தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவ்வப்போது திடீரென அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தியவண்ணமாக இருந்துவருகின்றனர். அந்த வகையில், தற்போது 6-வது முன்னாள் அமைச்சராக கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்து, தருமபுரியிலுள்ள அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதலே சோதனையின் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த திடீர் நடவடிக்கை குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், மக்கள் மத்தியில் அவதூறுகளைப் பரப்பி அ.தி.மு.க-வின் வெற்றியைத் தடுக்கும் நோக்கத்துடனேயே தி.மு.க அரசு இது போன்று பொய் வழக்குகளைப் பதிவுசெய்து லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனை நடத்திவருகிறது. தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை இப்படி திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது. தி.மு.க அரசு விடியாத அரசு" என்றார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, தங்கமணி ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.