Published:Updated:

கேளம்பாக்கம் அருகே திபெத்தியர்கள் 5 பேர் கைது! - 11 பேரைத் தேடும் போலீஸார்

சீன அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மாமல்லபுரம் செல்ல முயன்ற திபெத்தியர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை (11ம் தேதி) முதல் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக நாளை மதியம் சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், விமானநிலையத்திலிருந்து கிண்டி ஹோட்டலுக்கு சாலைமார்க்கமாகச் செல்ல இருக்கிறார். அங்கிருந்து மாலையில் மாமல்லபுரம் செல்கிறார். இதற்காக சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது.

சீரமைக்கும் பணி
சீரமைக்கும் பணி

இந்தநிலையில், தமிழகம் வரும் சீன அதிபருக்கு திபெத் போராளிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து போலீஸார் சோதனையைத் தீவிரப்படுத்தினர்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கறுப்புக் கொடி காட்டத் திட்டமிட்டிருந்த கல்லூரி பேராசிரியர் டென்சிங் நோர்பு உள்ளிட்ட 8 பேர் கேளம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், மாமல்லபுரம் அருகே வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். கேளம்பாக்கம் காவல்நிலையத்துக்குட்பட்ட கோவளம் பகுதியில் மாமல்லபுரம் நோக்கிச் சென்ற கார் ஒன்றை போலீஸார் வழிமறித்திருக்கிறார்கள்.

நேரு, `அங்கிள்' ராகுல், மோடி, 40 நூறு ரூபாய்..! - மாமல்லபுரம் சீனியர் கைடின் நினைவுகள்

அந்த காரில் 5 பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேனர்கள், திபெத் கொடி, லேப்டாப் உள்ளிட்டவை இருந்தன. அந்த பேனர்களில், `திபெத்தை விட்டு சீனாவே வெளியேறு', `60 வருடங்களாக எங்களை ஆட்டிப்படைத்த சீனாவே திபெத்தை விட்டு வெளியேறு' போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் கேளம்பாக்கம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், திபெத் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 11 பேர் மாமல்லபுரத்துக்குள் நுழையக் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து போலீஸார் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 மோடி -  ஜின்பிங்
மோடி - ஜின்பிங்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். திபெத் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட ஒருமணி நேரத்தில், அந்த செக்போஸ்டை முதலமைச்சர் கடந்து சென்றிருக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள், போலீஸாருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது திபெத் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த 11 பேரையும் கைது செய்ய போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.