Published:Updated:

சசிகலா பற்றிய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை!

ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.உதயகுமார்

- நழுவும் ஆர்.பி.உதயகுமார்

சசிகலா பற்றிய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை!

- நழுவும் ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.உதயகுமார்

‘நீட் தேர்வைக் கொண்டுவந்தது யார் என நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா..?’ என்று கெத்தான சவாலில் ஆரம்பித்த ‘தி.மு.க - அ.தி.மு.க’ இடையிலான போட்டி, ‘இன்னும் 27 அமாவாசைகள்தான் தி.மு.க பதவியில் இருக்கும்’ என்று ஆரூடம் கணிப்பதாகவும், ‘பா.ஜ.க-வுக்கு டப்பிங் கொடுக்காதீர்கள்’ என்ற பதிலடியாகவும் திசைமாறிப்போய்விட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்...

“ ‘இன்னும் 27 அமாவாசைகள் மட்டும்தான் தி.மு.க பதவியில் இருக்கும்’ என்று எடப்பாடி பழனிசாமி எப்படி ஆரூடம் சொல்லிவருகிறார்?’’

“ `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பதை மத்திய பா.ஜ.க அரசு, ஏற்கெனவே கொள்கை முடிவாக அறிவித்துவிட்டது. அதனடிப்படையில் பார்த்தால், வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடைமுறைப்படுத்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதைத்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவருகிறார். இது ஒன்றும் சட்ட விரோதமானது அல்ல!’’

“கடந்த 2018-ம் ஆண்டு, ‘ஒரே தேர்தல் திட்ட’த்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., இப்போது அதே திட்டத்தை வரவேற்பது எப்படி?’’

“2018-ல் ‘ஒரே தேர்தல்’ திட்டம் ஆரம்பகட்டத்தில் இருந்தது. எனவே, அதனுடைய ஷரத்துகள் என்னென்ன என்பதெல்லாம் ஆரம்பநிலை விவாதத்தில்தான் இருந்தன. அதுதான் காரணம். அந்த விவாதத்தில்கூட, ‘ஜனநாயகத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் முழு ஆயுட்காலமும் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்’ என்ற வாதமும் எங்களால் முன்வைக்கப்பட்டது. அப்போதும்கூட பா.ஜ.க-வின் கொள்கை முடிவோடு அ.தி.மு.க முரண்படவில்லை. வேளாண் சட்டத்தைக்கூட சில திருத்தங்களோடுதான் நாங்கள் வரவேற்றோம்.”

“இப்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் ‘தி.மு.க அரசு, பாதியிலேயே முடிந்துபோகட்டும்’ என்று ‘ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவு தருகிறீர்களா?’’

“அப்படியெல்லாம் இல்லை. ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவோர் அரசும் கலைக்கப்படக் கூடாது என்பதில் திராவிட இயக்கக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளுக்குமே ஒத்த கருத்துதான். கடந்தகால அரசியல் வரலாற்றில், இரண்டு கட்சிகளின் ஆட்சியுமே கலைக்கப்பட்டன. ஆனால், மீண்டும் நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அம்மா ஆட்சியை மக்கள் அமைத்துக் கொடுப்பார்கள் என்றுதான் சொல்கிறோம். இத்துடன் இந்தக் கேள்வியை விட்டுவிட்டு, அடுத்த கேள்விக்கு வாருங்கள்.’’

“ `ஊழல் கறை படிந்து, பா.ஜ.க-வின் அடிமைகளாக இருந்த அ.தி.மு.க-வினருக்குத் தெரிந்ததெல்லாம் அமாவாசை அரசியல்தான்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்திருக்கிறாரே?’’

“மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான உறவு என்பது, பக்கத்து வீட்டுக்காரர்கள் உறவு போன்று கிடையாது. அது தாய், பிள்ளை இடையிலான உறவு. அந்த உறவை நல்ல முறையில் பேணிக் காத்தால்தான், திட்டங்களையும் நிதியையும் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத்தர முடியும். அந்த வகையில், தாயாக இருந்துவரக்கூடிய மத்திய பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் அன்றைக்கிருந்த அ.தி.மு.க எனும் பிள்ளை அரசுக்குக் கொடுத்துவந்த மரியாதையை ‘அடிமை’ என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ‘பேரிடர் நிவாரண நிதியாக நாங்கள் கேட்டிருந்த தொகையை இதுவரை மத்திய பா.ஜ.க அரசு தரவில்லை, எப்போது கொடுப்பார்கள் என்ற தேதியும் சொல்லப்படவில்லை’ என்றெல்லாம் தமிழக முதல்வரே சொல்கிறார். தி.மு.க அரசுதான் வலிமையுள்ளதாயிற்றே... ஏன் உங்களால் பேரிடர் நிவாரண நிதியை மத்திய பா.ஜ.க அரசிடமிருந்து வாங்க முடியவில்லை? ஆனால், நீங்கள் விமர்சிக்கிற அ.தி.மு.க அரசுதான் கடந்த காலங்களில், உரிய நிதியைப் பெற்று, மக்களுக்குக் கொடுத்திருக்கிறது.’’

சசிகலா பற்றிய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை!

“2024-ல் மீண்டும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, ‘அப்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்றுதானே எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ‘கூட்டணி கிடையாது’ என்று உறுதியாக மறுக்க முடியவில்லையே?’’

“ஆமாம்... அப்படித்தானே சொல்ல முடியும்... நடந்துகொண்டிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ‘கூட்டணி இல்லை’ என்று அறிவித்துப் போட்டியிடுகிறோம். அடுத்து 2024-ம் ஆண்டு வரப்போகிற தேர்தலில், அன்றைய சூழலைப் பொறுத்துத்தான் அ.தி.மு.க தலைமை அறிவிக்கும். அதைவிடுத்து, ‘இப்போதே சொல்லுங்கள்’ என்றால், எப்படிச் சொல்ல முடியும்?’’

“2024-ல் `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பது வரையிலும் சொல்லத் தெரிந்த அ.தி.மு.க-வுக்குக் கூட்டணி பற்றியும் கணிக்க முடியாதா என்ன?’’

“திரும்பவும் சொல்கிறேன்... ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பது எங்களுடைய திட்டம் அல்ல. அது மத்திய பா.ஜ.க அரசின் கொள்கை முடிவு. இது குறித்த வெளிப்படையான அறிவிப்பையும் ஏற்கெனவே மத்திய அரசு வெளியிட்டுவிட்டது. அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். எனவே, இதனோடு கூட்டணி பற்றிய கேள்வியை முடிச்சுப்போடாதீர்கள்!’’

“ ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க என்னிடம் வரும்’ என்று சசிகலா நம்பிக்கை தெரிவித்திருக்கிறாரே?’’

“இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை!’’

“தேர்தலுக்குப் பிறகு மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும் சசிகலா கூறுகிறாரே?’’

“ஏற்கெனவே சொல்லிவிட்டேனே... என்னிடம் பதில் இல்லை என்று!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism