Published:Updated:

`மன்மோகன்சிங் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுங்கள்!’ - மோடிக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்

தற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர, மோடி அரசுக்கு முழுமையான முன்மாதிரி தேவைப்படுகிறது.

பரகலா பிரபாகர்
பரகலா பிரபாகர்

`பொருளாதார மந்தநிலை’ நிலவுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு ஜிஎஸ்டி-யும் ஒரு முக்கியக் காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,``நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி, தொழில்துறையினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் என நான் நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

நான் நினைத்தபடி ஜிஎஸ்டி தொழில்துறையினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், பொருளாதார மந்தநிலை குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், `நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கம் புதிய கொள்கைகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

`குறைபாடுகள் இருக்கலாம்;  ஆனால் இதுதான் சட்டம்!' - வருத்தம் தெரிவித்த நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக `தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ``நேருவின் சோஷியலிசத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார மாதிரிகளை பா.ஜ.க அரசாங்கம் பின்பற்ற வேண்டும். தற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர, மோடி அரசுக்கு முழுமையான முன்மாதிரி தேவைப்படுகிறது. இல்லாவிட்டால், தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் வழியாக மேலோட்டமான பொருளாதார கருத்துகள் மட்டுமே பரப்பப்படும். எப்படியாக இருந்தாலும், பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்கிற அறிகுறிகளை இந்த அரசாங்கம் வெளியிடவில்லை.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பொருளாதாரம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை மத்திய அரசுக்கு இருக்கிறது எனக் கருதுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார பாதையை மாற்றியமைத்ததுதான் தற்போது பெரும் சவாலை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். பரகலா பிரபாகர், ஒரு பொருளாதார வல்லுநர். அதுமட்டுமின்றி, ஆந்திர அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.