Published:Updated:

“சசிகலா போன் பண்ணுனா ராங்நம்பர்னு சொல்லிடுவேன்!”

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

என் வாழ்க்கையில நடக்குற விஷயங்கள் எல்லாத்தையும் நன்மைக் கேன்னு எடுத்துக்குறேன். மக்களோட அன்பு எனக்கு எப்பவும் இருக்கு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தினமும் ஷார்ப்பாக மீடியாவை அழைத்துப் பேசுவதால் ‘பதினோரு மணி ஜெயக்குமார்’ என்ற அடைமொழியோடு வலம்வந்தவர். ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வெற்றியைக் கைநழுவ விட்ட சோகத்தில் இருப்பார் என்ற நினைப்போடு சென்னைப் பட்டினப்பாக்கம் வீட்டில் அவரைச் சந்தித்தால், மனிதர் குதூகலத்தோடு வரவேற்கிறார்.

“கேஷுவல் பேட்டிதானே? பனியன் ஷார்ட்ஸோட வரவா... இன்னும் கேஷுவல்னா டூ பீஸ்னு ட்ரோல் பண்ணிடப்போறாங்க பயலுக!” எனத் திரிகொளுத்தி, சிரிப்பு வெடி பற்ற வைக்கிறார்.

“பாட்டு, டான்ஸ், சமையல்னு பிரசாரத்துல என்னென்னவோ பண்ணுனீங்க. ஆனாலும் தோல்வி அடைஞ்சிட்டீங்களே?”

“என் வாழ்க்கையில நடக்குற விஷயங்கள் எல்லாத்தையும் நன்மைக் கேன்னு எடுத்துக்குறேன். மக்களோட அன்பு எனக்கு எப்பவும் இருக்கு. யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை இது. தோத்ததா நினைக்கலை. இப்பவும் தொகுதி மக்கள்கிட்ட நல்ல பெயர் சம்பாதிச்சிருக்கேன். நல்லது கெட்டது எல்லாத்துக்கும் போறேன். தொகுதியில என் தலைமையில கல்யாணம் பண்ணினவங்களோட புள்ளைங்களுக்கு இப்ப கல்யாணத்தைத் தலைமையேற்று நடத்தி வெச்சிட்டு இருக்கேன். மக்கள் அதே பாசத்தோடதான் இருக்காங்க.

25 வருஷமா வெள்ளிவிழா கண்ட சட்டமன்ற உறுப்பினரா ஒரே தொகுதியில இருந்திருக்கேன். 1991-ல அம்மா அவர்களால அமைச்சரா அடையாளம் காட்டப்பட்டப்போ எனக்கு வெறும் 31 வயசு. ‘பேபி ஆஃப் தி கேபினட்’ நான் தான். நிதியமைச்சர் உள்ளிட்ட எல்லாப் பதவிகளையும் அலங்கரிச்சிருக்கேன். 2012-ல அம்மா ஆட்சியில நான் ஸ்பீக்கரா இருந்தப்போ அவைக்குறிப்புல பார்த்தா, என் பேச்சை பிரத்யேகமா சுவாரஸ்யமா இருந்துச்சுன்னு சொல்வாங்க. புள்ளிவிவரங்கள், சிலேடை, பாட்டுன்னு அவையை ரொம்ப சுவாரசியமா கொண்டு போனதா மாற்றுக்கட்சியினரும் சொல்வாங்க. மதுரை சி.பி.எம் உறுப்பினர் அண்ணாதுரையே அவைக்குறிப்புல, ‘ஸ்பீக்கர் இருக்குறவரைக்கும் எங்களுக்கு சுகர் வராது!’ன்னு சொல்லியிருக்கார். மீன்வளத்துறை பவர்ஃபுல்லான மினிஸ்ட்ரி இல்லைன்னு சொல்வாங்க. ஆனா, எந்தத்துறையில இருந்தாலும் மக்கள் பணி செஞ்சிட்டுதான் இருந்தேன். இப்பவும் செய்றேன். இனிமேலும் செய்வேன்!”

 “சசிகலா போன் பண்ணுனா ராங்நம்பர்னு சொல்லிடுவேன்!”

“நீங்க ஒரு வழக்கறிஞர்... ஆங்கில மொழிப்புலமை உள்ளவர். இந்திய யூனியனை தமிழ்ல மொழிபெயர்த்துச் சொல்லுங்க. புதுச்சேரில இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஒன்றியப் பரப்புன்னுதான் ஆளுநர் பதவிப்பிரமாணம் செஞ்சு வெச்சாங்க. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?”

(சிரிக்கிறார்) ‘‘அரசியல் சாசனத்துல என்ன இருக்கோ, அதன்படிதான் ஆளுநர் பதவிப்பிரமாணம் செஞ்சு வெச்சிருக்காங்க. அந்த வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் சொல்லவா... மத்தியில கூட்டாட்சி... மாநிலத்துல சுயாட்சி..!”

“சசிகலா யாரை வேணும்னாலும் சி.எம் ஆக்கியிருக்கலாம் என்ற சூழல்ல இருந்தப்போ ஒருவேளை உங்களை சி.எம் ஆக்கியிருந்தா இந்நேரம் அ.தி.மு.க தோத்துருக்காதோ?”

“சிண்டு முடிஞ்சிவிடப் பார்க்குறீங்களா..? அனுமானமா கேட்டா என்ன சொல்ல முடியும்? அப்படில்லாம் இல்லைங்க. நமக்கு என்ன கிடைக்கணுமோ அதுதான் கிடைக்கும். கட்சியோட நன்மைதான் முக்கியம். இப்போ எல்லாம் நல்லபடியாத்தான் போய்க்கிட்டு இருக்கு. இடையிலதான் சில தீயசக்திகள் சதி செஞ்சாங்க. ஆனால், இது ஒரு இரும்புக் கோட்டைன்னு இப்ப புரிஞ்சிருப்பாங்க!”

“அப்படின்னா போன்கால் உங்களுக்கு வருதா சார்?”

“எந்தக் காலத்துலயும் எனக்கு வந்ததில்லை. நான் மினிஸ்டரா முதன்முதலா ஆனப்பவே ஒரு குரூப், ‘சுதாகரன், திவாகரன்னு போய் மன்னார்குடி ஆட்களைப் பாருங்க’ன்னு சொல்வாங்க. பதவில நான் இல்லாதப்ப, ‘சசிகலாவைப் போய்ப் பாருங்க’ன்னு சொல்றவங்ககிட்ட ‘அப்படி ஒரு பதவி தேவையில்லை’ன்னு சொல்லித் திருப்பி அனுப்பி விட்ருக்கேன். அது தப்புன்னா அம்மா என்னைத் திரும்பவும் கூப்பிட்டு அமைச்சராக்கி அழகு பார்த்திருக்க மாட்டாங்க. நான் கடவுளையும் அம்மாவையும் எப்பவும் நம்புவேன். குறுக்கு வழி எனக்கு செட் ஆகாது. ஒருவேளை தப்பித்தவறி போன்கால் வந்தால், ‘ஸாரி, ராங் நம்பர்’னு சொல்லிடுவேன்!”

 “சசிகலா போன் பண்ணுனா ராங்நம்பர்னு சொல்லிடுவேன்!”

“பொதுக்குழு செயற்குழுக் கூட்டத்துக்கு உள்ளே அடிச்சிக்கிட்டாலும் வெளியே நீங்க மட்டும் சிரித்தபடி ‘அம்மாவழில அமைதியா எல்லாம் நடந்தது’ன்னு ஒண்ணுமே நடக்காத மாதிரி கூலா பேட்டி கொடுக்குறீங்க. அது எப்படி சார்?”

“சிரிப்பு என்னோட அடையாளம். மனசுல இருக்குறதைப் பேசுறேன். சரியாவும் சொல்லிடுவேன். இப்ப எம்.எல்.ஏ-வா இல்லாட்டியும் என் கருத்தை மதிக்கிறாங்கன்னா, நான் சரியா பேசுறேன்னுதானே அர்த்தம். கட்சிக்குள்ள நடக்குறது உள்கட்சி விஷயம். அதை வெளில வந்து பேச முடியாது. கட்சியோட நலனுக்காகத்தான் நான் அப்படிப் பேசுறேன். என்ன நடந்தாலும் கூலா பேசுறதும் ஒரு கலை!”

“நீங்க ஒரு வழக்கறிஞர்... A2 குற்றவாளி, A3 குற்றவாளி, A4 குற்றவாளி. ஆனால், A1 மட்டும் குற்றவாளி இல்லையா? அது எப்படி?”

“நீங்க யாரைச் சொல்றீங் கன்னு புரியுது. ஒருத்தர் மறைஞ் சிட்டாங் கன்னா அவங்களைப் பத்திப் பேசுறது தப்பு. சுப்ரீம் கோர்ட்டே, ‘ஒருவர் மறைஞ் சிட்டதால அவங்களை வழக்கிலிருந்து விடுவிச் சிடலாம்’னு சொல்லுது. அதனால அப்படிப் பேசுறது தப்பு!”

*****

 “சசிகலா போன் பண்ணுனா ராங்நம்பர்னு சொல்லிடுவேன்!”

“ஆறுமுகசாமி ஆணையம் கரிசனமா, கண்துடைப்பா?”

“இப்ப சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயி ஸ்டேல இருக்கு. கட்சித்தொண்டன்ல ஆரம்பிச்சு மக்கள் வரைக்கும் அம்மா மரணத்தைப்பத்தின உண்மைகள் எல்லோருக்கும் தெரியணும்னு நினைச்சுதான் இந்த ஆணையத்தை முழு மனசோட அமைச்சோம். நிச்சயமா உண்மை வெளிவரும்!”

“தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் வரிசையாக சிறை செல்வார்கள்னு ஸ்டாலினே பிரசாரத்தில் சொன்னார். அதைப்பற்றி...’’

“மடியில கனம் இருக்குறவங்கதான் வழில பயப்படணும். அதனால எந்த பயமும் அ.தி.மு.க-வில் இல்லை!”

“ராணுவக்கட்டுப்பாடுள்ள கட்சியில் முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கஃபீலுக்கு ஒரு நீதி... மணிகண்டனுக்கு ஒரு நீதியா..?”

“நான் விசாரிச்சவரைக்கும், நிலோஃபர் கஃபீல் கட்சிக்குள்ள இருந்துக்கிட்டு கட்சிக்கு எதிரா தேர்தல் வேலை பார்த்திருக்காங்க. சட்டமன்ற உறுப்பினர் செந்தில் கட்சித்தலைமைக்குப் புகாரே கொடுத்திருக்கார். தி.மு.க-வுக்கு வேலை பார்த்தால் நடவடிக்கை எடுக்குறதுதானே முறை. ஆனா, மணிகண்டன் விஷயத்துல கோர்ட்டுக்கு இப்பதான் வழக்கு வந்திருக்கு. குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சு அது நிரூபணமாகணும். அவர் தப்பு செய்திருந்தா கோர்ட் அவரைத் தண்டிக்கணும். குற்றம் நிரூபிக்கப்படலைன்னா அவர் குற்றமற்றவர். வழக்கு நடந்துட்டிருக்குறப்போ அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!”

“பொதுவாழ்க்கைக்கு வர்றவங்க எப்படி இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?”

“அறிஞர் அண்ணா சொன்னமாதிரி மக்களோடு போய், மக்களோடு இருந்து மக்களுக்காக வாழணும். மக்களோடு இருக்குற எல்லோரும் பொதுவாழ்க்கைக்கு வரலாம். புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் அப்படித்தான் வந்தாங்க. மக்களுக்காக வாழ்ந்தாங்க. மக்கள் மனசுல இடம்பிடிச்சாங்க!”

(இதுபோன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார். முழுமையான வீடியோ பேட்டி ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்...)

https://bit.ly/AnandaVikatanYT