Published:Updated:

``மோடியைப் பிடிக்கும் எனச் சொன்னதற்கு காரணம் இதுதான்!'' - விளக்கும் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை

அண்ணாமலை
அண்ணாமலை ( படம்: நா.ராஜமுருகன் )

சமூக வலைதளங்களில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் தாக்குதலுக்குப் பதிலளிக்கிறார் அண்ணாமலை.

சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் உச்சரிக்கும் பெயராக அண்ணாமலை மாறியிருக்கிறது. கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அண்ணாமலை, கடந்த வருடம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பொதுவாழ்வில் நுழைந்தார்.

கர்நாடகாவின் `சிங்கம்' என அழைக்கப்பட்டவர் தற்போது தனது சொந்த ஊரான கரூரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் அரசியல் ரீதியான சில கருத்துகளை அவர் முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, அவரை பா.ஜ.க-வின் ஊதுகுழலாக அடையாளப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவுகள் பறக்கின்றன. அண்ணாமலையின் அரசியல் பார்வையில் தொடங்கி, அவருடைய பொருளாதார பின்புலம் வரையில் அனைத்தும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான விடையை அண்ணாமலையிடமே கேட்டோம்.

அண்ணாமலை
அண்ணாமலை
படம்: நா.ராஜமுருகன்

``உங்களை `சங்கி’ என அடையாளப்படுத்துகிறார்களே?''

``தமிழ்நாடு ஒரு அரசியல் விழிப்புணர்ச்சி உள்ள மாநிலம். சமூக வலைதளங்களின் வீச்சு அதிகரித்த பின்பு, பொதுமக்களிடம் தங்கள் கருத்துகளைப் பகிர்வதற்கான தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், எந்த மாற்றத்துக்கும் தயாராக இல்லை. ஒரு புதிய மாற்றத்தை நான் முன்னெடுத்தால், இங்குள்ள அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்கள்தான் என்னை `சங்கி’ என அடையாளப்படுத்த முயல்கிறார்கள். ஏன், ஒரு புதிய அரசியல் மாற்றத்தை யாரும் முன்வைக்க கூடாதா? புதிய விஷயங்களை பேசுவது குற்றமா? `கருத்துரிமையைப் பறிக்கிறார். தன் கருத்தைத் திணிக்கிறார்’ என பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டும் இவர்கள்தான், இப்போது கருத்துரிமையை காவு கொடுக்கிறார்கள். தமிழக அரசியலில் நான் நுழைந்து, என்னுடைய அரசியல் சித்தாந்தத்தை முன்வைக்கும்போது, இதுசரி, இது தவறு என வாதத்தை முன்வைக்கலாம். அப்போது ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கலாம். ஆனால், இப்போது என்னை `சங்கி’ எனக் குறிவைத்து தாக்குவதற்கு என்ன இருக்கிறது?"

``உங்களை பா.ஜ.க இயக்குவதாகக் கூறப்படுகிறதே?''

``கர்நாடகாவில் 10 வருடம் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியபோது, பா.ஜ.க எங்கே பலமாக இருக்கிறதோ அங்கேதான் பணியாற்றினேன். அவர்கள் பலமாக இருக்கும் பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பதால், அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். இப்பிரச்னைகளைக் களைவதற்காக சிக்மகளூரிலும் உடுப்பியிலும் என்னை காங்கிரஸ் கட்சியின் முதல்வரான சித்தராமையா பணியமர்த்தினார். பெங்களூரில் ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடியபோது அதை ஒடுக்குவதற்காக என்னை பிரத்யேகமாக பெங்களூருக்குப் பணிமாறுதல் செய்தவர் அப்போதைய மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் முதல்வரான ஹெச்.டி.குமாரசாமி.

அண்ணாமலை
அண்ணாமலை
படம்: நா.ராஜமுருகன்

பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் ஒரே ஒருமுறை மட்டும் ராம்நகரா எஸ்.பி.யாகப் பணியமர்த்தினார்கள். எடியூரப்பாவின் ஆட்சி கவிழ்ந்ததால், அங்கேயிருந்து நான் மாற்றப்பட்டேன். ஆக, முக்கியப் பொறுப்புகளைத் தந்து என்னைப் பணியாற்ற வைத்தது பா.ஜ.க அரசு அல்ல. பா.ஜ.க என் பின்புலத்தில் இருந்திருந்தால், முக்கிய பதவிகளில் நான் கர்நாடகாவில் அமர்ந்திருக்கலாமே. அல்லது தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கலாமே. அப்படி எதுவும் நடக்கவில்லையே. ஒரு தலைவராக பிரதமர் மோடியை எனக்குப் பிடிக்கும். இதைச் சொல்வதால் நான் பா.ஜ.க-வின் ஊதுகுழலா?''

மன்கி பாத்: `கார்கில் தினம் டு சுதந்திர தினம்!’ - பிரதமர் மோடி உரை
என்னிடம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து இருப்பதாகக் கூறுபவர்கள், அதற்கான ஆதாரத்தை வெளியிடலாமே. பொதுமக்களை ஏமாளிகள் என நினைத்து யாரும் வாய்க்கு வந்ததைக் கூற முடியாது. அவர்கள் விழிப்படைந்து பல காலம் ஆகிவிட்டது.
- அண்ணாமலை

``உங்களைக் குறிவைத்து தாக்குவதாகக் கூறுகிறீர்களே, அதற்கு என்ன காரணமாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?''

``அரசியல் ரீதியான எந்த மாற்றத்துக்கும் தயாராக இல்லாத ஒரு கும்பல், என்னைக் குறிவைத்துத் தாக்குவதை உணர்கிறேன். இத்தனை நாள் இங்கு நடைபெற்ற வாரிசு அரசியல் போதும் எனக் கூறுகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது. இது பிடிக்காத ஒரு கும்பல் என்னைத் தவறாகச் சித்திரித்து, குறிவைத்து தாக்குகிறது. ஒரு விவசாயியை நான் தாக்குவதாக ஒருவீடியோ சமூக வலைதளங்களில் சுற்றுகிறது. கர்நாடகாவில் நான் பணிபுரிந்தபோது, என் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை நான்கு பேர் அடித்து வீட்டிக்குள் சிறைவைத்தனர். அந்த காவல் அதிகாரியை மீட்கப் போனபோதுதான் அங்குள்ளவர்களுடன் பிரச்னை ஏற்பட்டது. ஒரு காவல்துறை அதிகாரியாக என்ன தர்மத்தை நிலைநாட்ட வேண்டுமோ, அதைத்தான் அப்போது நான் செய்தேன். அதை அப்படியே திரித்து, நான் ஏதோ விவசாயிகளைத் தாக்குவதாக இப்போது வீடியோ வெளியிடுகிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை
படம்: நா.ராஜமுருகன்

இந்தத் தாக்குதல்களை எல்லாம் நான் ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்டவன். தோட்டாக்களுக்கே பயப்படாதவன், இதற்கா பயப்படப் போகிறேன். யூடியூப் பற்றிய விமர்சன வீடியோக்களை நீக்கச் சொல்லி, என்னுடைய ஆதரவாளர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் சட்ட வல்லுநர்கள் குழு இ-மெயில் அனுப்பி மிரட்டியதாகச் சிலர் கூறுகிறார்கள். ஆதாரம் இருந்தால் போலீஸுக்கு புகார் கொடுக்கலாமே. அந்த `லீகல் டீம்’ யாரென்பதை நானும் பார்க்க ஆசைப்படுகிறேன்.''

`` `வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்துவிட்டார்’ என உங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?''

``எனக்கு மதுரையில் வீடு இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் நடக்கிறது. அந்த வீட்டின் முகவரி இருந்தால் தரச் சொல்லுங்கள். நானும் போய் பார்க்க ஆசைப்படுகிறேன். அதேபோல பல ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகக் கூறுகிறார்கள். என்னுடைய 10 வருட போலீஸ் வாழ்க்கையில் எந்தத் தவறும் நான் செய்ததில்லை. ஒரு சிறு களங்கம்கூட என்மீது கற்பிக்க முடியாது. என்னுடைய சொந்த சம்பாத்தியம், என் குடும்பத்தாரின் சொத்து இவற்றை வைத்துதான் தற்போது விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து இருப்பதாகக் கூறுபவர்கள், அதற்கான ஆதாரத்தை வெளியிடலாமே. பொதுமக்களை ஏமாளிகள் என நினைத்து யாரும் வாய்க்கு வந்ததைக் கூற முடியாது. அவர்கள் விழிப்படைந்து பல காலம் ஆகிவிட்டது.''

அண்ணாமலை
அண்ணாமலை
படம்: நா.ராஜமுருகன்

`` `ஐ.பி.எஸ் படித்துவிட்டு ஏன் அரசியலுக்கு வருகிறார். ஐ.பி.எஸ்ஸும் ஒரு சமூக சேவைதானே. அதிலேயே தொடர்ந்திருக்கலாமே?’ எனும் விமர்சனம் குறித்து?"

``அரசாங்கம் எடுக்கும் கொள்கை முடிவுகளை அமல்படுத்தும் பணி ஐ.பி.எஸ் அதிகாரியுடையது. ஆனால், இங்கு கொள்கை முடிவுகளே தவறாக இருக்கிறது. அதை மாற்றுவதற்காகத்தான் அரசியலுக்குள் வர விரும்பினேன். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக ஏ.சி அறையில் எனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை வேலை வாங்கிக் கொண்டு சுகபோகமாக என்னால் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

கிராமத்திலுள்ளவர்கள் ஒரு பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டுமென்றால் முதலில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பதிய வேண்டும். இதை வைத்து அப்பகுதியிலுள்ள முனிசிபாலிட்டியில் பிறப்புச் சான்றிதழ் தருவார்கள். இதற்கு ஒருமாதம் ஆகும். அந்த பிறப்புச் சான்றிதழ் ஆங்கிலத்தில் வேண்டுமென்றால், அதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதெற்கெல்லாம் ஆகும் செலவு, நேர விரயத்தை கணக்கிட்டுப் பாருங்கள். இந்தியாவிலேயே பிறப்புச் சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் பெறத்தான் அதிகமாக லஞ்சம் அளிக்கப்படுகிறது. இச்சான்றிதழ்களைப் பெற டிஜிட்டல் கையெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எளிமையாக்கலாம். லஞ்சத்தைக் கட்டுப்படுத்தலாமே. இம்மாற்றத்தை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக என்னால் உருவாக்க முடியுமா? அதற்காகத்தான் அரசியலுக்கு வர விரும்புகிறேன். நிதிஷ்குமார், யஷ்வந்த் சின்ஹா, அரவிந்த் கெஜ்ரிவால் எனப் பலரும் அரசுப் பதவியில் இருந்து பிற்பாடு அரசியலுக்கு வந்தவர்கள்தாம். ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து எம்.பி ஆனவர்கள் நிறைய பேர் உள்ளனர். அரசுப் பதவியில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருக்கு அரசாங்க செயல்பாடுகள் நிச்சயம் புரிந்திருக்கும். மாற்றத்தை நிச்சயமாக உருவாக்கிட முடியும்."

`அரசாங்கப் பதவியில் இருப்பவர்கள் அதிலேயேதான் இருக்க வேண்டும். நான் 30 வருஷமாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு பின்னால் என் மகன், பேரன்தான் வர வேண்டும்’ என்று அரசியல் செய்வதை இங்குதான் பார்க்கிறேன். என்னுடைய கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், `உன்னை அரசியலுக்கு உள்ளேயே விடமாட்டோம்’ எனச் சூழ்ந்து கொண்டு தாக்குவது என்னமாதிரியான மனோபாவம்? சில போலி ட்விட்டர் கணக்குகள், நான்கு யூடியூப் சேனல்களை வைத்துக்கொண்டு என்னைப் பற்றித் தவறான பிரசாரத்தை கட்டமைத்துவிட்டால், மக்கள் நம்பிவிடுவார்களா. இல்லை, நான்தான் அமைதியாக இருந்துவிடுவேனா?
- அண்ணாமலை

``தமிழகத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?''

``இப்போதைக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஏதும் இல்லை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் சமூக மாற்றத்தை விட, அரசியல் மாற்றமே தமிழகத்துக்குத் தேவைப்படுவதாக எனக்குத் தெரிகிறது. விவசாயம் செய்ய வந்த என்னை, அரசியலுக்கு கொண்டு வந்தே தீருவேன் என ஒரு கும்பல் இரவு பகலாக முயன்றால் என்ன செய்வது. இன்னும் எத்தனை காலத்துக்கு இவர்கள் மக்களை ஏமாற்றப் போகிறார்கள்? மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். காலம் எனக்கு என்ன கட்டளையிடுகிறதோ, அதை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.''

அடுத்த கட்டுரைக்கு