Published:Updated:

`வேகமெடுக்கும் குட்கா விசாரணை!’- குமரி கோயில்களை வலம்வரும் முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன்

குட்கா வழக்கு குறித்து அமலாக்கத்துறையின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளருடன் முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் கோயில் கோயிலாகச் சுற்றி வருகிறார்.

முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன்
முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன்

சென்னை செங்குன்றத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் என்பவரது குடோனில் 2016-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய டைரி சிக்கியது. அதில், அரசியல்வாதிகள், காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு நாற்பது கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான பெயர்ப் பட்டியல் இருந்ததாகத் தகவல் வெளியானது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி என 24 பேரின் பெயர்கள் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தன.

பி.சி.அன்பழகனுடன் ராஜேந்திரன்
பி.சி.அன்பழகனுடன் ராஜேந்திரன்

இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முதலில் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு குறித்த அறிக்கை அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட நான்குபேரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.

Vikatan

ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் பதில் கடிதம் மட்டும் அனுப்பியிருந்தார் முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன். மேலும் டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நான்காம் தேதிவரை மகளின் திருமண ஏற்பாடு, கோயில் நிகழ்ச்சிகள், வழிபாடுகளில் கலந்துகொள்வதால் விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.

நித்தியின் ‘ஞான அஞ்சனம்’ - வலைக்குள் விழவைக்கும் வசிய மை

இந்தநிலையில் சினிமா இயக்குநரும் அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளருமான பி.சி.அன்பழகன் ஏற்பாட்டில் கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் இன்று சாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்களில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரனுடன் அவரது மனைவியும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அதற்கு ராஜேந்திரன் மறுத்துவிட்டார். மேலும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும்கூறி தடுத்துவிட்டார். அதேநேரம் அவருடன் சென்ற சிலருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

குட்கா வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளருடன் முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் கோயில் கோயிலாகச் சுற்றி வலம் வருவது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.