மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், அமைச்சர் அனில் தேஷ்முக் மீது லஞ்ச புகார் கூறி முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தின் நகலை மத்திய அரசுக்கும் அனுப்பி இருந்தார். மும்பையில் உள்ள பீர் பார்களில் ஒவ்வொரு மாதமும் நூறு கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வசூலித்து கொடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அனில் தேஷ்முக் உத்தரவிட்டார் என்று பரம்பீர் சிங் குற்றம்சாட்டியிருந்தார்.

மும்பை உயர் நீதிமன்றம் இது தொடர்பான மனுவை விசாரித்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் கடந்த மே 11-ம் தேதி புதிய வழக்கை பதிவுசெய்து விசாரணைக்கு ஆஜரான அனில் தேஷ்முக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி கைதுசெய்தனர்.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையிலிருந்த அனில் தேஷ்முக் தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மாதம் 12-ம் தேதி அனில் தேஷ்முக்குக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதோடு சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வசதியாக தன் உத்தரவை உயர் நீதிமன்றம் 10 நாள்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. சி.பி.ஐ தரப்பில் கடந்த 16-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில் உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால் தங்களது மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, எனவே ஜாமீன் உத்தரவை மேலும் சில நாள்களுக்கு அமல்படுத்துவதை தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றமும் 27-ம் தேதி வரை தீர்ப்பை அமல்படுத்துவதை தள்ளிவைத்தது. ஆனால் செவ்வாய்கிழமை மீண்டும் சி.பி.ஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம், `உச்ச நீதிமன்றம் விடுமுறை முடிந்து திறக்கப்படும் வரை அனில் தேஷ்முக் ஜாமீன் உத்தரவை அமல்படுத்துவதை தள்ளிவைக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அனில் தேஷ்முக் தரப்பில் வழக்கறிஞர் அனிகேத் ஆஜராகி `ஜாமீன் 12-ம் தேதியே கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் விடுமுறை தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை காத்திருந்து மனுவை தாக்கல் செய்யவேண்டிய அவசியம் என்ன?' என்று கேட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டநீதிமன்றம்,` ஜாமீன் உத்தரவை அமல்படுத்த மேற்கொண்டு தடைவிதிக்க முடியாது' என்று தெரிவித்துவிட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் அனில் தேஷ்முக் ஆர்தர் ரோடு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் உட்பட பலரும் நேரில் சென்று வரவேற்றனர். தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் அனில் தேஷ்முக்கை வரவேற்க சிறை முன்பு கூடியிருந்தனர்.
அனில் தேஷ்முக்கை வரவேற்க அஜித் பவாரும், ஜெயந்த் பாட்டீலும், நாக்பூரிலிருந்து அரசு விமானத்தில் மும்பை வந்தனர். அவர்கள் மும்பையில் அனில் தேஷ்முக்கை வரவேற்றுவிட்டு மீண்டும் நாக்பூருக்கு அரசு விமானத்தில் சென்றனர். நாக்பூரில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.