Published:Updated:

``சசிகலாவின் ஜெராக்ஸ்தான் தினகரன்!'' - சொல்கிறார் ஜெயக்குமார்

ஜெயக்குமார்

''சசிகலா ஆசீர்வாதத்தால்தான் அ.ம.மு.க என்ற கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் 3 % வாக்குகளைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. கட்சிக்காரர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு இல்லாத ஒருவரை யார் தலைவராக அங்கீகரிப்பார்கள்?''

``சசிகலாவின் ஜெராக்ஸ்தான் தினகரன்!'' - சொல்கிறார் ஜெயக்குமார்

''சசிகலா ஆசீர்வாதத்தால்தான் அ.ம.மு.க என்ற கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் 3 % வாக்குகளைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. கட்சிக்காரர்களிடமும் மக்களிடமும் செல்வாக்கு இல்லாத ஒருவரை யார் தலைவராக அங்கீகரிப்பார்கள்?''

Published:Updated:
ஜெயக்குமார்

ஆட்சி அரியணையிலிருந்து இறங்கிவிட்டாலும்கூட, 'இரட்டைத் தலைமை சர்ச்சை, சசிகலா ஆடியோ ரிலீஸ், சசிகலாவோடு தொடர்பிலிருந்தவர்கள் நீக்கம்'... என தொடர்ச்சியாக அதிர்ந்துவருகிறது அ.தி.மு.க வட்டாரம்! ```அரசியலைவிட்டு இனி ஒருபோதும் விலக மாட்டேன்" என வீறுகொண்டு எழுந்துள்ள சசிகலா, 100-வது ஆடியோ ரிலீஸை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்தேன்...

``அ.தி.மு.க தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான அறிவிப்புக்கூட இன்னும் கட்சித் தலைமையிடமிருந்து வெளிவரவில்லையே ஏன்?''

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.
ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஜனநாயக அரசியலில், வெற்றி, தோல்வி இயல்பானதுதான். என்றாலும்கூட கட்சியின் தோல்வி குறித்து ஆராயப்பட வேண்டும். ஆனால், அதற்கு இன்னும் கால நேரம் இருக்கிறது. இது கோவிட் நோய்த் தொற்றின் 2-வது அலை பரவிவரும் நேரம். அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துவரும் அ.தி.மு.க., இந்தப் பெருந்தொற்று நேரத்தில், பெருங்கூட்டம் கூட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறது.

கட்சி சார்பில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே, 'சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விரைவில் ஒவ்வொரு மாவட்டத்தினருடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள். எனவே, நோய்த் தொற்று குறையும்போது நிச்சயம் இது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும்!''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அ.தி.மு.க-வின் தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?’’

``அரசின் நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு, எந்தெந்தத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ, அவற்றை மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்தது அ.தி.மு.க. ஆனால், நிறைவேற்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளையெல்லாம் முன்வைத்து பிரசாரம் செய்தது தி.மு.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நிறைவேற்றவே முடியாத பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க கூட்டணியினர் வெளியிட்டனர். இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் 500 வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர். இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால், பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அவ்வளவு பணம் எங்கே இருக்கிறது? அதனால்தான் இப்போதே, 'நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்கப்போகிறோம்' என்கிறார் நிதியமைச்சர். தேர்தலின்போது, தி.மு.க-வின் பிரசார பலத்தால் இந்தப் பொய்யான வாக்குறுதிகளெல்லாம் மக்களிடையே எடுபட்டுவிட்டன. இந்தத் தற்காலிக வெற்றியால், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கும் வந்துவிட்டனர். மற்றபடி மக்கள் யாரும் தி.மு.க-வை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. எழுதிவைத்துக்கொள்ளுங்கள்... தி.மு.க கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``கட்சித் தலைமைகள் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொண்டிருந்தால், அ.தி.மு.க-வுக்கு வெற்றி சாத்தியப்பட்டிருக்கும்தானே?''

``அப்படியெல்லாம் எங்கள் கட்சித் தலைமைக்குள் எந்தவிதப் பிணக்கும் இல்லை. அ.தி.மு.க என்பது மிகப்பெரிய கட்சி. இங்கே அண்ணன் தம்பிக்குள் சில கருத்துகள் இருக்கும். அதை மீடியாதான் ஹேஷ்யமாக பூதாகரப்படுத்துகின்றன. கட்சிக்குள் என்னென்னவோ பிரச்னைகள் இருப்பதாகச் செய்தி வெளியிட்டனர். ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையொப்பமிட்டே முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்படுகிறன. ஆக, கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை! சில முடிவுகளில் உடன்பாடு குறித்த சில கருத்துகள் அவ்வப்போது வெளிவந்தாலும்கூட, இறுதியில் நல்லதொரு முடிவு எட்டப்படுகிறதா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும்! உதாரணமாக, கட்சி எடுத்த முடிவின்படி எதிர்க்கட்சித் தலைவர், கொறடா, பொருளாளர், செயலாளர் என நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டு சட்டசபைக் கூட்டத்தொடரில் ஒற்றுமையாகக் பங்கேற்றதையும் பார்த்தீர்கள்தானே!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-ஸில் ஆரம்பித்து நீங்கள் உட்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புகளை வகித்துவருவது எந்தவகையில் நியாயம்?''

``பதவிகளை எப்படிப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதெல்லாம் கட்சியின் கொள்கை முடிவு... 'ஒருவருக்கு ஒரு பதவி' என்று நான் சொல்ல முடியாது! எனவே, இப்போது நீங்கள் சொல்கிற இந்தக் கருத்தைக்கூட நாளை கட்சி கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்... அல்லது எடுத்துக்கொள்ளாமலும் போகலாம்!''

``அ.தி.மு.க-வினர் யாரும் சசிகலாவை நம்ப மாட்டார்கள்; அவருக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றெல்லாம் பேசிவிட்டு, சசிகலா ஆடியோ ரிலீஸாவதைக் கண்டு பதற்றமடைவது ஏன்?''

டி.டி.வி.தினகரன் - சசிகலா
டி.டி.வி.தினகரன் - சசிகலா

``பதற்றமெல்லாம் ஒன்றும் கிடையாது. சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் ஒருநாளும் பிரிக்க முடியாது. சசிகலாவின் ஜெராக்ஸ்தான் தின்கரன்! சசிகலாவின் ஆசீர்வாதத்தால்தான் அ.ம.மு.க என்ற கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் 3 % வாக்குகளைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. ஆக, கட்சிக்காரர்களிடமும் செல்வாக்கு இல்லாத, மக்களிடமும் செல்வாக்கு இல்லாத ஒருவரை யார் தலைவராக அங்கீகரிப்பார்கள்? எனவே, அ.தி.மு.க-வில் ஒரு வீண் குழப்பத்தை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார்... அது ஒருபோதும் நடக்காது! ஏனெனில், அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்! ஜெயலலிதாவோடு உடனிருந்தவர் சசிகலா. 'ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது, இதற்கு யார் காரணம்...' என்ற கேள்விகளுக்கான விடையை எதிர்நோக்கி அ.தி.மு.க-வினரும் மக்களும் காத்திருக்கின்றனர். எனவேதான், அந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக எங்கள் ஆட்சியின்போது விசாரணை கமிஷனை அமைத்தோம்!''

``அ.தி.மு.க., குறிப்பிட்ட சாதியினருக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளதே..?''

``அப்படியெல்லாம் திட்டமிட்ட ஒரு கோயபல்ஸ் பிரசாரம், பிம்பம், மாயை உருவாக்கப்பட்டுவருகிறது. அ.தி.மு.க மீது சாதிச் சாயம் பூசுவதற்காகத் தொடர்ந்து சிலர் பொய் சொல்லிவருகின்றனர். ஆனால், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் அ.தி.மு.க. உதாரணமாக, நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். கடந்தகாலத்தில் எதிர்க்கட்சியினரது கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு அ.தி.மு.க-வில் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்தானே.... நான் என்ன அவர்கள் சொல்வதுபோல் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவனா... சொல்லுங்கள்! கட்சியின் வழிகாட்டும்குழுவிலேயேகூட அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்களே!''

அஸ்பயர் சுவாமிநாதன்
அஸ்பயர் சுவாமிநாதன்

``அ.தி.மு.க-விலிருந்து விலகிய அஸ்பயர் சுவாமிநாதன், 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தகட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலே, அது சாதிக்கட்சியாக மாறிவிட்டதைச் சொல்லும்' என்கிறாரே?''

``கட்சியைவிட்டு விலகிய பிறகு, ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டுமே என்பதற்காக அவர் இப்படியொரு காரணத்தை சொல்லியிருக்கலாம். எனவே, இதில் எந்த உண்மையும் கிடையாது. கட்சிக்காக விசுவாசத்தோடு உழைப்பவர்களை எந்தவகையிலும், யாராலும் புறந்தள்ள முடியாது. அவர்களுக்கான உரிய மரியாதை கொடுக்கப்பட்டேவருகிறது. அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டுமே சலுகைகளைக் கொடுத்தது, அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே சென்று சேர்ந்தன என்றெல்லாம் எந்த ஒரு புகாரும் இதுநாள்வரையில் வந்தது கிடையாது. அப்படியொரு விஷயம் அ.தி.மு.க-வில் நடக்கவும் நடக்காது!''

``கஷ்டப்பட்டு வளர்த்த அ.தி.மு.க-வை சாதிரீதியாகச் சிதறிப்போக விட மாட்டேன் என சசிகலாவும் அண்மையில் வெளியிட்ட ஆடியோவில் கூறியிருக்கிறாரே..?''

``அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவர் சசிகலா. எனவே, அவர் செய்ய விரும்பும் வேலையை, அ.ம.மு.க-வில் வேண்டுமானால் செய்யலாம்; அ.தி.மு.க-வில் செய்ய முடியாது.''

புகழேந்தி
புகழேந்தி

``ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகப் பேசிவந்த புகழேந்தி, கட்சியைவிட்டே நீக்கப்படுகிறார் என்றால், கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்குகிறதா?''

``இல்லையில்லை... யார் கையும் ஓங்கவில்லை. ஒரு கூட்டணியில் இருந்துகொண்டே கூட்டணியை விமர்சிப்பதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அடுத்து, சொந்தக் கட்சியைப் பற்றி, அதன் தலைவர்களைப் பற்றி அல்லது அந்தக் கட்சியின் கொள்கை முடிவுகளைப் பற்றி நான் விமர்சனம் செய்வது கிடையாது. எந்தவொரு முடிவு என்றாலும், கட்சியைக் கலந்தாலோசித்து, அங்கே எடுக்கப்படுகிற முடிவுகளைத்தான் பொதுவெளியில் சொல்வேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க அழிந்துவிடும் எனச் சிலர் நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. ஒற்றுமையாகச் செயல்பட்டு ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிந்துவருகிறது அ.தி.மு.க. இது நிறைய பேர்களது கண்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இல்லாததும் பொல்லாததுமாகச் செய்தி கிளப்பிவிடுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க இன்னும் நூறாண்டுகளுக்கு நிலைக்கும்; தழைக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism