Published:Updated:

`சமூகநீதி கண்காணிப்புக்குழு' அமைப்பு - 'சமூக' அமைப்புகள் இதை எப்படிப் பார்க்கின்றன?

'அரசுப் பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால், அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும்.'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'சமூகநீதி உறுதியேற்பு நாள்' அறிவிப்பைத் தொடர்ந்து 'சமூகநீதி கண்காணிப்புக்குழு' அறிவிப்பையும் வெளியிட்டு, இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது தமிழ்நாடு! பெரியார் பிறந்ததினத்தை 'சமூகநீதி நாள் உறுதியேற்பு தினமாக' அறிவித்து நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசு, தற்போது 'சமூகநீதி கண்காணிப்புக்குழு' ஒன்றை அமைத்து, தமிழ்நாட்டில் சமூகநீதி செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தக் குழுவினர், கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் நியமனங்கள் உள்ளிட்ட விவகாரங்களில், சமூகநீதி முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவிருக்கின்றனர்.

பெரியார்
பெரியார்

20 நூற்றாண்டுகளாக சாதி, மதத்தின் பெயரால், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூக உரிமைகளை மறுத்துவந்த கொடூர வரலாற்றுப் பின்னணியைக்கொண்டது நம் இந்தியச் சமூகம்! இந்தப் பிற்போக்குத்தனங்களை ஒழித்துக்கட்டி, 'சாமானியர்களும் அதிகாரம் பெற வேண்டும்' என்ற உயரிய நோக்கத்தோடு, 1921-ம் ஆண்டு சென்னை மாகாண நீதிக்கட்சி ஆட்சியில் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. `அரசுப் பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால், அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும். அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள்தொகையை அடிப்படையாகக்கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்' என்ற 'சமூகநீதி' அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைக்கு இந்தியா முழுக்க கல்வி, வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டு முறைமைக்கு அடித்தளமாக விளங்கும் இந்த அரசாணை இயற்றப்பட்டு நூற்றாண்டைக் கடந்திருக்கிறது. ஆனாலும் நடைமுறையில் இந்தச் சமூகநீதி அளவுகோலானது முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!

இதைக் கருத்திற்கொண்டுதான் தற்போதைய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, 'சமூகநீதி கண்காணிப்புக்குழு' அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இந்தக் குழுவின் அங்கத்தினர் கண்காணிப்பார்கள். சரிவர நடைமுறைப்படுத்தப்படாத இடங்களில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்வதோடு, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் செயலாக்கம் குறித்த பணிகளிலும் இந்தக் குழுவினர் ஈடுபடுவார்கள். இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக, 69 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் மாநிலமாக விளங்கிவருகிறது தமிழ்நாடு! சமூகநீதி வரலாற்றுப் பெருமையின் மைல்கல்லாக கருதப்படும் 'சமூகநீதி கண்காணிப்புகுழு' அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்...

அம்பேத்கர்
அம்பேத்கர்

பா.ம.க செய்தித் தொடர்பாளரும் 'வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை' தலைவருமான கே.பாலு நம்மிடம் பேசும்போது, ``நீண்ட நாள்களாக பா.ம.க பேசிவந்த கோரிக்கையைத்தான் தமிழக அரசு இப்போது அறிவித்திருக்கிறது. எனவே, இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். சமூகநீதியை அமல்படுத்துகிற இடத்திலுள்ள அதிகார வர்க்கம் தெரிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ சமூகநீதியை முழுமையாகச் செயல்படுத்தாமல் தள்ளிப்போட்டுவருகிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். ஆனாலும்கூட தேசிய அளவில் மத்திய அரசு சார்ந்த குரூப் 1 மற்றும் 2 சார்ந்த பணிகளில், இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது வெறும் 5.6 விழுக்காடு மட்டுமே இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டிலும்கூட கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, தட்டிப்பறித்துவிடும் போக்கு தொடர்ந்துவருகிறது. உதாரணமாக, கல்விச்சூழலை எடுத்துக்கொண்டால், இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவருக்கு அப்ளிகேஷன் அனுப்பப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்துவது அல்லது நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை அனுப்பாமலேயே இருப்பது, எல்லாம் சரிவர நடைபெற்று, கலந்துகொள்பவர்களிடமும்கூட 'அந்த பேப்பர் இல்லை; இது இல்லை' என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்துவிடுவார்கள்.

ஆக, இட ஒதுக்கீட்டு முறை எந்த நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதோ அதை நிறைவேற்றவிடாமல், அதிகாரவர்க்கம் செயல்படும்போது, ஒட்டுமொத்தமாக சமூகநீதியே சிதைந்துவிடுகிறது. ஆனால், இந்த நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவொரு குழுவும் இதுவரையில் இங்கே இல்லை.

கே.பாலு
கே.பாலு

எனவேதான், சமூகநீதிப் பேரவை சார்பாக, இது குறித்து தமிழக அரசுக்குப் பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்துவந்தோம். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவரும் சமூக, பொருளாதாரத் தேவையை அடைந்துவிட்டார்கள் என்று சொல்கிற நிலை வர வேண்டுமானால், ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் சேர்க்கை விவரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பங்குபெறும் விகிதாசாரம் குறித்துத் தெள்ளத் தெளிவான தரவுகள் வேண்டும். இதற்கான முதல் தரவாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான வாய்ப்பு இப்போதுவரை இல்லை. இந்தச் சூழ்நிலையில், சமூகநீதி கண்காணிப்புக்குழு இந்தப் பணிகளையெல்லாம் செய்யும் என்பது வரவேற்கத்தக்க நல்லதொரு மாற்றம்!'' என்கிறார் அழுத்தமாக.

சைவ வேளாளர் சங்கத் தலைவர் புளியரை ராஜா, ``பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதிப் பிரிவினருக்காக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்தாலும்கூட, தமிழ்நாட்டில் இந்த இட ஒதுக்கீட்டு வசதியைப் பெற வசதியாக சான்றிதழ் வழங்கப்படுவதில் பல்வேறு தடைகள் இருக்கின்றன. முன்பு இது குறித்த புகார்கள் தமிழ்நாடு முழுவதுமிருந்து நிறைய வந்தன. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, என் கவனத்துக்குப் புகார்கள் எதுவும் வரவில்லை. ஆனாலும்கூட சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

புளியரை ராஜா
புளியரை ராஜா

சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் வீட்டை அளவிடுதல், வருமான வரம்பைக் கணக்கிடுதல் போன்ற பணிகளை செய்து முடித்துத்தான் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. வேலைவாய்ப்புக்கான தேர்வு நாள்களுக்குள் இந்தப் பணிகளையெல்லாம் முடித்து மனுதாரருக்குச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. வீட்டின் அளவு குறித்த ஆவணங்களைக் கேட்கிறார்கள். அதன் பிறகும்கூட, ``5 அடி கூடுதலாக இருக்கிறது. எனவே உங்களுக்குச் சான்றிதழ் கிடையாது’’ என்று புறக்கணித்துவிடுகின்றனர். இப்படி, கடைசி நேரத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை இழந்துவிடுகிற சூழல் ஏற்படுகிறது. எங்களது இந்தக் குறைகளையெல்லாம் இனி 'சமூகநீதி கண்காணிப்புக்குழு'விடம் நேரடியாக எடுத்துச்சொல்லி நடைமுறைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அரசின் இந்த முடிவை நாங்களும் வரவேற்கிறோம்!'' என்கிறார்.

ஆனால், இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் வேறோரு கோணத்தில் தன் கருத்தை முன்வைக்கிறார். அவர் பேசும்போது, ``75 ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவில், இதுபோன்று சமூகநீதி கண்காணிக்கப்படுவதற்கென ஓர் அமைப்பு உருவாவதை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது. அதாவது, இதுநாள் வரையில் சமூகநீதி எந்த அளவு நடமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது, மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன, அவற்றை எவ்வாறு களைய வேண்டும் என்றெல்லாம் ஆக்கபூர்வ செயல்பாடுகளில் இந்தக் குழுவினர் ஈடுபடுவார்கள் என்பதெல்லாம் பாராட்டுக்குரியவைதான்.

 சமூகநீதி
சமூகநீதி

ஆனால், ஏற்கெனவே மகளிர், குழந்தைகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என ஒடுக்கப்பட்ட பிரிவினரின் சமூக, பொருளாதார முன்னேற்றங்களுக்காகப் பல்வேறு ஆணையங்கள் நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந் நிலையில், புதிதாக 'சமூகநீதி கண்காணிப்புக்குழு' என்ற ஓர் அமைப்பை உருவாக்கினால், இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் பணி சார்ந்து ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், ஒட்டுமொத்தப் பணிகளும் ஸ்தம்பித்துப் போகவும் வாய்ப்புண்டு.

`நாட்டின் பாதிக்கும் மேலான சொத்துகள் வெறும் 10% பேரிடமே!' - ஆய்வில் தகவல்

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையமும்கூட, 'வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு அம்சங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருக்கிறதா, கல்லூரிச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறதா' என்பது போன்ற பணிகளைத்தான் செய்துவருகிறது. இந்தநிலையில், சமூகநீதி கண்காணிப்புக்குழுவும்கூட இதே பணிகளைத்தான் செய்யும் என்றால், குழப்பம் வரத்தான் செய்யும். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு துறையினர் விசாரணை செய்துவரும்போது, அதன் ஊடாக மற்றோர் ஆணையம் விசாரணை செய்ய முடியாது.

1932-ல் நடைபெற்ற பூனா ஒப்பந்தத்தில்தான் முதன்முறையாக இட ஒதுக்கீடு பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, 'முதல் 30 வருடங்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார தேவைகளை இட ஒதுக்கீட்டு முறை செம்மைப்படுத்திவிடும்' என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், நடைமுறையில் மூன்று முப்பதாண்டுகளைத் தொட்டுவிட்டோம். இன்னமும் இட ஒதுக்கீட்டு அம்சத்தால், முழுமையக சமூகநீதியை எட்ட முடியவில்லை.

செ.கு.தமிழரசன்
செ.கு.தமிழரசன்

அதே பூனா ஒப்பந்தத்தில்தான், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படவேண்டிய நிலம், சொத்துகள் பற்றிய கோரிக்கைகளும் பேசப்பட்டன. அப்போது பேசியபடியே சொத்துகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீட்டை மட்டும் இன்னமும் நம்மால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லையென்றால், இதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது? ஒட்டுமொத்த இந்தியாவும்தான் பொறுப்பேற்க வேண்டும்!

எனவே, அதிகாரம் என்பது குறிப்பிட்ட ஓர் ஆணையத்துக்கு மட்டுமே இருக்கும்பட்சத்தில், அங்கே விசாரணைகளும் முறையாக நடைபெற வாய்ப்பு உண்டு. மாறாக, இது போன்று பல்வேறு ஆணையங்களுக்குமாக அதிகாரம் பரவலாக்கப்படும்போது ஒட்டுமொத்தப் பணிகளுமே நீர்த்துப்போகத்தான் அதிக வாய்ப்பு உண்டு. எனவே, சமூகநீதியைக் கண்காணித்து செம்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்துச் செயல்படுகிற தமிழக அரசு, இந்த நடைமுறைச் சிக்கல்களையும் கருத்திற்கொண்டு நல்லதொரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு