டில், 25-28% பேர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், சுமார் 35% பேர் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். `இந்த இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களில், பெரும்பாலானவர்கள் பா.ஜ.க-வின் பக்கமே நிற்பார்கள்' என்கிறார் அரசியல் பார்வையாளர். இது பா.ஜ.க-வுக்கு பலம் சேர்க்கும் விஷயமாக இருக்கிறது.
பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

உத்தரகாண்டில் புதிதாகக் கால்பதித்திருக்கும் ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெறும் என்கின்றன கருத்துக்கணிப்புகள். புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் சிதறடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், வெற்றி யார் பக்கம் என்பதைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உத்தரகாண்டில் தொங்கு சட்டசபை ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது.

சில கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸும், பல கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க-வும் முந்தி நிற்கின்றன. ஆனால், அனைத்துக் கருத்துக்கணிப்புகளிலும் இரண்டு கட்சிக்குமான வாக்கு வித்தியாசம் என்பது மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே, உத்தரகாண்ட் தேர்தல் களத்தில் வெற்றிபெறப்போவது எந்தக் கட்சி என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism