Published:Updated:

`வெல்ல வியாபாரம் - முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர்!’ - எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'யார் முதல்வர்?' என்ற வாதம் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், ஏற்கெனவே ஜெயலலிதா சிறைசென்றபோது இரண்டுமுறை இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அது நீண்ட நாள்கள் நிலைபெறவில்லை.

``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக்கொண்ட ஓர் இயக்கம். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்.”

- என்று சட்டமன்றக் கூட்டத்தில் கர்ஜனை செய்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் சொல்லிச் சென்றதைப்போலவே, அவரின் மறைவுக்குப் பிறகும் அதிமுக-வை கட்டிக்காத்து, பல இன்னல்களைக் கடந்து முதல்வர் அரியணை ஏறியவர்தான் எடப்பாடி கே. பழனிசாமி. 'இதோ கவிழ்ந்துவிடும்', 'அதோ கவிழ்ந்துவிடும்' என்றன எதிர்க்கட்சிகள். அதிமுக-விலிருந்து பிரிந்து சென்று, அமமுக-வை ஆரம்பித்து, தாய்க்கட்சிக்கு எதிராகவே களத்தில் நிற்கும் தினகரன், 'மாநில சுயாட்சிக்கே' சவால்விடும் வகையில் ஆளும் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம், அரசுக்கு எதிராக இடைவிடாது நடக்கும் மக்கள் போராட்டங்கள், கட்சிக்குள்ளே கோஷ்டிப் பூசல்கள் என அனைத்தையும் சமாளித்து ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தது மட்டுமல்லாமல், தனது அரசியல் சாணக்கியத்தன்மையால் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்தான் எடப்பாடி கே. பழனிசாமி.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எத்தனையோ வலிமையான தலைவர்கள், அரசியல் ஆளுமைகள், திரை வெளிச்சம்கொண்ட தலைவர்கள் கட்டியாண்ட தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை, யாரும் எதிர்பாராத வண்ணம், சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அதிமுக-வின் ஓர் அடிப்படைத் தொண்டனாக இருந்துவந்தவர் அலங்கரித்தார். அரசியலில் எதுவும் சாத்தியம் என்பவர்களுக்கும்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது எடப்பாடி பழனிசாமியின் இந்த வளர்ச்சி. சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் எனும் சிற்றூரைப் பிறப்பிடமாகக்கொண்டவர் எடப்பாடி கே. பழனிசாமி. சாதாரண விவசாய குடும்பப் பின்னணியைக்கொண்ட இவர் மே 12, 1954-ம் ஆண்டு கருப்பக் கவுண்டர், தவசியம்மாள் இணையருக்கு, இளைய மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே சுமார் 4 கி.மீ வரை நடந்தே சென்று கோனேரிப்பட்டியில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார். தொடர்ந்து, 1967-ம் ஆண்டு பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பின்னர், ஈரோடு வாசவி கல்லூரியின் விலங்கியல் துறையில் சேர்ந்த பழனிசாமி, கல்லூரிப் படிப்பை ஏனோ பாதியிலேயே கைவிட்டார். இருந்தாலும், மேற்கொண்டு என்ன செய்வது என்பதில் தெளிவாக இருந்த பழனிசாமி சுயதொழில் தொடங்கினார். எடப்பாடியின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் வெல்ல உற்பத்தியாளர்களிடம், வெல்ல மூட்டைகளை வாங்கி, அவற்றை 2 ரூபாய் கமிஷனுக்குச் சந்தைகளில் விற்று தொழில்செய்து வந்தார். தொழில் சார்ந்து பட்டப்பெயர்கள் வைத்து கிண்டல் செய்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொழில் செய்துவந்த பழனிசாமி, தனது திரை நாயகனான எம்.ஜி.ஆரின் அரசியல் வருகையால் அதிமுக-வின் அடிப்படைத் தொண்டனாக தன்னை இணைத்துக்கொண்டார்.

சாதாரண வெல்ல வியாபாரியாக இருந்தவருக்கு, அதிமுக அமைச்சர் செங்கோட்டையனுடன் தொடர்பு ஏற்படவே, 1974-ம் ஆண்டு கோனேரிப்பட்டி கிளைச் செயலாளர் பதவி கிடைத்தது. அதுதான் பழனிசாமிக்குக் கட்சியில் கிடைத்த முதல் பதவி. அதன் பின்னர், எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்போதே தன்னை தீவிர ஜெயலலிதா விசுவாசியாகக் காட்டிக்கொண்டவர், 1985-ம் ஆண்டு எடப்பாடி ஒன்றியப் பகுதிகளில் 'அம்மா பேரவை'-யைத் தொடங்கி கொடிக்கம்பங்களையும் நாட்டினார். தொடர்ந்து, 1986-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிலுவம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவராகப் போட்டியிட்டவருக்கு தனது முதல் தேர்தலில் தோல்வி மட்டுமே மிஞ்சியது. ஆனாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி போய்விட்டதே என்று நினைத்தவருக்கு, அடுத்துவந்த சட்டமன்றத் தேர்தலில் அவரே நினைத்துப் பார்க்காத வகையில் வந்துசேர்ந்தது எம்.எல்.ஏ பதவி.

ஆம், 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்துவிடவே, அதிமுக-வில் குழப்பம் நீடித்தது. அதிமுக., ஜெயலலிதாவின் தலைமையில் ஓர் அணியாகவும், எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் இரண்டாகப் பிளவுபட்டது. அதில், ஜெயலலிதாவின் பக்கம் தனது விசுவாசத்தைக் காட்டிய பழனிசாமிக்கு, 1989-ம் ஆண்டு நடைபெற்ற மறு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வின் ஜெ அணியின் சார்பாகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. தனது சொந்தத் தொகுதியான எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனிசாமி முதன்முறையாக வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதன்பிறகு ஏறுமுகமே வாய்த்த பழனிசாமிக்கு, 1990=ம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் பதவி கிடைத்தது. திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஒன்றுபட்ட அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட பழனிசாமி இம்முறையும் எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்றார். அதன் பின்னர், 1991-ம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், 1992-ம் ஆண்டு திருக்கோயில்களின் வாரியத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 1993-ம் ஆண்டு, சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி தோல்வியடைந்தார். இம்முறை சட்டமன்றத்துக்குச் செல்லும் வழியைத் தவறவிட்ட பழனிசாமிக்கு அடுத்த முறை நாடாளுமன்றத்தில் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. 1998-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னரே, மத்தியில் ஆட்சி கவிழவே தனது பதவியை இழந்தார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற மறு நாடாளுமன்றத் தேர்தலில், அதே திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி இம்முறை தோல்வியடைந்தார். அதன் பிறகு எடப்பாடிக்கு தோல்வி முகமே தொடர்ந்தது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், அதே திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தார். இருப்பினும், 2001-ம் ஆண்டு தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவராகவும், 2006-ம் ஆண்டு அதிமுக-வின் கழகக் கொள்கைபரப்புச் செயலாளராகவும், 2007-ம் ஆண்டு அதிமுக-வின் அமைப்புச் செயலாளராகவும் படிப்படியாகப் பதவிகள் வழங்கப்பட்டு கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டார் பழனிசாமி .

தொடர்ச்சியாகத் தோல்வியைக் கண்டிருந்தாலும், தன்மீதான அசைக்க முடியாத விசுவாசத்தால் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. மனம்தளராத பழனிசாமி, வெற்றியும் தோல்வியும் கண்ட எடப்பாடி தொகுதியிலேயே இம்முறையும் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார். இருபது ஆண்டுகளுக்குப் பின்பு சுவைக்கப்பட்ட சட்டமன்ற வெற்றிக்கு கூடுதல் இனிப்பு சேர்க்கும் வகையில், முதன்முறையாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் பழனிசாமி. அதன் பிறகு, 2014-ம் ஆண்டு அதிமுக-வின் கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர், தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் எனத் தொடர்ச்சியாகப் பல பதவிகளைப் பெற்று ஏறுமுகமாகவே காட்சியளித்தார் எடப்பாடி பழனிசாமி. 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பழனிசாமி, நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் சேலத்திலுள்ள 11 தொகுதிகளில், அதிமுக 10 தொகுதிகளில் வெற்றிபெறவே அதற்கு முக்கியப் பங்காற்றிய பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கி அழகுபார்த்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும் சிறப்பாக, 2011 முதல் 2016 வரையிலான ஜெயலிலதா தலைமையிலான ஆட்சிக்காலத்தில், பல்வேறு முறை அமைச்சரவை மாற்றப்பட்டபோதிலும்கூட, மாற்றப்படாத அமைச்சர்களில் ஒருவராக எடப்பாடி பழனிசாமி வலம்வந்தார். இது பழனிசாமி மீது ஜெயலலிதா வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. நிலைமை இப்படிச் சீராகச் சென்றுகொண்டிருக்க, திடீரென வந்து சேர்ந்தது ஓர் அதிர்ச்சி செய்தி. திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று வந்த தகவல், கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி அனைவரின் மனதிலும் இடியாக இறங்கியது. டிசம்பர் 5, 2016 அன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்ட ஜெயலலிதா சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி,  பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்
விகடன்

அடுத்து 'யார் முதல்வர்?' என்ற வாதம் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், ஏற்கெனவே ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது இரண்டுமுறை இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அது நீண்ட நாள்கள் நிலைபெறவில்லை. அதிமுக-வின் பொதுக்குழு கூடி எடுக்கப்பட்ட முடிவில், ஜெயலலிதாவின் மிகநெருங்கிய தோழியான வி.கே.சசிகலா அதிமுக-வின் புதிய பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. இதனால், அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக, கவர்னருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துவிட்டு, ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தர்மயுத்ததில் ஈடுபட்டார். தன்னை வற்புறுத்தியே ராஜினாமா செய்யவைத்ததாக சசிகலா மீது சரமாரியாகக் குற்றம் சுமத்தினார். இதனால், அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு வரவே, நான்காண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க, பெங்களூர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அந்த இக்கட்டான சூழலிலும் தனக்கு விசுவாசமான ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு சிறை செல்ல தீர்மானித்த சசிகலாவுக்கு, எடப்பாடி பழனிசாமியே முன்னணியில் இருந்தார். கட்சியில் எத்தனையோ சீனியர் தலைவர்கள் இருக்கும்போதுகூட, பெருமளவு அறியப்படாத பழனிசாமியை முதல்வராக முன்மொழியக் காரணமாக அமைந்தது, ஜெயலலிதாமீதும், சசிகலா மீதும் எடப்பாடி பழனிசாமிகொண்டிருந்த தீவிரமான விசுவாசமே என்று சொல்லப்பட்டது. அதிமுக-வின் சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு, பிரிந்துகிடந்த ஓ.பன்னீர்செல்வம் அணியை அதிமுக-வோடு மீண்டும் இணைத்து, இரட்டை இலையில் உதிர்ந்த ஒற்றை இலையை ஒன்று சேர்த்து ஒருசேர மலரச்செய்தார். கட்சியின் அவசரப் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவே எதிர்பாராத வண்ணம், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கினார். அதோடல்லாமல், டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், உறுப்பினர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேரையும் கட்சியைவிட்டு நீக்கினார் பழனிசாமி. இந்த அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு, தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கட்சியைவிட்டு நீக்கி துரோகம் இழைத்துவிட்டார் பழனிசாமி என்று சசிகலா தரப்பினரும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக விமர்சனம் செய்துவந்தன. ஆனால், கட்சியிலிருக்கும் முதன்மைப் பொறுப்பாளர்கள், அரசியல் வல்லுநர்கள் உட்பட பெரும்பாலானோர் பழனிசாமியின் இந்தச் செயலைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர் . அவர்கள், சாணக்கியத்தனமாகச் செயல்பட்டு கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றிவிட்டார் பழனிசாமி என்றனர்.

அதுவரையில், பணிவும் சிரிப்புமே பழனிசாமியின் முகமாக அனைவராலும் பார்க்கப்பட்ட நிலையில், தனக்குள்ளாக அரசியல் சாணக்கியத்தன்மையும் இருப்பதைச் சொல்லாமல் சொல்லிக்காட்டினார் பழனிசாமி. ஆட்சிக்கு வந்த புதிதில், சில சறுக்கல்களையும், ஏராளமான விமர்சனங்களையும் சந்தித்த பழனிசாமி காலப்போக்கில் தனது அசாத்திய சாதனைகளால் அவற்றையெல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்குத் துடைத்தெறிந்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக, ஜெயலலிதா கருணாநிதி ஆட்சிக்காலத்திலேயே செய்ய முடியாமல், 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுவந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்குக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி செயல்பாட்டைத் தொடங்கினார்.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்கொண்டு ஆண்டுக்கணக்கில் அவற்றை எதிர்த்துப் போராடிவரும் டெல்டா மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தார் பழனிசாமி. அப்போது, ஆளுநரின் கையெழுத்துக்காகக்கூட காத்திருக்காமல் அதிரடி அரசாணை வெளியிட்டு, தனது ஆளுமையை நிரூபித்தார். அதேபோல், மாவட்டத்துக்கு ஒரு மருத்துக் கல்லூரி வீதம் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியை வாங்கிக்காட்டினர்.

தனி இடஒதுக்கீட்டுக்காக 40 ஆண்டுக்காலமாக போராடிவரும் வன்னியர் சமுதாய மக்களுக்காக 20% எம்.பி.சி இடஒதுக்கீட்டில் 10.5% தனி உள் ஒதுக்கீட்டைத் துணிந்து அறிவித்தார். தான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன் என்று ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொள்ளும் பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன்கள் அனைத்தையும் ஒரே அறிவிப்பாகத் தள்ளுபடி செய்தார். மன்னர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்துப் பணிகளை, முதன்முதலாகத் தனது ஆட்சியில் கொண்டுவந்து செயல்படுத்தி அனைவரும் வியக்கும்வண்ணம் நீர்மேலாண்மையை உறுதி செய்தார். இதுமட்டுமல்லாமல், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை, கல்வித் தொலைக்காட்சி, 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சிறந்த மாநிலத்துக்கான விருதுகள் என எடப்பாடி பழனிசாமி பல சாதனைகளை, மிகக்குறுகிய காலத்தில் செய்துகாட்டியிருக்கிறார்.

“என் சக்திக்கு என்னால் செய்ய முடிந்த அளவுக்கு நல்லதைச் செய்கிறேன்” என்று உருக்கமாகச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, சொன்னபடியே தன்னால் முடிந்தவற்றைச் செய்தார். தற்போது, 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக அரியணை ஏறுவேன் என்று களத்தில் இறங்கினார். ஆனால் அவர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்றபோதும் அதிமுக ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றவில்லை. எனவே, தமிழக முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்தார்.

அதிமுக
அதிமுக

தற்போது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான ரேஸிலும் பன்னீர்செல்வத்தின் கையே ஓங்கியதாகச் சொல்லப்பட்டது. டெல்லியிலிருந்துகூட பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகப் பேசப்பட்டதாகக்கூட தகவல் வெளியானது. என்றாலும் அதே பன்னீர்செல்வமும் கையெழுத்திட்ட அறிவிப்பில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்!

டெல்லி கொடுத்த க்ரீன் சிக்னல்.. எதிர்கட்சித்தலைவர் ஆகிறாரா பன்னீர்செல்வம்?
அடுத்த கட்டுரைக்கு