கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல், ``கட்சித் தொண்டர்களிடம் பொதுப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டாம்’’ என்றும், ``லவ் ஜிஹாத் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்’’ என்றும் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மங்களூருவில் நேற்று நடைபெற்ற ‘பூத் விஜயா அபியானா’ நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம் பேசிய நளின் குமார் கட்டீல், ``சாலைகள், கழிவுநீர் போன்ற சிறிய பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். விதான் சவுதாவுக்குள் (கர்நாடக சட்டமன்றம்) வேதவியாசர் கை ஓங்கவில்லை என்று விவாதிக்க வேண்டாம்.

இது போன்ற பிரச்னையை எழுப்ப நளின் குமார் கட்டீலுக்கு உரிமை இல்லை என்று கூறாதீர்கள். அதோடு, நளின் குமார் கட்டீலிடமிருந்து நீங்கள் தங்கத்தைப் பெறப்போவதும் இல்லை. ஆனால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் எனில், நீங்கள் லவ் ஜிகாத்தை நிறுத்த விரும்புகிறீர்கள் எனில், நமக்கு பா.ஜ.க தேவை. லவ் ஜிஹாத்திலிருந்து விடுபட பா.ஜ.க தேவை. எனவே, அதில் கவனம் செலுத்துங்கள்" என்றார்.

நளின் குமார் கட்டீலின் இந்தக் கருத்து பேசுபொருளானதையடுத்து, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ``அவர்கள் வளர்ச்சி குறித்து எதையும் கண்டுகொள்ளவில்லை... ஆனால், வெறுப்பைக்கொண்டு நாட்டை பிளவுபடுத்துகிறார்கள்" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.