Published:Updated:

ரஜினிக்கு... கிருஷ்ணராக மாறுகிறாரா குருமூர்த்தி?- ராஜகுருவின் லாஜிக் அரசியல்!

"உண்மையில், ரஜினிக்கு கிருஷ்ணராக இருந்து உபதேசம் செய்வது குரூமூரத்திதான். அந்த உபதேசம் எந்த அளவிற்குக் கைகொடுக்கும் என்கிற கவலைதான் எங்களுக்கு இருக்கிறது." - ரஜினி மன்ற நிர்வாகிகள்.

Rajini - Gurumurthy
Rajini - Gurumurthy

“அமித் ஷாவும், மோடியும் கிருஷ்ணன்- அர்ஜுனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்” என்று சமீபத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த். தமிழக அரசியலில் 96-ம் ஆண்டு முதல் ஏதாவது ஒருவகையில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரஜினியின் தற்போதைய வாய்ஸ், பரபரப்போடு விவாதத்தையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.

Venkaiah Naidu Book Release Function
Venkaiah Naidu Book Release Function

ஜெயலலிதா - கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் பல்வேறு பரிணாமங்களுக்கு உட்பட்டு வருகிறது. அரசியல் பக்கமே வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல், அதிரடியாக அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து ஒரு தேர்தலிலும் களம் இறங்கிவிட்டார். இருபது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று புரியாத புதிராக இருந்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து, அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், அரசியல் இயக்கம் ஆரம்பிப்பதற்கான எந்த அறிவிப்பும் அவர் பக்கமிருந்து வரவில்லை. ஆனால், தமிழக அரசியல் நிலை குறித்தும், மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியமைப்பு குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார், ரஜினிகாந்த். அவரின் கருத்துகள் பெரும்பாலும் பி.ஜே.பி-யின் சித்தாந்த அரசியலுக்கு நெருக்கமாக இருந்ததை வைத்து அவர் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பார் என்று ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

Modi - Rajini
Modi - Rajini

ரஜினி தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லை. குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியைத் தங்களுக்கு ஆதரவாக எப்படியும் களமிறக்கிவிடலாம் என்று எதிர்பார்த்தது, பி.ஜே.பி. ஆனால் கடைசிவரை அதற்குப் பிடிகொடுக்கவில்லை ரஜினி. இருபது ஆண்டுகள் தமிழக மக்களுக்கே பிடிகொடுக்காதவர், பி.ஜே.பி-க்கு மட்டும் உடனடியாகப் பிடிகொடுத்துவிட வாய்ப்பில்லை என்பதும் நிதர்சனம்.

``அமித் ஷா யாரென்று இப்போது தெரிந்திருக்கும்!” - காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி

ஒருபுறம், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பி.ஜே.பி அணியின் தோல்வியென்றால், மறுபுறம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகச் சட்டமன்றத்துக்கான தேர்தலை எதிர்கொள்ள பி.ஜே.பி தலைமைக்கு மீண்டும் ரஜினி என்கிற குதிரை தேவைப்படுகிறது.

அந்தக் குதிரையில் சவாரிசெய்ய குருமூர்த்தி என்கிற சாரதியைத் தயார்செய்யப் பார்க்கிறது, பி.ஜே.பி. ரஜினியின் ஆஸ்தான ஆலோசகராக இருந்த நடிகரும், எழுத்தாளருமான சோ-வின் மறைவுக்குப் பிறகு, ரஜினி அரசியல் குறித்து அடிக்கடி உரையாடுவது ஆடிட்டர் குருமூர்த்தியோடுதான். ஏற்கெனவே அ.தி.மு.க இரண்டாக உடைந்ததன் பின்னால் குருமூரத்தி இருக்கிறார் என்று அக்கட்சி தரப்பிலேயே குற்றச்சாட்டு இருந்தது.

`காஷ்மீர் விவகாரத்தை ராஜதந்திரத்தோடு கையாண்டிருக்கிறார்கள்!' - ரஜினி

'ஓ.பன்னீர்செல்வத்திற்கு டெல்லி அடைக்கலம் கொடுத்ததற்குப் பின்னாலும், கடைசிவரை டெல்லி தலைமை நினைத்த காரியம் நடந்தேறாமல் போனதற்கும் குரூமூர்த்தி போட்ட தப்பான கணக்குத்தான்' என்பதை டெல்லி பி.ஜே.பி. சற்றுத் தாமதமாகவே உணர்ந்தது. அதனாலேயே, குருமூர்த்தி விஷயத்தில் டெல்லி தரப்பு கொஞ்சம் ஒதுங்கியே இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்கூட அ.தி.மு.க - பி.ஜே.பி ஆகிய இரண்டு தரப்புமே குருமூர்த்திக்குப் பெரிதான முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

தமிழகத்தின் ஆளும்கட்சிக்கு ராஜகுருவாக விளங்கிய குருமூர்த்தியை, அ.தி.மு.க தரப்பும் ஒதுக்கியே வைத்தது. அதுபோல், டெல்லியிலும் அவருக்குச் செல்வாக்குக் குறைந்திருந்தது. இதை ஈடுகட்டத்தான் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூலம் தனது அரசியல் ஆட்டத்தை குருமூர்த்தி ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், வெங்கையா நாயுடுவிற்கு சென்னையில் தனக்கென்று ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நீண்டநாள் ஆசை இருந்துள்ளது. அதையறிந்த குருமூர்த்தி, அவருடைய இரண்டாண்டு அனுபவத்தைப் புத்தகமாகத் தயார்செய்து வெளியீட்டு விழாவை சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லியுள்ளார்.

Rajinikanth
Rajinikanth

அந்த நிகழ்ச்சியில் அமித் ஷாவை கலந்துகொள்ளவைக்கும் பொறுப்பை, குருமூர்த்தி வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைத்துள்ளார். மோடி, பிரதமர் என்றாலும் அமித் ஷாவின் கண் அசைவில்தான் அனைத்தும் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதைக் கருத்தில்கொண்ட குருமூர்த்தி, அமித் ஷாவும் தனக்கு நெருக்கமானவர் என்பதை இதன்மூலம் தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் நிரூபிப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகை அடிக்கப்படும் வரை ரஜினிகாந்த் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு ரஜினியை அழைக்க, குருமூர்த்தி சென்றபோது அங்கு நடந்த அரசியல் பேச்சுக்குப் பிறகே ரஜினியைக் கட்டாயம் மேடையேற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார், குருமூர்த்தி. ரஜினி மேடையேற வேண்டிய அவசியத்தை அமித் ஷா தரப்புக்கும் எடுத்துச்சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார், குருமூர்த்தி. காரணம், காஷ்மீர் விவகாரத்தில் தமிழகத்தில், பி.ஜே.பிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் அதை ஆதரித்துப் பேச ரஜினி போன்ற வலுவான நபர்கள் இப்போது பி.ஜே.பி-க்குத் தேவை என்பதால் அதைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டார் குரூமூர்த்தி. இதற்குப் பின்னால், மற்றொரு கணக்கும் இருக்கிறது என்கிறார்கள்.

Vikatan

“குருமூர்த்தி ரஜினியைவைத்து அரசியல் சதுரங்கத்தை நடத்த ஆரம்பித்துள்ளார். ரஜினி சட்டமன்றத் தேர்தலை யொட்டியே கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தில் இருக்கிறார். ரஜினியிடம், 'நீங்கள் முதல்வர் வேட்பாளராக நிற்கவேண்டும்' என்று முதலில் ஆலோசனை சொன்னதே குருமூர்த்திதான்.

Rajini - Modi
Rajini - Modi

இப்போது அ.தி.மு.க-வும் தலைமைத் தட்டுப்பாட்டில் இருக்கிறது. பி.ஜே.பி-யோ பின்புலமே இல்லாமல் திண்டாடுகிறது. இவர்களை ஒருங்கிணைத்து அரசியல் களத்தில் நிறுத்தி, ராஜகுருவாக தானே இருக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டார், குருமூர்த்தி. இந்த ஒப்புதலை பி.ஜே.பி தலைமையிடம் வாங்கிய பிறகுதான் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டவர்களை வைத்துக்கொண்டே ரஜினியை மேடையில் பேசவைத்துள்ளார், குருமூர்த்தி” என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

“தமிழகத்தில் ஏற்கெனவே பி.ஜே.பி-க்கு எதிரான அலை கடுமையாக இருக்கிறது. ரஜினியின் பி.ஜே.பி ஆதரவுப் பேச்சுக்கு, சமூக வலைதளங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், இதையெல்லாம் தவிர்த்துவிட்டு ரஜினி பி.ஜே.பி-யுடன்தான் கூட்டணி என்று முடிவுசெய்தால், அவர் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டிவரும்” என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Modi - Rajini
Modi - Rajini

"அ.தி.மு.க என்று வலுவான இயக்கம் இருக்கும்போது, ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியை முன்னிலைப்படுத்தி, அவர்கள் பின்னால் அ.தி.மு.க- பி.ஜே.பி-யைப் பின்செலுத்துவது என்பது நடக்காத காரியம். ஏற்கெனவே குருமூர்த்தி, டெல்லியில் சரிந்த தன்னுடைய செல்வாக்கை மீட்க மீண்டும் ஒரு ரிஸ்க் எடுக்கிறார். இதுவும் தோல்வியிலேயே முடியும்” என்று பி.ஜே.பி தரப்பினரே அவரை எச்சரிக்கை செய்கிறார்கள்.

"ரஜினி மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவது உறுதி எனத் தெரிகிறது. ஆனால், கூட்டணி விஷயத்தில் அவர் யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணியமாட்டார். முதல்வர் வேட்பாளராக அவர் களத்தில் நிற்கப் போகிறார். அவருடன் அ.தி.மு.க கூட்டணிவைத்தாலும், பி.ஜே.பி கூட்டணி வைத்தாலும் ரஜினியை முதல்வராக அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியம். இதைத் தன்னால் சாத்தியப்படுத்த முடியும் என்று உறுதிகொடுத்துள்ளார், ராஜகுருவான குருமூர்த்தி.

ரஜினி - பி.ஜே.பி உறவு: இருக்கமாட்டார்... ஆனால், இருப்பார்!

அதற்கு ரஜினி இசைவு தருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. உண்மையில், ரஜினிக்கு கிருஷ்ணராக இருந்து உபதேசம் செய்வது குருமூர்த்திதான். அந்த உபதேசம் எந்த அளவிற்குக் கைகொடுக்கும் என்கிற கவலைதான் எங்களுக்கு இருக்கிறது” என்கின்றனர், ரஜினி மன்ற நிர்வாகிகள்.