ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலுக்கு முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய முயன்ற அர்ச்சர்களிடம், ``தற்போது நான் ஐ.ஜி கிடையாது... இந்த மரியாதையெல்லாம் எனக்கு வேண்டாம்" என மறுத்து பக்தர்களோடு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து கோயிலை வலம் வந்தார். அவரை அறிந்துகொண்ட பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் அவருடன் செல்ஃபி, புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 2,500 உலோக சுவாமி சிலைகளும், அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள உதவி கருவூலகங்களில் சுமார் ஆயிரம் சிலைகளும் கேட்பாரற்று அன்றாடம் வழிபாடின்றி இருக்கின்றன. இந்தச் சிலைகள் அனைத்தும் மூலவ மூர்த்திகளுக்கு இணையாக உள்ள உற்வச மூர்த்திகள். இந்தச் சிலைகளை செய்தது சேர, சோழ, பாண்டியர்கள். தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரம் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன. ஆனால் இவை அரசு சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகளை சிறைக் கைதிகள்போல் அடைத்து வைத்துள்ளனர். இந்தச் சிலைகள் அனைத்தும் ஒவ்வொரு கோயிலுக்கும் சொந்தமானவை. ஆனால், இந்தச் சிலைகளை முறையாகப் பதிவு செய்யாமல் அனாதைபோல் வைத்துள்ளனர்.
திருவிழா நாள்களில் வீதியுலா கொண்டுவருவதற்காக இந்த உற்சவர் சிலைகளை மன்னர்கள் செய்துவைத்துள்ளனர். அரசு சுவாமி விக்ரகங்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைத்து காசு சம்பாதிப்பது ஒருகேவலமான தொழில். இந்தக் கேவலங்கள் வேறு நாடுகளில் நடைபெறலாம், ஆனால் நமது நாட்டில் நடைபெறுவது மிகக் கேவலமான விஷயம். இந்தக் கோயில் மற்றும் சிலைகளுக்கு உரிமையாளர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்தான். தமிழக அரசு அவற்றைப் பாதுகாக்கும் வெறும் மேலாளர்தான். எந்தெந்த நாள்களில், என்னென்ன பூஜைகள் செய்ய வேண்டும், திருவிழாக்கள் எப்போது நடத்த வேண்டும், அதற்கான அர்ச்சகர்கள், மெய்காப்பாளர்கள் அவர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவற்றைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உறுதிப்படுத்திச் சென்றுவிட்டனர். ஆனால் தற்போது அர்ச்சகர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை, மெய்காப்பாளர்கள் மிகக் கொடூரமான நிலையில் உள்ளனர். இது தொடர்ந்தால் இன்னும் 15 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்கள், மெய்காப்பாளர்கள், மங்கள வாத்தியம் இசைப்பவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராமேஸ்வரம் கோயிலில் இருந்த அரியவகை மரத்தினால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்த தேரின் முக்கியச் சிற்பங்களை உடைத்து அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். இன்றுவரை ராமேஸ்வரம் கோயில் தேரின் 21 அழகிய மரச்சிற்பங்கள் அங்கு காட்சிப் பொருளாக இருக்கின்றன. நான் பணியில் இருந்த காலகட்டத்தில்தான் இதைக் கண்டுபிடித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தேன். ஆனால் அவற்றை மீட்பதற்குள் ஓய்வுபெற்றுவிட்டேன்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
கடந்த 1960-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் அரசி குயின் விக்டோரியா இந்தியாவுக்கு வருகை புரிந்தபோது, இங்குள்ள அரசு அந்நாட்டு இளவரசிக்கு தஞ்சை மாவட்டம், சேந்தமங்களம் பகுதியில் உள்ள கோயிலிலிருந்து எடுக்கப்பட்ட அம்பாள் சிலையை அவருக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றனர். அதை எப்படிக் கொடுக்கலாம்?
இனி இதே போன்று எந்த மத்திய அரேசா, மாநில அரசோ, ஜனாதிபதியோ, பிரதமரோ, முதலமைச்சரோ யாராக இருந்தாலும் எந்த தெய்வ விக்ரகத்தையும் நன்கொடையாகக் கொடுப்பதற்கு உரிமையோ, அருகதையோ கிடையாது... இனி எதிர்காலங்களில் அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இதேபோல, நாகை மாவட்டம், செம்பியன்மாதேவி என்ற ஊரில் சோழப்பேரரசின் மிகப்பெரிய அரசியினுடைய 107 செ.மீட்டர் சிலை திருடுபோயிருக்கிறது. அதை அங்குள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். காரணம் அதில் அவர்களுக்குத் தொடர்பு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இது குறித்து வழக்கு பதிவுசெய்து அந்தச் சிலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினோம். அப்போது அந்தச் சிலை யூ.எஸ்-ஸில் உள்ள சிமிச்சோனியன் என்ற ஃபவுன்டேஷனில் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.
ஆனால், அதைக் கொடுப்பதற்கு அந்த ஃபவுன்டேஷன் ரூ.300 கோடி மற்றும் சிலையை அங்கிருந்து இங்கு கொண்டு வருவதற்கான பணத்தைக் கேட்டது. நான் அந்த சிலையை மீட்பதற்குள் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். இதேபோல் தமிழகக் கோயில்களினுடைய பழங்கால 51 நடராஜர் சிலைகளை அமெரிக்காவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலை கடத்தல் பிரிவில் திறமையானவர்களைக் கண்டறிந்து பணி அமர்த்தும் பட்சத்தில் தைரியமானவர்களாக இருந்தால் கடவுளாகப் பார்த்து கொடுப்பார். ஆனால் தமிழக அரசே திறமையில்லாமல் இருக்கும்போது எப்படித் திறமையானவர்களை நியமிப்பார்கள்?
காங்கிரஸ், தி.மு.க., ஜெயலலிதா என 75 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தவர்கள் தமிழகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளைப் பதிவுசெய்யாமலே விட்டுள்ளனர்.
திருவாரூரில் உள்ள இரண்டு சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிறைக் கைதிகள்போல 5 ஆயிரத்து 198 சிலைகளை வைத்திருந்தனர். உயர் நீதிமன்றத்தின் மூலம் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பினேன். அங்கிருந்து தொல்லியல்துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்து ஆறு மாதங்கள் அங்குள்ள சிலைகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
அதில் முதற்கட்டமாக 813 சிலைகளின் ஆய்வறிக்கையை கொடுத்தனர். அதைப் பார்த்து எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவற்றில் 197 விக்ரகங்கள் போலியானவையாக இருந்தன. இவை கடந்த நூறு ஆண்டுகளுக்குள் செய்யப்பட்டவை.

ஆனால், அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை. அதாவது உண்மையான சிலைகள் கடத்தப்பட்டு அதேபோல் சிலைகளை போலியாக வடிவமைத்து உள்ளே வைத்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனின் சிலை கோயிலில் காணவில்லை என்பதால் அப்போது தி.மு.க அரசு நடத்திய ஆயிரம் ஆண்டுவிழாவின்போது, புதிதாக ராஜராஜ சோழன் சிலையை வடிவமைத்து கொண்டு வந்தபோது தொல்லியல்துறை இது தொன்மையான கோயில் என்று கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது. அப்படி கைவினை சிலையாக செய்யப்பட்ட ராஜராஜ சோழன் சிலையை கோயிலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலையில், இந்த 197 கைவினைச் சிலைகள் மட்டும் பாதுகாப்பு மையத்துக்குள் எப்படி வந்தன என்ற கேள்வி எழுகிறது. இந்த ஒவ்வொரு சிலைக்கும் தனித்தனி வழக்கு என 197 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். இந்தச் சிலைகளைக் கண்டறிய 15 ஆண்டுகள்வரை ஆகக்கூடும். இதற்காக தமிழக அரசு சில கோடி வரை செலவு செய்தால் சிலைகளை மீட்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.