Election bannerElection banner
Published:Updated:

பெரிய மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்கள்! -ராமதாஸ் கோரிக்கை வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? #LongRead

ராமதாஸ்
ராமதாஸ்

தமிழகத்தை மூன்று மாநிலமாகப் பிரிக்க வேண்டும் எனவும், மேலும், நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களை இரண்டு, மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சென்னை, மதுரை, கோவை என மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பெரிய மாநிலங்களாக இருக்கும்பட்சத்தில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இது, தேர்தல் நேரத்தில் வீண் வன்முறைக்கு வழிவகுத்துவிடுகிறது. அதுமட்டுமல்ல பெரிய மாநிலங்களை நிர்வகிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதனால் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறதே. ஒவ்வொரு பகுதிக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்றால் அவற்றை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்று சிறிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசியத்தையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

தன்னிகரில்லா தமிழ்நாடு
தன்னிகரில்லா தமிழ்நாடு
விகடன்

தேர்தல் முடிந்ததும் பா.ம.க நிறுவனர் வெளியிட்டுள்ள இத்தகைய அறிக்கை அரசியல் தளத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுபோல தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டுமா? அது வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?

ராமதாஸ் வாழ்க்கை வரலாறு: மக்கள் மருத்துவர் முதல் பா.ம.க நிறுவனர் வரை..! - முழுமையான தொகுப்பு!

பா.ம.க-வின் சமூகநீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவிடம் பேசினோம்...

“தமிழகத்தைச் சென்னை, மதுரை, கோவை என மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது என்றுதான் எங்கள் ஐயா கூறியுள்ளார். 12 லட்சம் மக்கள் இருந்தால் அப்பகுதியைத் தனி மாவட்டமாக உருவாக்கலாம் என்பதன் அடிப்படையில் தான் தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நம்மைவிடக் கூடுதலாக மக்கள் தொகையைக் கொண்ட மேற்குவங்கத்தில் 23 மாவட்டங்கள்தான் இருக்கின்றன. இதனால் தான் மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் தான் அங்கு வன்முறை அதிகரித்து அமைதியின்மை நிலவுகிறது. ஒருவேளை மேற்கு வங்கத்தில் கூடுதல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருந்தால் நம்மைப்போல ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்தி முடித்திருக்கலாம். பல வன்முறைகளுக்கு வழி இல்லாமல் இருந்திருக்கும். அதேபோல உத்தரப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தை ஐந்து மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதுமட்டுமல்ல மகாராஷ்டிராவை 5 மாநிலமாகப்பிரிக்க வேண்டும் எனவும் குஜராத், கர்நாடகாவை மூன்று மாநிலமாகவும் பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் இருக்கின்றன.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து பிரித்த ஜார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா என்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அங்கே மிகப்பெரிய வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் சென்னை மற்றும் சென்னையைச் சார்ந்து 80 சதவிகிதமும், கோவையைச் சார்ந்து 15 சதகிவிதமும், தென்மாவட்டங்களில் வெறும் 5 சதவிகிதமுமே இருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்படித் தொழில் வளர்ச்சி குறைந்த தென்மாவட்டங்களைத் தனி மாநிலங்களாக அமைத்து மதுரையைத் தலைநகராக அறிவித்தால், வளர்ச்சி குறைந்த மாநில வளர்ச்சிக்கு என்று மத்திய அரசு குறிப்பிட்ட தொகை ஒதுக்கும். அந்த திட்டத்தின் கீழ் பெரும் நிதி உதவி பெற்று பெரும் தொழில் வளர்ச்சி அடைந்த பகுதிகளாகத் தென் மாவட்டங்கள் மாறும். நீதித்துறையைப் பொறுத்தவரையில் தமிழகம் வட, தென் மாவட்டங்கள் என இரண்டாகத்தான் இருக்கிறது. இப்படி இரண்டு நீதித்துறை மாநிலமாகப் பிரிக்கப்பட்ட போது சென்னையிலிருந்த வழக்கறிஞர்கள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அவை எதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தற்போது நீதித்துறையில் தமிழகம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பது நமக்கே கண்கூடாகத் தெரிகிறது.

தமிழக அரசு
தமிழக அரசு

தமிழகத்தில் பா.ம.க ஒன்று சொன்னால் அது சாதிக்காக, தலித்துக்கு எதிராக, அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தல் பேரத்திற்காகச் சொல்கிறது என எல்லோரும் சொல்வார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பா.ம.க சொன்ன கருத்துகளை எடுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் முற்போக்கு நோக்கில், ஆக்கப்பூர்வமான கருத்துகளாகத்தான் இருந்திருக்கும். கட்டாயம் பிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மக்கள் கருத்தைக் கேட்டு ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்றுதான் பா.ம.க சொல்கிறது. அதில் அரசியல் நோக்கம் இருக்குமோ என்று பார்க்க வேண்டாம்” என்றார்

நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்: 

“முழுக்க முழுக்க ஐயா ராமதாஸ் கவன ஈர்ப்பிற்காகப் பேசிவருகிறார். இது நடை முறை சாத்தியமில்லை என்பது அவருக்கே தெரியும். தமிழகத்தில் சாதிய வேறுபாடுகள் இன்னும் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பறித்துக்கொண்டு அவற்றை யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு மாற்றி வருகிறது. இந்தியாவிலே மற்ற மாநிலங்களை விடத் தனித்துவமாக இருப்பது தமிழ்நாடுதான். நமக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் போது தமிழகத்தை மூன்று மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று பேசுவது கதைக்கு உதவாது என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். பா.ம.க இப்போது சொல்வதை பா.ஜ.க நடைமுறைப்படுத்த முயன்றாலும் அதன் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். இதனால் வளர்ச்சி ஏற்படும் என்று சொல்கிறார்களே தவிர என்ன மாதிரியான வளர்ச்சி என்று சொல்ல மறுக்கிறார்களே. இதன் மூலம் தமிழகத்திற்கு என்ன வளர்ச்சி என்ன என்று தெளிவாகச் சொல்ல வேண்டும் இல்லையா. எல்லா வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசு பிரித்தால் மட்டும் வளர்ச்சி அடைய விட்டுமா என்ன?

இடும்பாவனம் கார்த்திக்
இடும்பாவனம் கார்த்திக்

தேர்தல் முன்பாக இதைப் பேசியிருந்தால் இவர்கள் நிலைமை என்ன என்று இந்த நேரத்திற்கெல்லாம் தெரிந்திருக்கும். தேர்தல் முடிந்துவிட்டது. தன்மீது பார்வை பட வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவர் ராமதாஸ் பேசியிருக்கிறார். இப்போது அவர் நினைத்தது போல அவர் குறித்து எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நம்மைப்போலவே அவருக்கும் தெரியும்” என்றார்

ராமதாஸ் கருத்து தொடர்பாக சமூகச் செயற்பாட்டாளர் தியாகு...

“சட்டம் இயற்றும் உரிமையோ, நாம் விரும்பும் திட்டங்களைச் செயல்படுத்திக்கொள்ளும் உரிமையோ நம்மிடம் இல்லை. இப்படி மாநிலத்திற்கான இறையாண்மையே இல்லாமல் தவிக்கும் தமிழகத்தை ராமதாஸ் சொல்வது போல மூன்றாகப் பிரித்தால் மட்டும் கிடைத்துவிடுமா என்ன? தேசிய இனச் சிக்கலை வெறும் நிர்வாகப் பிரச்னையாக காட்டுவது ஜன்பத் மண்டலங்கள் என்ற பெயரில் தனித்தனி மாவட்டங்களாகப் பிரிப்பது, மொழி வழி மாநிலமாக ஒழித்துக் கட்டுவது என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டங்களைத்தான் இவர் எதிரொலிக்கிறார். எத்தனை மாநிலங்களாகப் பிரிப்பது என்பது வேறு பிரச்னை. ஆனால், தமிழர் என்று இருக்கும் ஒரு தேசிய இனத்தின் அடையாளமாக இருக்கும் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்ற சிந்தனையே தமிழர் நலனுக்கு விரோதமானது. அதனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க-வின் திட்டத்திற்கு ராமதாஸ் அறிந்தோ, அறியாமலோ துணை போகிறார் என்றுதான் பொருள் கொள்ளப்படும்.

தியாகு
தியாகு

தனி மாநிலமாகப் பிரித்தால் வளர்ச்சி ஏற்படும் என்று சொன்னால் அந்த வளர்ச்சி எதன் அடிப்படையில், எந்தத் துறையில் இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது டெல்லியின் முற்றாதிக்கம். மாநிலங்களின் உரிமைகளை எல்லாம் பா.ஜ.க அரசு எடுத்துக்கொண்டே போகிறது. கல்வி, விவசாயம் என அனைத்திலும் அதிகாரத்தைப் பறித்துக்கொண்டார்கள். தமிழகத்தைப் பிரித்தால் தமிழர் தாயகமாக இருக்கும் தமிழ்நாட்டின் நிலைமை இப்போது இருப்பதை விட மோசமடைந்து விடும்” என்றார்...

இதுவரை தமிழகத்தில் புதிய தலைநகரங்கள் உருவாக்க வேண்டும் என்றுதான் அரசியல் தலைவர்கள் பேசிவந்தார்கள். தற்போது தமிழகத்தை மூன்று மாநிலமாகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருப்பதாக ராமதாஸ் குரல் கொடுத்திருக்கிறார். இதன் விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு