தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``தி.மு.க பிரமுகரை தாக்கிய விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை கைது செய்தனர். காவல்துறையினர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் என்னுடைய வீட்டில் அத்துமீறி நுழைந்தனர். இதில் எனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். இது தொடர்பாக காவல்துறை மீது சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன்'' என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் இருக்கும். தமிழ் மொழியின் சிறப்பை பல இடங்களில் பிரதமர் மோடி அடிக்கோடிட்டு காண்பித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளா் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அ.ம.மு.க-வையும், சசிகலாவையும் பிரிக்க முடியாது. மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி மக்களும் அ.தி.மு.க-வின் பின்னால் இருக்கின்றனர்'' என்றார்.
