முன்னாள் கதர் வாரியத்துறை அமைச்சரும், தற்போதைய வனத்துறை அமைச்சருமான ராமச்சந்திரனுக்குக் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.க தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. தற்போது நீலகிரி மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்துவரும் முபாரக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த ராமச்சந்திரன், தான் சார்ந்திருக்கும் சொந்தக் கட்சியான தி.மு.க-வுக்கு எதிராகத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். அப்போது நீலகிரி எம்.பி-யாக இருந்த ராசாவைக் கண்டித்து, கோத்தகிரியில் ராமச்சந்திரன் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்.

இது குறித்து அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்ட மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு நீலகிரி மாவட்டம், ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில், கட்சி நிர்வாகி ஒருவரின் காரில் கோர்ட் வளாகத்துக்கு வந்து ஆஜராகிக் கையெழுத்திட்டார். இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அதே காரில் அங்கிருந்து கிளம்பினார்.