Published:Updated:

`5 டிரில்லியன் பொருளாதார இலக்கு!’- நிர்மலா சீதாராமன் உறுதி

2024 - 25-ம் ஆண்டில் 5 டிரில்லியன் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தேசிய உட்கட்டமைப்பு திட்ட மையத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ``சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்வது குறித்து கூறியிருந்தார். இதையடுத்து உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஏதுவாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நான்கு மாதகாலத்துக்குள் 70 விதமான துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சுமார் 102 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.

 நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கடந்த 6 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ரூ.51 லட்சம் கோடி செலவு செய்துள்ளன. புதிய திட்டங்களில், மத்திய, மாநில அரசுகள் தலா 39 சதவிகித திட்டங்களையும் தனியார் நிறுவனங்கள் 22 சதவிகித திட்டத்தையும் செயல்படுத்தும். ரயில்வே, கல்வி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. எரிசக்தி துறையில் ரூ. 25 லட்சம் கோடி மதிப்பிலான திட்டமும், சாலைத்துறையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டமும், ரயில்வேயில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 2024 - 25-ம் ஆண்டில் 5 டிரில்லியன் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும்” என்றார்.