அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக சி.வி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கடந்த 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தை சூறையாடி, முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். ஓபிஎஸ் தலைமையில் 300 பேர் கொண்ட ரெளடிகள், சமூக விரோதிகள், குண்டர்களின் துணையோடு, அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருள்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருள்கள் ஓபிஎஸ் வந்த வாகனத்தில், எடுத்து செல்லப்பட்டன.
ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்தவர். தலைமை கழகத்தில் அவர் அமர்ந்து பணியாற்றிய அந்த அறை பூட்டியது பூட்டிய படியே இருக்கிறது. ஆனால் அந்த கதவை மட்டும் எட்டி எட்டி உதைத்து உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். ஓபிஎஸ் அந்த உடைத்த கதவுக்குள்ளே நுழைந்து உள்ளே சென்று அமர்ந்திருக்கிறார். அவருக்கு எப்படி மனம் வந்தது. இன்னும் அதிமுகவின் தொண்டன் என சொல்லிக் கொள்வதற்கு ஓபிஎஸ்-க்கு வெட்கமாக இல்லையா???

அதிமுக-வில் பெரும்பான்மையை இழந்து தொண்டர்களின் நன்மதிப்பை இழந்தவர் ஓபிஎஸ். தலைமைக் கழகத்தை உடைத்து சீல் வைப்பதற்கு காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். காவல்துறையின் முழு ஒத்துழைப்போடும், பாதுகாப்போடும் அத்தனை சம்பவங்களும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தகுதியை ஸ்டாலின் இழந்திருக்கிறார். எங்கே பார்த்தாலும் கலவரம். போதை நாடாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு மோசமான சம்பவம் இடம்பெறவில்லை. ஆவணங்களை எடுத்துச் சென்ற ஓபிஎஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
