Published:Updated:

``அதிமுக-வின் படுதோல்விக்குத் துரோகி எடப்பாடி பழனிசாமிதான் காரணம்" - ஓபிஎஸ் காட்டம்

ஓ.பி.எஸ்.

``அ.தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம், எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்." - ஓ.பன்னீர்செல்வம்

Published:Updated:

``அதிமுக-வின் படுதோல்விக்குத் துரோகி எடப்பாடி பழனிசாமிதான் காரணம்" - ஓபிஎஸ் காட்டம்

``அ.தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம், எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்." - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ்.

நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தகைய தோல்விக்குப் பிறகு, `பணநாயகம் வென்றுவிட்டது, ஜனநாயகம் தோற்றுவிட்டது' என அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டது. மேலும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், `ஜனநாயக முறையில் தேர்தல் நடந்திருந்தால் அ.தி.மு.க வென்றிருக்கும்' என நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ``கழகத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கும் நம்பிக்கைத் துரோகிக்கு கடும் கண்டனம்" என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்த அந்த அறிக்கையில், `` `ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை, அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகளின் வலுவின்மையில்தான் இருக்கிறது' என்றார் பேரறிஞர் அண்ணா. நேற்றைய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையிலும், கழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற அம்மாவின் புகழுக்குப் பங்கம் ஏற்படும் வகையிலும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. பல காரணங்களால் பொதுமக்கள் தி.மு.க அரசின்மீது மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்ற நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி வாய்ப்பைப் பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அ.தி.மு.க அடைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், கழகத்துக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முடிந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள்தான்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இவற்றைப் பார்க்கும்போது `பொதுப்பணி என்ற பெயரால், தான் பெற்ற செல்வாக்கை பணப்பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன் மக்களால் வெறுக்கப்படுவான்' என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத்தேர்தல்தான். இதற்குக் காரணம் துரோகியும், துரோகியின் தலைமையிலான ஒரு சர்வாதிகார கூட்டமும்தான். அ.தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம், எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அ.தி.மு.க-வுக்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்களையெல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதி பாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு, மனம் போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்தப் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனிவரும் காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து, கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

நீதியும் நேர்மையும் தவறாமல் நடுநிலையோடு சிந்தித்து, தர்மத்தின் பக்கம் நிற்கும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது. எப்போதும் இல்லாத வகையில் தொடர் தோல்விகளால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நடுநிலையோடு எல்லோரையும் அரவணைத்து, கழகத்தை மூத்த தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் எம்.ஜி.ஆருக்கும், அம்மாவுக்கும் நாம் செய்கிற நன்றிக் கடன்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

கழகத் தொண்டர்களின் ஆதரவோடு பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில் கட்சியின் அடிப்படை சட்டதிட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வழியில் கட்சியை வழிநடத்திச் செல்லவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார்.