முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவர் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் காலை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். இவர் 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இதையொட்டி, தற்போது வருமான வரித்துறையினரும் சோதனை மேற்கொண்டுள்ளனர். காமராஜ் வீடு, இடங்களில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு எடப்பாடி உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டுள்ளனர். தற்போது காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர். உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் விட்டு வைக்காமல், எல்லா இடங்களுக்கும் சென்று இவரை கொச்சைப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.
எத்தனை அடக்குமுறை வந்தாலும் அதை நீதிமன்றத்தில் சந்திப்போம். ஜனநாயக கடமையை ஆற்ற விடாமல் செய்த ஒரு ரெளடியை பிடித்துக் கொடுத்ததற்கு என் மீது நான்கு வழக்குகள் போட்டனர். எப்படிப்பட்ட கொடுமையான அரசு தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. கழக முன்னோடிகள் மீது வழக்கு போட்டு அழித்து, ஒழித்து விடலாம் என்று கங்கணம் போட்டுக்கொண்டு செயல்பட்டால், அது பூனை பகல் கனவு கண்டது போல தான் ஆகும். வர இருக்கின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மக்கள் எங்கள் பக்கம் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்'' என்றார்.
