வணிகர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில், சென்னையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. அதனால் சட்ட விரோதமான செயல்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. போதைப்பொருள்களான கஞ்சா, ஹெராயின் போன்றவை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதனால், முதலில் பாதிக்கப்படுவது வணிகர்கள்தான். போதை ஆசாமிகள் வணிகர்களைத்தான் தாக்கிப் பிரச்னை செய்கிறார்கள். இதை முதல்வர்தான் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. இதைச் சரிசெய்ய ஸ்டாலினால் முடியாது. ஏனென்றால், அவர் நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதல்வராக, ரிமோட் முதல்வராக இருக்கிறார். எதுவும் தெரியாதவராகவும் இருக்கிறார். அதனால் தமிழ்நாடு மிகவும் சிரமப்படுகிறது.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவை அதிகரித்து சர்வ சாதாரணமாக நடந்துவருகின்றன. முதல்வர் அமைச்சரவையில் சில மாற்றம் கொண்டுவருவதாக இருந்தால், ஒட்டுமொத்த அமைச்சரவையையும்தான் மாற்ற வேண்டும். மேலும், ஸ்டாலினும் ராஜினாமா செய்ய வேண்டும். அதைத்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்க்கிறது. தி.மு.க செய்துகொண்டிருப்பது `திராவிட மாடல்’ ஆட்சியல்ல. `திராவக மாடல்’ ஆட்சி. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

அது அ.தி.மு.க ஆட்சியில்தான் இருந்தது. உதாரணமாக, தொழிற்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்திலும், இன்னும் வேங்கைவயல் விவகார குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, `திராவிட மாடல்’ எனச் சொல்வதற்கே அவர்களுக்குத் தகுதி கிடையாது. தமிழ்நாட்டுக்கு இந்த `திராவக மாடல்’ அரசு கெடுதி. ஆளுநர் நீட் போன்ற நல்ல விஷயங்களுக்கான மசோதாவை உடனே ஒப்புதல் அளித்தும், உள்நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை பகுத்துப்பார்த்து நிறுத்திவைக்கவும் வேண்டும்.
சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக இந்த தி.மு.க அரசுமீது குற்றச்சாட்டியிருப்பது சாதாரண நபர் கிடையாது. ஆளும் அரசின் மீது பொறுப்பில் இருக்கும் ஆளுநர். பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களும், போதைப்பொருள்களும் இலகுவாக தமிழ்நாட்டில் நுழைவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, ஆளுநர் இதுபோல தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்காமல், 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும்.

அப்படிச் செய்தால் மட்டுமே ஆளுநர் தன்னுடைய கடமையைச் செய்வதாக ஏற்றுக்கொள்வோம். தமிழ்நாட்டின் கல்வித்தரம் எங்கள் ஆட்சியில் சிறப்பாக இருந்தது. மத்தியில் கூட்டணியில் இருந்த தி.மு.க., இந்திரா காந்தி பொதுப்பட்டியலுக்கு மாற்றிய கல்வியை ஏன் பொதுப்பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரவில்லை?" எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.