பா.ஜ.க-வின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்த அண்ணாதுரை என்பவர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு புகார் ஒன்றை கோவை மாநகர ஆணையரிடம் அளித்திருக்கிறார். பா.ஜ.க வட்டாரத்தில், இந்தச் சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாதுரையை பா.ஜ.க நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அண்ணாதுரை, ``நான், `பழைய சோறு டாட் காம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் நடத்திவருகிறேன். அந்த வகையில் கோவை கிளையை சாய்பாபா காலனியில், டி.எம்.பழனிசாமி என்பவரின் கட்டடத்தில் வாடகைதாரர் ஒப்பந்த அடிப்படையில் அமைத்தேன். எனது உணவகத்தை அழகுபடுத்த நான்கு லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன்.

மேற்படி ஏழு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறேன். நான் வாடகை பாக்கி ஏதும் வைக்கவில்லை. கட்டடத்தின் உரிமையாளர் பழனிசாமி, 'நான் அமெரிக்காவுக்குச் செல்கிறேன். அதனால், வாடகைப் பணத்தை என் மகள் பிருந்தாவிடம் கொடுங்கள்' என்றார். அதையடுத்து, வாடகைத் தொகையை அவர் கூறியவாறு செலுத்திவந்தேன். இந்த நிலையில், கட்டட உரிமையாளர் பழனிசாமியின் மகள் பிருந்தா, தினமும் என் நிறுவனத்துக்கு வந்து உட்கார்ந்துகொள்வதும், என் பணியாளர்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கேட்பதையும் வாடிக்கையாகவே வைத்திருந்தார். இதையடுத்து, `எனது நிறுவனத்தில் எந்தத் தலையிடும் செய்யாதீர்கள்’ என்று கூறினேன்.
இதனால் ஆத்திரமடைந்த பிருந்தா, என்னைத் தொழில் செய்யவிடாமல் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார். இதனால் என் தொழில் பாதிக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் வரை எனக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கட்டட உரிமையாளர் பழனிசாமியும் அவரின் அடியாட்களும் என்னைக் கட்டடத்திலிருந்து வெளியேற்ற முயன்றார்கள்.
கட்டட உரிமையாளர் பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்திருக்கிறார். அதையடுத்து கடந்த செவ்வாய்கிழமையன்று (23/5/2023), பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில், கோவை மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமி, மாவட்டப் பொதுச்செயலாளர் செந்தில் ஆகியோரின் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர், எனது கடையிலிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

என் பீரோவில் இருந்த முக்கியமான கோப்புகளுடன், 82,000 ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். தற்போது அந்தக் கட்டடத்தில் பா.ஜ.க-வின் கொடியும், பெயர்ப் பலகையும் நடப்பட்டிருக்கின்றன. அருகில் வசிப்போரிடம், தாங்கள் கடையை காலி செய்யச் சொன்னதாகக் கூறியிருக்கின்றனர். இந்தத் தகவலை அறிந்ததும் சென்னையிலிருந்து கோவைக்கு விரைந்தேன். நிறுவனத்துக்கு நேரில் சென்றபோது, குண்டர்கள் என்னை, `கொலை செய்துவிடுவோம்' என்று மிரட்டினர். இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர ஆணையரிடம் புகாரளித்திருக்கிறேன். இது தொடர்பான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது" என்றார்.
பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை, கோவை மாநகர ஆணையரிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் தரப்பிலும் மாநகர ஆணையரிடம் முறையிடப்பட்டது. புகார் அளித்த பிறகு பேசிய கட்டட உரிமையாளரின் மகள் பிருந்தா, "அண்ணாதுரைக்குக் கட்டடத்தை வாடகைக்குக் கொடுத்தோம். அவர் ஏழு மாத காலமாகவே, வாடகைத் தொகையைச் செலுத்தவில்லை. இது குறித்து சி.எம் செல்லுக்குப் புகாரளித்திருந்தேன்.
மூன்று மாத காலத்தில் காலி செய்துவிடுவதாகக் கூறினார். கடந்த வாரம், கட்டடத்தைக் காலி செய்துகொண்டிருப்பதாக, அருகில் வசிப்பவர்கள் எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கே சென்றோம், அங்கு பொருள்கள் ஏதும் இல்லை... கதவுகள் திறந்தே கிடந்தன. அவராகவே கட்டடத்தைக் காலி செய்துவிட்டார் என்று நினைத்து விட்டுவிட்டோம். தற்போது, எங்களிடம் நஷ்ட ஈடு கேட்டு தொந்தரவு செய்துவருகிறார். நாங்கள் சாதாரணமானவர்கள் என்று தெரிந்துகொண்டு, அண்ணாதுரை எங்களை டார்கெட் செய்கிறார்" என்றார்.

கட்டட உரிமையாளர் தரப்பு வழக்கறிஞரும், பா.ஜ.க வழக்கறிஞர் அணியின் உறுப்பினருமான பூர்ணிமா, ``தலைவர் அண்ணாமலைக்கு வேறு வேலை உண்டு. வீடு காலி செய்வது அவரின் வேலை இல்லை. அண்ணாதுரை, கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உண்டு. மேலும், வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகப் பலரிடம் மோசடி செய்திருப்பதாக அவர்மீது புகார் இருக்கிறது. அவர் கூறியதுபோல, எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை" என்றார்.