Election bannerElection banner
Published:Updated:

நாற்காலி சர்ச்சை, தேர்தல் தோல்வி; துரத்திய வழக்கு!- உயிரை மாய்த்துக்கொண்ட ஆந்திர முன்னாள் சபாநாயகர்?

kodela sivaprasada rao
kodela sivaprasada rao ( FaceBook/Palanatipuli.DrKodelaSivaprasadaro )

ஆந்திர அரசியலில் 36 வருடங்கள் செயலாற்றி, என்.டி.ஆர் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கையைப் பெற்ற ஆந்திராவின் முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாத் ராவ் இன்று பிற்பகல் காலமானார்.

1947-ம் வருடம் மே 20-ம் தேதி பிறந்த சிவபிரசாத்தின் சொந்த ஊர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகரிகல் மண்டல். ஐந்தாம் வகுப்பு வரை தன் சொந்த கிராமத்திலேயே படித்த இவர், பின்பு விஜயவாடாவில் கல்லூரி படிப்பைத் தேர்வு செய்தார். மருத்துவ வசதிகள் இல்லாமல் இவரின் சகோதரர் உயிரிழந்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிவபிரசாத், தானும் ஒரு மருத்துவராக வேண்டும் என விரும்பி எம்.பி.பி.எஸ் படித்துத் தேர்ச்சி பெற்றார். பின்னர் வாரணாசியில் எம்.எஸ் படித்தார். இதையடுத்து மீண்டும் ஆந்திராவுக்கு வந்து பல்நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் நீண்ட காலம் பணியாற்றி வந்தார்.

kodela sivaprasada rao
kodela sivaprasada rao
FaceBook/Palanatipuli.DrKodelaSivaprasadaro

இவருக்கு சசிகலா என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவராகவே பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில், 1983-ம் ஆண்டு என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் பிறகு மருத்துவர் பணியை விடுத்து முழு நேர அரசியல்வாதியாக மாறினார். என்.டி.ஆர் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

`மொத்த அன்பையும் தன் தம்பிக்குக் கொடுத்தாள்!' - கேன்சர் குழந்தையின் நிலை குறித்து  தாயின் வேதனை

ஆந்திர அரசியலில் புகழ்பெற்ற அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவின் சபாநாயகராக சிவபிரசாத் நியமிக்கப்பட்டார். அப்போது ஹைதராபாத்தில் இருந்த ஆந்திர சட்டமன்றம் அமராவதிக்கு மாற்றப்பட்டது. அப்போது, சட்டசபையில் உள்ள நாற்காலி போன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களைத் தன் வீட்டிலும் தன் மகன் அலுவலகத்திலும் வைத்திருந்தார்.

kodela sivaprasada rao
kodela sivaprasada rao

சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து நாற்காலிகள் மீட்கப்பட்டன. மேலும் சட்டமன்றத்திலிருந்த லேப்டாப் போன்ற சாதனங்களை முன்னாள் சபாநாயகரின் மகன் திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து சிவபிரசாத் மற்றும் அவரின் மகன் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வழக்குப் பதிவு செய்தது. கடந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்த பிறகு, பல வழக்குகளால் இவரும் இவரின் குடும்பத்தினரும் பழிவாங்கப்படுவதாகத் தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் கூறியிருந்தன.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் சிவபிரசாத். உடனடியாக இவரைக் காப்பாற்றி பசவாடரகம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிலமணி நேர சிகிச்சைக்குப் பிறகு சிவபிரசாத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிவபிரசாத்தும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இணைந்து உருவாக்கியதுதான் பசவாடரகம் மருத்துவமனை. அவர் கட்டிய மருத்துவமனையிலேயே சிவபிரசாத்தின் உயிர் பிரிந்தது.

kodela sivaprasada rao
kodela sivaprasada rao

``தன் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட வேதனையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பல்வேறு புகார்களின் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு ஒதுங்கியிருந்தார். அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை. அந்தளவுக்குப் பெரிய பிரச்னை எதுவும் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது” எனத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

இருப்பினும், சிவபிரசாத்தின் தற்கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இவரின் இறப்புக்கு ஆந்திராவில் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பதவியேற்ற முதல் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றவர் சிவபிரசாத் ராவ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு