அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“எடப்பாடி பட எரிப்பில் ஆளுங்கட்சியின் சூழ்ச்சி இருக்கிறது!” - சமாளிக்கும் ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.பி.உதயகுமார்

களத்தில் நின்று எங்களைவிட வாக்கு அதிகமாக வாங்கிவிட்டு அவர் சவால் விட்டிருந்தால், அதை ஏற்றுக்கொண்டு விவாதிக்கலாம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ‘420’ என்று கடுமையாக விமர்சித்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக அ.தி.மு.க-வுக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பட எரிப்பு, அ.தி.மு.க மீதான விமர்சனம் எனச் சலங்கை கட்டி ஆடுகிறது பா.ஜ.க. ஆனால், எதுவுமே நடக்காததுபோல கடந்து செல்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைச் சந்தித்து இது குறித்த சில கேள்விகளை முன்வைத்தேன்...

“கட்சி, சின்னம் என எல்லாம் கிடைத்தும் ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் வாக்கு மிகவும் குறைந்திருக்கிறதே... இதுதான் அ.தி.மு.க-வின் உண்மையான பலமா?”

“இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, காங்கிரஸுக்குத்தான் சீட் என்று சொன்னதோடு, அடுத்த இரண்டு நாள்களில் வேட்பாளரையும் அறிவித்து, தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார்கள் தி.மு.க-வினர். ஆனால், எங்கள் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதற்கு ‘சில காரணங்கள்’ இருந்தன. அதையெல்லாம் முறியடித்து, ஆளும் தரப்பின் பணமழையையும் தாண்டி, 43,000 வாக்குகளுக்கு மேல் பெற்று, தி.மு.க-வுக்கு சிம்ம சொப்பனமாகத்தானே இருக்கிறோம்?”

“அந்த ‘சில காரணங்’களில் ஒன்று பா.ஜ.க-தானே?”

“பிரதமர் வேட்பாளர் மோடி, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்பதுதான் எங்கள் கூட்டணியின் தேர்தல் உடன்பாடு. ஈரோடு கிழக்குக்கு அப்படியான உடன்பாடு ஏதும் இல்லை. எனவே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், போட்டியிடுவதென்று எடப்பாடி மிக உறுதியாக இருந்தார். அதன்படிதான் நடந்திருக்கிறது.”

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

“அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்துவிட்டு வெளியே வந்த, ‘பா.ஜ.க ஐடி விங் தலைவர்’ நிர்மல் குமாரை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொண்டதுதான் கூட்டணி தர்மமா?”

“அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பா.ஜ.க-வுக்குச் சென்றார்களே... அப்போது எடப்பாடியார் உட்பட அ.தி.மு.க-வில் யாரும் எந்த விமர்சனமாவது வைத்தோமா... எங்கு அரவணைப்பும் அங்கீகாரமும் இருக்கின்றனவோ அங்கு செல்வது இயல்புதான். கட்சி மாறுவது குறித்து விவாதிப்பது நியாயமே இல்லை.”

“உங்கள் தலைவர் எடப்பாடியின் உருவப்படத்தை பா.ஜ.க-வினர் எரிக்கிறார்கள். அதற்குக் குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூடக் காட்டாமல் இருப்பது நியாயமா?”

“தேசியக் கட்சியான பா.ஜ.க-வில் தன்னை விளம்பரப்படுத்துவதற்கு யாராவது, எதையாவது செய்வார்கள். அதையெல்லாம் பெரிதுபடுத்த நாங்கள் விரும்பவில்லை.”

“இதுவே ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படத்தை எரித்திருந்தால் சும்மா விடுவீர்களா?”

“இது போன்ற விஷயங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவைதான். அதற்காக யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்... இவ்வளவு நடந்தும் எடப்பாடியார் அமைதியாக இருக்கிறாரென்றால், அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். அ.தி.மு.க-வில் ராணுவக் கட்டுப்பாடு இருப்பதால்தான் தொண்டர்களும் அமைதியாக இருக்கிறார்கள்.”

“பா.ஜ.க-வினர் எடப்பாடியின் படத்தையும் எரித்துவிட்டு, அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தாலும் நீங்களெல்லாம் அமைதியாக இருப்பதற்கு பயம்தான் காரணம் என்கிறார்களே?”

“அதிகாரபூர்வமான கருத்துகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த, ஆளுங்கட்சித் தூண்டுதலின் பெயரில்கூட இது நடந்திருக்கலாம். தலைமைக்கு எல்லாம் தெரியும்.”

“வியப்பாக இருக்கிறது. இவ்வளவு நடந்தும் அண்ணாமலை குறித்துப் பேசவே தயங்குகிறீர்களே?”

“ஐ.பி.எஸ்-ஸாக இருந்து தலைமைக்கு வந்த அண்ணாமலை, தான் சார்ந்த இயக்கத்தை வலிமை பெறச் செய்ய பல்வேறு முயற்சிகளைச் செய்கிறார். அது பலன் அளிக்கலாம், பலன் அளிக்காமலும் போகலாம். ஆனால், கிளைக் கழகத்திலிருந்து வரும் நிர்வாகிகளை அரவணைப்பது என்பது அனுபவத்தில்தான் வருமே தவிர, படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. எடுத்த உடனே ‘ஜீபூம்பா’ என்று எதையும் செய்ய முடியாது என்பதை அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும்.”

“ஆனாலும், பா.ஜ.க என்றால் மட்டும் இவ்வளவு பொறுமை காட்டுகிறீர்களே?”

“அப்படியெல்லாம் இல்லை. இயல்பாகவே எடப்பாடியார் பொறுமையானவர். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய மாட்டார். உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கையான எடப்பாடியாரின் படத்தை எரித்த விவகாரத்தில், ஆளுங்கட்சியின் சூழ்ச்சி இருக்கிறதென்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அதனால்தான், இதைப் பொறுமையாகக் கையாளுகிறோம்.”

“உங்களுக்கே இது வேடிக்கையாக இல்லையா... எடப்பாடியின் படத்தை எரிக்கவேண்டிய தேவை ஆளுங்கட்சிக்கு என்ன இருக்கிறது?”

“இருக்காதா... மொத்த அமைச்சரவையையும் ஈரோட்டுக்கு அனுப்பி, ஓட்டுக்குக் கொலுசு, சிக்கன், மட்டன், பணம் எனக் கொடுத்தும், அதெல்லாம் வேண்டாம் என்று 43,000 மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். களத்தில் எதிரிகளே இல்லையென்று சொன்ன ஸ்டாலினுக்கு, நாங்கள் வாங்கிய வாக்குகளைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது.”

“ஈரோட்டில் கடந்த முறையைவிட வாக்கு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி, ‘எடப்பாடி என்னும் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று ஓ.பி.எஸ் விமர்சித்திருக்கிறாரே?”

“களத்தில் நின்று எங்களைவிட வாக்கு அதிகமாக வாங்கிவிட்டு அவர் சவால் விட்டிருந்தால், அதை ஏற்றுக்கொண்டு விவாதிக்கலாம். தேர்தல் களத்தில் வேட்பாளரை முன்மொழியக்கூட ஆள் இல்லாமல் வாபஸ் வாங்கிக்கொண்டு ஓடியவர்கள் உளறியதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.”

“ஆனால், ‘ஓ.பி.எஸ்-ஸை வாபஸ் வாங்கச் சொன்னதே நான்தான்’ என்று அண்ணாமலை சொன்னாரே?”

“அ.தி.மு.க-வின் 99 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடி பக்கம்தான் இருக்கின்றனர். `நாங்கள்தான் அ.தி.மு.க’ என்ற ஓ.பி.எஸ்-ஸின் கருத்தை, தேர்தல் ஆணையமும், மக்கள் மன்றமும் ஏற்கவில்லை. அதன்படி, வலிமையான ஒற்றைத் தலைமைக்காக அண்ணாமலை பேசியிருக்கிறார்.”

“ஆக, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. அப்படித்தானே?”

“பா.ஜ.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு விரும்பி வருகிறார்கள். அதனால் ஏற்படும் சங்கடத்தால், பா.ஜ.க-வினர் பேசுகிறார்கள். அதையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.”