Published:Updated:

``கல்லைத் தூக்கி அடிக்கும் அமைச்சர்; கற்காலத்துக்குச் சென்றுவிட்டது திமுக அரசு!" - ஜெயக்குமார் சாடல்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``அரச பரம்பரையும், ஜமீன்தார் முறையும்தான் இன்றைக்கு இந்த அரசாங்கத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை." - ஜெயக்குமார்

``கல்லைத் தூக்கி அடிக்கும் அமைச்சர்; கற்காலத்துக்குச் சென்றுவிட்டது திமுக அரசு!" - ஜெயக்குமார் சாடல்

``அரச பரம்பரையும், ஜமீன்தார் முறையும்தான் இன்றைக்கு இந்த அரசாங்கத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை." - ஜெயக்குமார்

Published:Updated:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயப்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ``தமிழ்... தமிழ் என்று வாய்கிழியப் பேசி தமிழை மட்டுமே வைத்து வியாபாரம் செய்து, இன்றைக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு அதிபதியாகி, ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக இருக்கிற தி.மு.க குடும்பம், தமிழுக்கு என்ன செய்தது... வரலாற்றைப் பார்த்தால், தமிழ்நாட்டில் தமிழை வளர்த்த பெருமைக்குரிய தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்தான்" என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதைத் தொடர்ந்து தி.மு.க அமைச்சர் நாசர் தன் கட்சிக்காரர் மீது கல்லெறிந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், ``ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கிற கதையாக, கடைசியில் இன்றைக்கு கற்காலத்துக்குப் போய்விட்டது தி.மு.க. இப்போது கல்தான் அவர்களுக்கு ஆயுதம். தி.மு.க-வின் அமைச்சர்கள் பண்ணுகிற அலப்பறைகளைச் சொல்லி மாளாது.

அமைச்சரவையில் யார் யார் இருக்கிறார்கள் என்றால், ஜோக்கர் இருக்கிறார்கள், அடாவடி பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள், பொதுமக்களை அடிக்கிறவர்கள் இருக்கிறார்கள், உள்ளாட்சிப் பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அசிங்கப்படுத்தியவர்கள் இருக்கிறார்கள். கே.என்.நேரு ஒருவர் போதும், சென்னை மேயரை அசிங்கப்படுத்தி, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணியை 'பேசும்மா... தள்ளு இப்பிடி' என்கிறார். இதெல்லாம் பெண்மைக்குக் கொடுக்கிற மரியாதையா... அதே கே.என்.நேரு திருச்சியில் அவருடைய கட்சிக்காரரையே போட்டு அடிக்கிறார்.

அதுக்கப்புறம் நம்முடைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் வரும்போது செருப்பு எடுத்துப் போடுகிறார். பகுத்தறிவின் உச்சக்கட்டமாக இருக்கிறது இந்த தி.மு.க அரசு. செருப்பு எடுத்துப் போடுவதுதான் திராவிட மாடல். `ஹலோ’ என்று நாம் போனில் பேசிப் பார்த்திருக்கிறோம். ஆனால், கால்வாயில் `ஹலோ ஹலோ...’ என்று சொன்னது நாசர்தான். தமிழ்நாடே இன்றைக்கு வெட்கித் தலைகுனியக்கூடிய இப்படி ஒரு ஜோக்கர் அரசாங்கம்தான் நடந்துகொண்டிருக்கிறது. கல்லைத் தூக்கி அடித்த அமைச்சரை உலகத்திலேயே பார்த்ததில்லை.

ஸ்டாலின் - ஜெயக்குமார்
ஸ்டாலின் - ஜெயக்குமார்

இப்படி அலப்பறைகள் சொல்லி மாளாத அளவுக்கு, சிரிக்கக்கூடியதாகவும், நகைச்சுவைக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும், சில விஷயங்கள் கண்டனத்துக்குரியதாகவும் இருக்கின்றன. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். இவர்களிடமிருந்து ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அரச பரம்பரையும், ஜமீன்தார் முறையும்தான் இன்றைக்கு இந்த அரசாங்கத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஓர் அரசு" என்றார்.