Published:Updated:

ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை பதவி வழங்கிய பா.ஜ.க... நன்றிக் கடனா... மரபு மீறலா?!

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பா.ஜ.க அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 12, 2018 டெல்லியில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய இரண்டாவது மூத்த நீதிபதி செலமேஸ்வரின் இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடக்க இருப்பதாக தகவல் வருகிறது. பொதுவாக நீதித்துறை ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே இருப்பது. எனவே இந்தச் செய்தி பலருக்கும் புதிராக இருந்தது.

உள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை செலமேஸ்வர் இல்லத்துக்கு விரைந்தன. தலைமை நீதிபதி தவிர்த்த நான்கு மூத்த நீதிபதிகள் ’உச்சநீதிமன்றம் சரிவர இயங்கவில்லை, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நீதித்துறை வரலாற்றில் இது முதல்முறை.

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர்களைச் சந்தித்த நான்கு நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாய் அடுத்து தலைமை நீதிபதியானார். நீதித்துறையின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் ஒவ்வொன்றாக குறையும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழானது, பத்திரிகையாளர் சந்திப்பில் எந்தெந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ அதற்கு வலுசேர்க்கும் விதத்திலே கோகாயின் பதவிக்காலம் அமைந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் அரசுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற நான்கு மாதத்திற்குள் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் ரஞ்சன் கோகாய்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசு வழங்கும் பதவிகளை ஏற்கக்கூடாது என்கிற மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பணி ஓய்வுக்குப் பிறகான ஆதாயங்களுக்காக பணிக்காலத்தில் சமரசம் செய்துகொள்ள நேரிடும் என்பதே இதற்குக் காரணம். ஆனால், சமூகக் காலங்களில் பணி ஓய்வுக்குப் பிறகான நீதிபதிகளின் நியமனங்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.

மனித உரிமைகள் ஆணையம், சட்டக்குழு போன்ற சில அமைப்புகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இத்தகைய சூழலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து புதிய பணிக்கு நியமிக்கப்படுவார்கள். தற்போது அந்த மரபும் மீறப்பட்டுள்ளது.

நான்கு நீதிபதிகள்
நான்கு நீதிபதிகள்

கோகாயுடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய செலமேஸ்வர், குரியன் ஜோசப் பணி ஓய்வுக்குப் பிறகு எந்த அரசுப் பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்திருந்தனர். ரஞ்சன் கோகாயின் பதவிக்காலத்திலும் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. ரஃபேல் தொடங்கி அயோத்தி வழக்கு வரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை கையாண்ட கோகாய் அமர்வு அரசுக்குச் சாதகமான தீர்ப்புகளையே வழங்கியுள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன்தான் ஓய்வு பெற்றார்.

ரஃபேல்:

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கை நீண்ட விசாரணைக்குப் பிறகு முகாந்திரம் இல்லை எனக்கூறி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. தீர்ப்பில் உள்ள பல குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவைவும் விசாரணைக்குப் பிறகு நீண்ட காலம் ஒத்திவைத்து தள்ளுபடி செய்தது அதே அமர்வு.

அயோத்தி:

உலகத்திலே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட பாபர் மசூதி - ராமர் கோயில் நில விவகார வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் விமர்சனங்குள்ளானது. தற்போது வரை அந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்பது தெரியவில்லை. பா.ஜ.க-வின் நிலைப்பாட்டுக்குச் சாதகமாகவே இந்தத் தீர்ப்பு அமைந்தது.

மோடி - ரஞ்சன் கோகாய்
மோடி - ரஞ்சன் கோகாய்

என்.ஆர்.சி:

அஸ்ஸாம் என்.ஆர்.சி வழக்கை கோகாய் அமர்வு தான் மேற்பார்வை செய்துவந்தது. கோகாயும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர் என்பதால் என்.ஆர்.சி வழக்கிலிருந்து அவர் விலகிக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டார். தற்போது அஸ்ஸாமில் நிலவிவரும் என்.ஆர்.சி குழப்பத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தலையீடும் நிர்பந்தமும் ஒரு காரணமே..

பாலியல் புகார்:

ரஞ்சன் கோகாய் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அவர் மீது பகீரங்கமான பாலியல் புகார் சுமத்தினார். அந்த வழக்கை கோகாய் மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதமும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. அந்த வழக்கை விசாரித்த அமர்வுக்கு அவரே தலைமை தாங்கினார். பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரிக்காமலே கோகாய் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றத்தின் துறை ரீதியான விசாரணை தீர்ப்பு வழங்கியது.

``அமைச்சர் கனவு கிடையாது; ஆனால், த.மா.கா-வுக்கு அங்கீகாரம் தேவை!''- என்ன சொல்கிறார் ஜி.கே.வாசன்?

சி.பி.ஐ வழக்கு:

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வெர்மா நள்ளிரவில் பணியிலிருந்து நீக்கப்பட்ட வழக்கிலும் கோகாய் அமர்வு அரசுக்குச் சாதகமான தீர்ப்பையே வழங்கியது என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

இவற்றோடு, காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, அரசியல்வாதிகள் சிறைவைக்கப்பட்டது தொடர்பான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது கோகாய் அமர்வு. அரசுக்குச் சாதகமான தீர்ப்புகள் வழங்கியதன் பிரதிபலனாக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மத்திய அரசு நன்றிக்கடனாக ரஞ்சன் கோகாய்க்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது என நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு நிகழ்வில் பேசிய ரஞ்சன் கோகாய், “பணி ஓய்வுக்குப் பிறகான நியமனங்கள் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது ஏற்படுகிற வடு” என்று தெரிவித்திருந்தார். சரியாக ஓராண்டு கழித்து ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ‘எதற்காக இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்பதை உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகு ஊடகங்களிடம் தெரிவிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார் ரஞ்சன் கோகாய். தேசம் அவரின் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு