சட்டமன்றத் தேர்தலின்போது தாசில்தாரை தாக்கியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். தி.மு.க தென்மண்டலத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயிருக்கும் வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள், கிராமத்தினருடன் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது அழகிரி ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாகக் கூறி அ.தி.மு.க-வினர் புகார் தெரிவித்ததால், மேலூர் தேர்தல் அலுவலரான தாசில்தார் காளிமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.
இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதோடு அழகிரி உடன் இருந்தவர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 21 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 20 பேர் நேரில் ஆஜராகினர்.
நீதிமன்றம் வந்த அழகிரியை வரவேற்க அவருடைய ஆதராவளர்களும், மிசா பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகளும் வந்திருந்தனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில், மு.க.அழகிரியிடம் தி.மு.க அரசின் செயல்பாடு, உதயநிதி அமைச்சரானது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஆதரவாளர்களிடம் பேசியபடியே காரில் ஏறி சென்றார்.