Published:Updated:

“மகிழ்ச்சியாகத்தான் கூட்டினோம்... மகிழ்ச்சியாகத்தான் முடித்தோம்!”

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

- ‘வலிக்காமல்’ பேசுகிறார் ஜெயக்குமார்...

“மகிழ்ச்சியாகத்தான் கூட்டினோம்... மகிழ்ச்சியாகத்தான் முடித்தோம்!”

- ‘வலிக்காமல்’ பேசுகிறார் ஜெயக்குமார்...

Published:Updated:
ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

கடந்த வாரம் பெரும் ரகளையுடன் நடந்து முடிந்திருக்கிறது அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். செயற்குழுவிலும் பஞ்சாயத்துகள் ஏராளம். ஆனால், எவ்வளவு நடந்தாலும் வலிக்காததுபோலவே... “மகிழ்ச்சியாகத்தான் கூட்டத்தை முடித்தோம்” என்று சிரிக்காமல் சொல்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்த நிலையில்தான் அவரைச் சந்தித்து அ.தி.மு.க உட்கட்சிப்பூசல்கள், ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா, சென்னை வெள்ளம்... இவற்றைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினோம்...

“அ.தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல்கள் அதிகரித்துக்கொண்டே செல்வதற்குக் காரணம் என்ன?”

“நான்கு பேர் இருக்கும் கட்சியிலேயே நானூறு பிரச்னைகள் எழுகின்றன. அ.தி.மு.க மிகப்பெரிய இயக்கம். அதிலிருக்கும் சகோதரர்களுக்குள் சிறு சிறு பிரச்னைகள் எழலாம். அதற்கு எப்படித் தீர்வு கண்டு, ஒருமித்த கருத்தோடு கட்சியை வழிநடத்துகிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். எங்கள் கட்சியில் அனைத்தும் சுமுகமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன.”

“ஆனால், சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லையே?”

“அந்தக் கூட்டத்தை மகிழ்ச்சியாகத்தான் கூட்டினோம்... மகிழ்ச்சியாகத்தான் பேசினோம்... மகிழ்ச்சியாகத்தான் முடித்தோம். நீங்கள் சொல்வதுபோல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. கட்சிக்குத் தேவையான விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. எங்கள் கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. கோஷ்டிப்பூசலும் இல்லை.”

“ஆனால், அதிகாரப் பரவலாக்குவது பற்றி நீங்களே கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினீர்களாமே... சரி, அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமையில் அதிகாரம் குவிக்கப்பட வேண்டுமா அல்லது அதிகாரப் பரவலாக்கப்பட வேண்டும்?”

“நான் ஒருவன் கருத்து சொல்வதால் கட்சியில் எதுவும் மாறிவிடப் போவதில்லை. கட்சியின் விதிமுறை களுக்கு ஏற்ப கட்சியின் செயற்குழு, பொதுக்குழு எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அப்படித்தான் தற்போது கட்சி கட்டுப் பாட்டுடன் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிலர் ‘ஒற்றைத் தலைமை’ என்று கொடிபிடிப்பதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.”

“சமீபத்தில், ‘அ.தி.மு.க-வின் அடையாளத்தை தி.மு.க அழிக்க நினைக்கிறது’ என்று சொன்னீர்கள்... என்ன காரணம்?”

“வெளிப்பார்வைக்கு ‘எங்களது தர்ம சிந்தனையைப் பாருங்கள்... எங்கள் பெரிய மனதைப் பாருங்கள்’ என்கிறரீதியில் தி.மு.க நடந்துகொள்வதெல்லாம் உலக மகா நடிப்பு. அ.தி.மு.க-வின் அனைத்துத் திட்டங்களையும் முடக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். ‘அம்மா மினி கிளினிக்’கை, ‘முதல்வர் மினி கிளினிக்’ என்று பெயர் மாற்றியது, கலைஞர் உணவகம் தொடங்குவது... என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எங்களது வெற்றிகரமான திட்டங்களை அழிக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோடுதான் தி.மு.க அரசு செய்கிறது.”

“வேதா இல்லம் அரசு உடைமை ஆக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே?”

“அம்மா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்பட வேண்டும் என்பது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம். வேதா இல்லம் எங்களுக்குத் திருக்கோயில். அதற்குச் செயல்வடிவம் கொடுக்க அ.தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கியது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் பின்னணியில் தி.மு.க அரசுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. தடைக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்.”

“மகிழ்ச்சியாகத்தான் கூட்டினோம்... மகிழ்ச்சியாகத்தான் முடித்தோம்!”

“ஆனால், ‘வேதா இல்லத்தில் மட்டுமா ஜெயலலிதா வாழ்ந்தார்... அவர் வாழ்ந்த கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களையும் அரசுடைமை ஆக்குவதுதானே?’ என்று ஜெ.தீபா கேட்டிருக்கிறாரே?”

“அம்மாவின் அதிகாரபூர்வ வீடு வேதா இல்லம்தான். அவர் வாழ்ந்து, மறைந்த இடம் அது. அதனாலேயே மற்ற இடங்களைவிட வேதா இல்லம் எங்களுக்குச் சிறப்பானது.”

“சமீபகாலமாக, ‘தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள்தான்’ என்கிறது பா.ஜ.க. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க-வா, பா.ஜ.க-வா?

“நாங்கள்தான் என்பதில் என்ன சந்தேகம்? சீமானிடம் கேட்டால்கூட ‘நான்தான்’ என்பார்... விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் கேட்டாலும் ‘நாங்கள்தான்’ என்பார்கள். கட்சியைத் தொடங்கிவிட்டு எதுவும் பேசாமலிருக்க முடியுமா? கட்சிக்காரர்களை உற்சாகமாக வைத்திருக்க ஏதாவது சொல்லவேண்டியதுதான்... அதேசமயம், அப்படிச் சொல்லிக் கொண்டே யிருந்தால் அது உண்மையாகிவிடுமா? யார் பலமானவர்கள் என்பதை மக்களே அங்கீகரிக்க வேண்டும். எங்களுக்கு அந்த அங்கீகாரம் எப்போதோ கிடைத்துவிட்டது.”

“அப்படி அங்கீகாரம் பெற்ற உங்கள் கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்குச் செல்கிறார்களே... கூட்டணிக் கட்சிகளுக்குள் இப்படி நடப்பது சரியா?”

“முன்பும் இப்படி நடந்திருக்கிறதுதான். உணர்வுபூர்வமாக அம்மாவை, கட்சியை ஏற்றுக்கொண்டவர்கள் அ.தி.மு.க-வைவிட்டுச் செல்ல மாட்டார்கள். ஆனால், சில ஓடுகாலிகளிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களை நம்பி அ.தி.மு.க இல்லை. அதேபோல கூட்டணிக்கென்று ஒரு தர்மம் இருக்கிறது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.”

“சென்னை வெள்ளத்துக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஊழல்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?”

“மழைக்காலம் தொடங்கும் முன்பாக சென்னையிலிருக்கும் கால்வாய்களைத் தூர்வாரவில்லை. மழைக்காலம் பார்த்து நீண்ட காலமாக பொறுப்பிலிருந்த உதவிப் பொறியாளர்களை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறார்கள். இப்படி நிர்வாகமே செய்யத் தெரியாமல் சென்னையைத் தத்தளிக்க விட்டுவிட்டு, எங்கள்மீது பழியைப் போடுகிறது தி.மு.க அரசு. ஷோ காட்டுவதற்காகவும் புரொமோஷன் கொடுப்பதற்காகவும்தான் தற்போது ஆட்சியே நடத்திக்கொண்டிருக் கிறார்கள். வேலை தெரியவில்லையென்றால் எங்களிடம் கேட்டுக் கற்றுக்கொள்ளலாம். சென்னையைக் காப்பாற்ற நானே ஐடியா கொடுத்திருப்பேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism