Published:Updated:

`பட்ஜெட், அதன் அர்த்தங்களை இழந்துவிட்டது!' - ஆலோசனைக் கூட்டத்தை விமர்சித்த முன்னாள் அமைச்சர்

நிதி அமைச்சர் இல்லாமல் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டமா?’’ போன்ற கேப்ஷன்களுடன் புகைப்படங்களைப் பகிர்ந்து, நெட்டிசன்கள் பதிவுசெய்துவருகின்றனர்.

நிதி அமைச்சர்
நிதி அமைச்சர்

இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சில மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், சி.இ.ஓ அமிதாப் காந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்
பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்

2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 1-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தொடர்பாக அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

பட்ஜெட் தொடர்பாக மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவிலிருக்கும் 130 கோடி மக்களுக்கும் தேவையான விஷயங்களைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச்செல்வதாகவும் இருக்கும். மத்திய பட்ஜெட் தொடர்பாக அரசு விவாதித்து வருகிறது. பங்குகளை வைத்திருப்பவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியும்வருகிறது. பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை மக்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ``உண்மையில் நாம் வீழ்ச்சியை சந்தித்துவருகிறோம். இந்தப் பொருளாதார மந்தநிலை மிகவும் மோசமானது. எனவே, பட்ஜெட் அதன் அனைத்து அர்த்தங்களையும் இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

பட்ஜெட் தொடர்பாக நடந்த கூட்டத்தின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லாததைக் கவனித்த நெட்டிசன்கள், ``நிர்மலா சீதாராமன் எங்கே? பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. ஆனால், நிதி அமைச்சர் இல்லை. நிதி அமைச்சர் இல்லாமல் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டமா?’’ போன்ற கேப்ஷன்களுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `` நிதி அமைச்சர் எங்கே? அல்லது நிதி அமைச்சர் என ஒருவர் இருப்பதை மறந்துவிட்டார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், டெல்லியிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் அலுவலர்கள், செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் சில உறுப்பினர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதங்கள் நடைபெற்றுவருவதாகப் பதிவுசெய்துள்ளார்.