மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரைச் சேர்ந்தவர் உத்தம் பிரகாஷ். சிவசேனாவைச் சேர்ந்த இவர், சிவசேனா-பா.ஜக கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது அமைச்சராக இருந்தார். 2012-ம் ஆண்டு உத்தம் பிரகாஷுக்கு 37 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். அதோடு கத்தியைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தார் எனக் கூறப்படுகிறது. பிரச்னையை முடித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உத்தம் பிரகாஷ் காசோலை கொடுத்தார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதுவும் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து, போலீஸில் புகார் செய்யப்போவதாக அந்தப் பெண் தெரிவித்தார். இதனால் உத்தம் பிரகாஷ், அவரின் உதவியாளர்கள் இணைந்து அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.
இது குறித்து அந்தப் பெண் தற்போது போலீஸில் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் உத்தம் பிரகாஷ் உட்பட நான்கு பேர்மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டியது உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். 1994-99-ம் ஆண்டு வரை உத்தம் பிரகாஷ் சோலாப்பூர் எம்.எல்.ஏ-வாக இருந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

65 வயதாகும் உத்தம் பிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்ததால் பாதிக்கப்பட்ட பெண் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்திருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருவதாகவும், விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் கணேஷ் நாயக், தனஞ்சே முண்டே ஆகியோரும் இதே போன்ற குற்றச்சாட்டுக்களைச் சந்தித்திருக்கின்றனர்.