Published:Updated:

கர்நாடகா: ``பெண்களுக்கு மாதம் ரூ. 2,000; 200 யூனிட் இலவச மின்சாரம்” - பிரியங்கா காந்தி

மாநாட்டில் பிரியங்கா காந்தி.

தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களைக் கவர, கர்நாடகாவில், காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா தளம் கட்சியினர் பல்வேறு இலவச வாக்குறுதிகளை ’அள்ளி வீசி’ வருகின்றனர்.

கர்நாடகா: ``பெண்களுக்கு மாதம் ரூ. 2,000; 200 யூனிட் இலவச மின்சாரம்” - பிரியங்கா காந்தி

தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களைக் கவர, கர்நாடகாவில், காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா தளம் கட்சியினர் பல்வேறு இலவச வாக்குறுதிகளை ’அள்ளி வீசி’ வருகின்றனர்.

Published:Updated:
மாநாட்டில் பிரியங்கா காந்தி.

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவிருப்பதால், பா.ஜ.க., காங்கிரஸ் தேசியத்தலைவர்கள் தற்போதே கர்நாடகத்துக்கு வந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இதுவரை, ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க கட்சியின் தேசியத்தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வந்து சென்றிருக்கின்றனர்.

பெண்களுக்காகப் பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பெண்கள் வாக்குகளைக் கவர திட்டமிட்டிருக்கிற காங்கிரஸ் கட்சியினர், இன்று, பெங்களூரு கோட்டை மைதானத்தில், ‘Na Nayaki – நான் நாயகி’ என்ற தலைப்பில் மகளிருக்கான மாநாடு நடத்தினர்.

குடும்பத்தலைவிக்கு மாதம் 2,000...

நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘கர்நாடகப் பெண்கள் ஐ.டி உட்பட பல தளங்களில், உலகம் முழுதிலும் சாதித்துவருகின்றனர். வரலாற்றில் கர்நாடகா முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது, கர்நாடகத்தைச் சேர்ந்த பசவண்ணர் நமக்கு சமத்துவம், சகோதரத்துவத்தையும்; சாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல், நாம் அனைவரும் சமம் என்பதை கற்றுத்தந்திருக்கிறார்.

மாநாட்டில் பிரியங்கா காந்தி.
மாநாட்டில் பிரியங்கா காந்தி.

சோனியா காந்தி இந்தியாவுக்குள் வந்ததும், இங்குள்ள கலாசாரம், பண்பாடு, மக்களைக் கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். ஆனாலும், நம் மக்களைத் தெரிந்துகொண்டு, மக்களுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அரசியல் களத்தில் பயணத்தைத் தொடங்கி, 44 வயதில் கணவனை இழந்து, இன்று, 76 வயதாகியும் ஆக்டிவாக, ஒரு பெண் அரசியல்வாதியாக இருக்கிறார். நம் நாட்டின் மக்கள் தொகையில், 50 சதவிகிதம் பெண்களே இருக்கிறோம். பெண்களுக்குக் கிடைத்திருக்கிற மாபெரும் சக்தி அரசியல்தான்; ஒவ்வோர் அரசியல் கட்சியையும் உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள்.

40 சதவிகிதம் ஊழல்!

நான் பா.ஜ.க-வை எதிர்க்கிறேன் என்பதற்காக நான் அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பா.ஜ.க ஆட்சி செய்யும் இத்தனை ஆண்டுகளில் நீங்கள் நிம்மதியாக வாழ்கிறீர்களா... நீங்கள் அன்றாட வாழ்வில் எவ்வளவு பிரச்னைகளைச் சந்திக்கிறீர்கள், என்னென்ன பிரச்னைகள் உங்கள் நிம்மதியை இழக்கச்செய்தது என நினைத்துப் பாருங்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள்.

கர்நாடகத்தில் பா.ஜ.க அரசு அனைத்திலும், 40 சதவிகிதம் ஊழல் செய்கிறது. உங்களின் வரிப்பணமான, 1.5 லட்சம் கோடி ரூபாயை ஊழல் வாயிலாகக் கொள்ளையடித்திருக்கின்றனர். பெங்களூரு நகரில் ஒரு வளர்ச்சிப்பணியும் நடப்பதில்லை. திரும்பிய திசையெல்லாம் ‘பொத்தோல்’ ரோடுகள், மாநிலம் முழுவதிலும் விவசாயிகள் தற்கொலை என மக்கள் நிம்மதி இழந்திருக்கின்றனர். இங்குள்ள போலீஸார்கூட பா.ஜ.க-வால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றனர். டிரைவிங் லைசென்ஸ், டிரான்ஸ்பர் என அனைத்துக்கும் கர்நாடகாவில், பா.ஜ.க அரசுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த சிலிண்டர் விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பீடு செய்து பாருங்கள. தற்போது, வாழ்வில் அனைத்துமே சுமையாகிவிட்டது. ஆனால், இது குறித்து யாருமே அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதில்லை. தற்போது, பா.ஜ.க-வினர் பள்ளி புத்தகங்களில், பசவண்ணரின் சிந்தனைகளை அகற்றி, அனைத்தையும் சர்ச்சையாக மாற்றி வருகின்றனர். இவர்களின் அனைத்து நடவடிக்கையும் சில முதலாளிகள் லாபமடைவதற்காகத்தான் செய்யப்படுகிறது. நடுத்தர தொழில்கள், பண மதிப்பிழப்பு, GST காரணமாக நசுக்கப்பட்டு, பெரும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியுடன் பா.ஜ.க ஆட்சியை ஒப்பீடு செய்து பாருங்கள், யார் மக்களுக்கான ஆட்சியைக் கொடுத்தார்கள் எனத் தெரியும்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

200 யூனிட் இலவசம்!

இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு வீட்டிலுள்ள குடும்பத்தலைவிக்கும் மாதம், 2,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நீங்கள் நிம்மதியாக வாழ, 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறோம். கர்நாடகத்தில் நடக்கப்போவது உங்களுக்கான தேர்தல், நீங்கள் முடிவெடுங்கள் பெண்களே உங்கள் எதிர்காலத்தை’’ எனப்பேசினார்.

தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களைக் கவர, கர்நாடகாவில், காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா தளம் கட்சியினர், பல்வேறு இலவச வாக்குறுதிகளை ’அள்ளி வீசி’ வருகின்றனர்.